ஜோசப் டேனியல் ஜெனிக்கே (Joseph Daniel Jaenicke) ஜூலை 27 1759 அன்று பெர்லினில் பிறந்தவர். அக்டோபர் 21, 1787 இல் குருத்துவ பட்டம் பெற்றார். தன்னை மிஷினரியாக அனுப்ப இருந்த எஸ்.பி.சி.கே (SPCK) அமைப்பின் முன் நிற்பதற்காக உடனடியாக இங்கிலாந்து நோக்கி பயணப்பட்டார். நவம்பர் 14 ஆம் தேதி லண்டன் வந்த போதும் கிழக்கிந்திய கம்பெனிக்கும், அரசாங்கத்திற்கும் இடையே துருப்புகளை அனுப்புவது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரை அடுத்த வருடம் மார்ச் வரை அங்கேயே செலவிட வேண்டி வந்தது. மார்ச் 6, 1788 இல் தனது இந்தியா நோக்கிய பயணத்தை துவங்கி ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார்.
"நான் இறங்கிய உடன் திரு.கெரிக்கே (Gericke) அவர்களை ஆரத் தழுவும் விவரிக்க இயலாத ஆனந்தத்தை அடைந்தேன். என் உணர்வுகளால் மேற்கொள்ளப்பட்டேன். என்னால் பேச இயலவில்லை. பல்லக்கில் வேப்பேரிக்கு பயணமானோம். திரு.கெரிக்கே மற்றும் திரு.ஜான் (John) என்னை சந்திக்க அங்கு இருந்தார்கள். மாலையை மகிழ்வுடனும், ஆசிர்வாதமாகவும் இணைந்து செல்வவிட்டோம்." என்று தான் சென்னையில் வந்து இறங்கிய முதல் நாள் குறித்து குறிப்பிடுகிறார் ஜெனிக்கே.
ஜனவரி 27, 1789 இல் டாக்டர்.சூல்ஸ் (Dr.Schulze) அவர்களுக்கு தஞ்சாவூரில் இருந்து ஜெனிக்கே ஒரு கடிதம் எழுதுகிறார். அதிலிருந்து ஒரு சிறு பகுதியை தருகிறேன்.
"செப்டம்பர் 8ஆம் தேதி திரு.ஜான் அவர்களுடன் தரங்கம்பாடி வந்தேன். எங்களை சந்திக்க வந்த மலபார் பள்ளிக் குழந்தைகள் ஒரு தோத்திர பாடலுடன் எங்களை வரவேற்றனர். இது என்னை பாதித்த ஒரு காட்சி. நான் இந்தியா வந்தது காரணமற்றது அல்ல என எண்ணினேன். மிஷினரிகள் வந்திராவிடில் இந்த குழந்தைகள் இப்படி மாறி இருக்க இயலாது. இந்த சிந்தனை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உண்மையாகவே பயனுள்ளவனாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் என்னுள் கொழுந்து விட்டு எரிந்தது."
"நான் வந்த மறுநாள் அன்பிற்குரிய திரு.ஷ்வார்ட்ஸ் (Schwartz) அவர்களை தரங்கம்பாடியில் சந்திக்கும் சிலாக்கியம் கிடைத்தது. அக்டோபர் 9 வரை அங்கிருந்து மலபார் (தமிழ்) மொழியை கற்றேன். நோயுற்று இருந்த மிஷினரி திரு.ஹேகெலுண்ட் (Hagelund) அவர்களை அடிக்கடி சந்தித்து வந்தேன். அவர் மரணத்திலும், அடக்கத்திலும் உடனிருந்தேன். நாங்கள் மிகவும் துயரமடைந்தோம். கடவுள் சகலத்தையும் நன்மைக்கேதுவாக செய்கிறார் என்கிற பார்வை எங்களை ஏதோ ஒரு அளவிற்கு ஆறுதல்படுத்தியது.
ஒரு வரி குறிப்புகள்
ஜோசப் டேனியல் ஜெனிக்கே (1759-1800) பாளையம்கோட்டையில் வசித்த முதல் தரங்கம்பாடி மிஷினரி. ஷ்வார்ட்ஸ் இன் ஆவிக்குரிய மகனாக கருதப்பட்டவர்.
Christian William Gericke , வேப்பேரி மிஷனில் பணியாற்றியவர். 1803 இல் மரணமடைந்தார்.
John, Christoph Samuel (1747-1813)- 42 ஆண்டுகள் இந்தியாவில் வசித்த ஜெர்மானியர். 20 பள்ளிக்கூடங்களை துவங்கியவர். தாவரவியலாளர்.
Dr.Schulze- ஜெனிக்கேவை மிஷினரி ஊழியத்திற்கு ஆயத்தப்படுத்தி அனுப்பிய ஹாலே பல்கலை கழகத்தின் பேராசிரியர். மெட்றாஸ் மிஷனில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
Christian Frederick Schwarz (1726-1798) ஜெர்மனியை சேர்ந்த லுத்தரன் மிஷினரி. சிறந்த மொழியியலாளர். ஆங்கில அரசின் சார்பில் ஹைதர் அலியிடம் சமாதான தூதுவராக சென்றவர். தஞ்சை மன்னன் சரபோஜியின் ஆசிரியர்.
Rubek Hagelund, 1756 இல் டென்மார்க்கில் பிறந்தவர். 1785 இல் இந்தியா அனுப்பப்பட்டு 1786 இல் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். 1788 அக்டோபர் முதல் தேதி தரங்கம்பாடியில் நோயுற்று மரித்துப் போனார்.
உதவிய நூல்:
Memoirs of the Rev. Joseph D. Jaenicke
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக