1790ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ரேனியஸ் ஐயரின் பிறந்த தினம். சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ் என்பது இவரது முழுப் பெயர். மேற்கு பிரசியாவில் உள்ள க்ரொடன்ஸ் கோட்டை இவரது பிறந்த ஊர். பிரசியா இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லை. ஒரு காலகட்டத்தில் ஜெர்மனியின் வரலாற்றை செதுக்குவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தேசம், பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பின் இப்பொழுது, போலந்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இவரது தந்தை ஒதோ ரேனியஸ் பிரசிய ராணுவத்தில் தரைப்படை அதிகாரியாக இருந்தார். சார்லஸ் ரேனியசுக்கு ஆறு வயதிருக்கும்போது மெரின்வெர்டர் என்ற இடத்தில் இவரது தகப்பனார் இறந்து போனார். சார்லஸ் ரேனியசும் , அவரது மூத்த சகோதரன் ஜான் வில்லியம் ரேனியஸும் இளைய சகோதரர் ஆடம் பிரெட்ரிக் ரேனியஸும் , இளைய சகோதரி சோபியா காதரின் ரேனியஸும் இளம் வயதிலேயே தந்தையற்றவர்கள் ஆனார்கள். தந்தைக்குப் பிறகு நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றும் பொறுப்பு அவரது தாயின் தலையில் விழுந்தது. பற்றாக்குறையிலும் தனது தாய் தங்களை அன்போடும் ஆதரவாகவும் கவனித்துக் கொண்ட விதம் பற்றி ரேனியஸ் மிகவும் பெருமித்ததத்தோடு அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.
ரேனியஸ் தனது 14ம் வயதுவரையில் மெரின்வெர்டரில் உள்ள கதீட்ரல் பள்ளியில் படித்தார். பிறகு மூன்று வருடங்கள் கோனிங்ஸ்பெர்க் நகருக்கு அருகிலுள்ள பல்கா என்ற ஊரில் அரசு அதிகாரியாக இருந்த அவருடைய உறவினரின் அலுவலகத்தில் வேலை செய்தார். 1807ம் ஆண்டின் வசந்த காலத்தில் மெமெல் என்ற இடத்துக்கு அருகில் அவரது வயது முதிர்ந்த பெரியப்பா வில்ஹம் ஆண்ட்ரியா ரேனியசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றார். பச்மானில் உள்ள பெரியப்பாவின் எஸ்டேடில் கிடைத்த உபசரிப்பை குறித்து " ஒரு தகப்பனின் அன்போடு நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஒரு மகனுக்குரிய உரிமைகளை அனுபவித்தேன்" என்று எழுதுகிறார் ரேனியஸ். இதே ஊரில் தனது பெரியாப்பாவுடனே அவரது எஸ்டேட்டைக் கவனித்துக்கொண்டு இருந்திருந்தால் ஒருவேளை, , அவரது சொந்த தேசத்தில் கிடைத்தற்கரிய ஒரு வாழ்வாக அவருக்கு அமைந்திருக்கும்.
ரேனியஸ் தனது பெரியப்பாவை பற்றிய பழைய நிகழ்வுகளைப் பேசும்போதெல்லாம் அது பசுமையான நிகழ்வுகளாவாகவே இருந்தன. பச்மன் ஊரில் தான் அனுபவித்த அன்பையும் ,கனிவையும் அவர் எப்போதும் மறந்ததில்லை. எனினும் அந்த சமயம் , அவருக்குள் உறைந்திருந்த "உண்மையான மதம் மற்றும் கறைபடாத வாழ்வு" குறித்த தேடல் மற்ற எல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாகின. அவர் அனுபவித்த நிறைவான இறைவிசுவாசம் அவரை எப்போதும் மன மகிழ்ச்சியாக வைத்திருந்தது. ஒரு இடத்தில் அவர் குறிப்பிடும்போது,
"1807 ஆண்டு வரையிலான என் வாழ்வை திரும்பிப் பார்த்தால், "மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது" என்கிற வேத வசனம் எத்தனை உண்மையானது என்பதை என் வாழ்வின் அனுபவங்கள் ஊடாக அறிய முடிந்தது. நான் வளர வளர என்னுள் இருந்த அசுத்தங்களும் நாளுக்கு நாள் வளர்ந்தன. நான் எனது நிலையைப் புரிந்து கொள்ளவோ, அறிந்துகொள்ளவோ இல்லை. கடவுள் குறித்த சிந்தையின்றி வாழும் உலக இயற்கையின்படி நானும் அதன் இயல்பான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னை அறிந்தவர்களும் என்னோடு தொடர்பு கொண்டிருந்தவர்களும் என்னை நல்லவனாக, உபயோகமானவனாக நினைத்திருந்தார்கள். அவர்கள் புலன்களால் உணர்ந்து கொள்ளக் கூடியவைகளையே அவர்கள் கண்டார்கள். உள்ளிந்திரிங்களை ஆராய்ந்து பார்க்கிறவருக்கு முழுமையாகவும், பரிசுத்த ஆவியினாலே நடத்தப்படுகிறவர்களுக்கு ஓரளவும் சாதாரணர்களுக்கு மறைக்கப்பட்ட இருதயத்தின் ஆழங்களுமே தெரியும்."
----------------------------------------------------------------------
"Memoir of C.T.E. Rhenius, by his son by J. Rhenius" என்கிற நூலை எழுதியது அவரது மகன் J.ரேனியஸ் என்று அந்த நூலில் உள்ளது. இது ரேனியஸ் ஐயரின் இரண்டாவது மகனான யோசியா ரேனியஸ் (Josiah Rhenius) என்று அனுமானிக்கமுடிகிறது. இவர் ரேனியஸ் சென்னையில் இருக்கும் போது 1818 இல் பிறந்த இரண்டாவது குழந்தை. இவருக்கு முன்னர் பிறந்த தியோதேஷியா இரண்டு வயதுக்கு முன்னதாகவே இறந்து விட்டதால், உயிரோடிருந்த குழந்தைகளில் J.ரேனியஸ் தான் மூத்தவர். இஸ்லிங்டனில் இருந்த சி எம் எஸ் பயிற்சி பள்ளியில் பயின்ற இவர், ஸ்காட்லாந்து திருச்சபையில் குருவானவராக பணியாற்றி 1878 இல் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்கில் காலமானார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதர்கள் முன் நீதிமானாக நடந்து கொள்ளுவதால், இறைவனுக்கு ஏற்புடையவனாக மாறமுடியாது என்பதை புரிந்து கொண்ட ரேனியஸ் தன்னைத் தான் அறிந்துகொள்வதில் படிப்படியாக நடத்தப்பட்டார். உலக ஞானத்துக்கும் , கிறிஸ்துவின் சிந்தைக்கும் நடுவே ஆவியில் நிகழ்ந்த பல்வேறு போராட்டங்களுக்குப் பின், பழைய மனிதனுக்கும் புதுப்பிக்கப்பட்ட மனிதனுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் முடிவில், நீங்காத மன அமைதியில் மகிழ்ந்திருக்கும் அனுபவத்தை ரேனியஸ் பெற்றார். இந்த மாற்றம் பொதுவில் நடப்பது போல படிப்படியாகவோ, நுட்பமாகவோ நிகழாமல் , வல்லமையோடும் , தெளிவோடும் நிகழ்ந்தது. இதனால் , தன்னுள் நிகழ்ந்த மாற்றம் குறித்தோ , அது ஏற்ற காலத்தில் நிகழ்ந்தது என்பது குறித்தோ எந்த சந்தேகமும் அவருள் இல்லாமல் போயிற்று . மத வெறி என்று உலகத்தாரால் குற்றஞ்சாட்டப்படும் ஆபத்து இருந்தும் , கருத்துருவாக்கத்தில் , நம்பிக்கையில், ஆளுமையில் சுருங்கச் சொன்னால் ஒரு முழு மனிதனுள் மெய்யாகவே ஒரு பெரு மாற்றம் நிகழ்ந்த சம்பவம் இது. இந்த மாற்றம் பரிசுத்த ஆவியின் செயலாற்றலால் மட்டுமே நிகழ்ந்திருக்க முடியும். இது குறித்து ரேனியஸ் விசுவாசித்த அல்லது ஒப்புக் கொண்டபடி "மனிதர்களால் அல்ல , இறைவனால்" சாத்தியப்பட்டது.
பின்னாட்களில் திரு.ரேனியஸின் ஆரம்பகால அனுபவத்தை குறித்து கவனிக்கும் போது அவர் இவ்வாறு எழுதுவதை காண முடிகிறது.
" தெய்வீக காரியங்கள் குறித்த அறிவில் நான் நடத்தப்பட்டதால் 1807 ம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. இந்த சூழ்நிலையை நான் விளக்க முற்பட்டால் அது நீண்டதாக இருக்கும். நம் ரட்சகரின் ஒரு வசனம் நிறைவேறுவதை என் சொந்த அனுபவத்தில் மறுபடியும் கண்டேன். "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்கிற வசனமும் ‘என்னைப் பின்பற்றி வா‘ என்ற கட்டளையுமே என் ஆத்துமாவை மீட்கும் மாற்றத்தை என்னுள் கொண்டு வர காரணாமாயிருந்தன . கிறிஸ்து யேசுவில் இருந்த , ஆண்டவரின் கிருபை என் உள்ளத்திலும் வாசம் செய்ய துவங்கி, சுவிசேஷத்தின் தூய ஒளியில் என்னை தெளிவுபடுத்தியது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." என்கிற யோவான் 3 ஆம் அதிகார வசனத்தை என்னால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடிந்தது .
நித்திய வாழ்வும் , மெய்யான தேவனுமாக எனக்கு வெளிப்படுத்திய கிறிஸ்து ஏசுவின் ஆவியானவர் என் இருதயத்தில் திறந்த வாசலை கண்டதோடு உறுதியான முடிவோடு அவரைப் பின்பற்றும் ஈர்ப்பைத் தந்தார்.
ஒவ்வொரு நாளும் நான் என்னையும், என் தீவிர பாவ நிலைமையை உணரும் அறிவிலும் வளர்ந்தேன். ஏழைப் பாவிகளை நோக்கிய தேவனின் அன்பு மற்றும் கிறிஸ்துவின் மூலமாக செயல்படுத்தப்பட்ட மீட்பு குறித்த அறிவிலும் மேம்பட்டேன். என்னை நான் ஒப்புவித்த ஆசிர்வாதமான ஆவியானவர் மூலமாக, இயேசுவை பின்பற்றவும் , எதிர்காலத்தில் பாவத்திலிருந்து விலகவும் , என் ஆத்துமாவையும் , சரீரத்தையும் அவற்றின் எல்லா வல்லமையோடும் நேர்மையின் பாதையில் நடக்க அர்ப்பணிக்கவும் முடிவெடுத்துக் கொண்டேன். சுருக்கமாக சில வார்த்தைகளில் சொல்லுவதானால், இயேசு கிறிஸ்துவின் மீதான உயிர்ப்புள்ள விசுவாசம் என்னுள் உருப்பெற துவங்கியிருந்தது. "
வெளியரங்கமான நீதி மற்றும் ஒழுக்கம், இவற்றின் மீது சார்ந்திருக்கும் மாயை குறித்த சில கருத்துக்களுக்குப் பின் ரேனியஸ் தொடருகிறார் ..............
“நான் இப்பொழுது என்னை படைத்தவரோடும் ,மீட்டவரோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வழியை நித்திய வாழ்வு குறித்த வேத வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை கண்டேன். சரீர பிரகாரமான ஞானத்தை மேற்கொள்ளும், புறந்தள்ளும் வல்லமை அதில் இருப்பதை கண்டு கொண்டேன். மட்டுமல்லாது, இயேசு கிறிஸ்து கடவுளும் , தேவனுமானவர் என்பதையும், அதே நேரம் மாம்சமானார் என்பதையும் என் சொந்த அனுபவத்தில் கண்டு உறுதி செய்து கொண்டேன். என்னால் இதை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் விசுவாசிக்க முடிந்தது. தேவனின் வல்லமையால் இந்த விசுவாசம் என்னுள் சுடர் விட்டு எரிந்தது. . என் ரட்சகர் ஆட்சி செய்யும் மேலானவைகளை என் இருதயம் தேடுவதை உணர்ந்தேன். அவரில் நான் களிகூர்ந்தேன். அமைதியாக அவரோடு தரித்திருக்கும் தருணங்களில் அவரது அன்பை தியானிக்க முடிந்தது. சத்தியம் எதுவென்று எனக்கு தெரிந்திருந்தது. நானும் அந்த சாத்தியமாகவே மாற விரும்பினேன்..
எனது வாழ்வின் இந்த மகிழ்வான தருணங்கள் குறித்து நான் வேறென்ன சொல்ல முடியும்? இது நான் விளக்கிச் சொல்ல கூடாததாக இருக்கிறது. இதை என்னில் நிகழ்த்திய, ஒரு சிறந்த பணியை துவங்கிய , அவரைப் பற்றி நான் என்ன சொல்லுவேன்? துதிக்கப்படுவதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார். நானோ இன்னும் நிறைவற்றவனாக, பாவத்தால் ஏராளமாக கறைபட்டவனாக இருக்கிறேன். உண்மையில் இது என் தேவனின் முன் என்னை தாழ்த்துகிறது. அதே நேரம், உலகம் தரக்கூடாத, உலகத்தால் மறுக்கப்பட்ட என் ரட்சகரின் குணமாக்கும் வல்லமையை நான் உணர வைத்தது. கிறிஸ்துவின் அன்பான கிருபை என்னை அந்த மகிழ்ச்சிக்கு நேராக மென்மேலும் நெருங்கிவரச் செய்யும் என்றும், அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துவைப் போல மாற வைக்கும் என்றும் இந்த வசனத்தின் மூலம் நான் உறுதியாக நம்புகிறேன்.அவருக்கே புகழும் மகிமையும் உண்டாகட்டும். அறியாமையினாலோ, அழுக்கினாலோ, இந்த உலகம் முழுவதும் அவருக்கு எதிராக வந்தாலும், அவரே கர்த்தர் என்பதை நான் மறுதலிக்க கூடாதபடி என் அனுபவங்கள் எனக்கு வல்லமையை தரும் .அவரே எல்லாவற்றிக்கும் சதாகாலமும் தேவன்."
இப்படியாக, எப்படி தான் ஆழ்ந்த , பரிசுத்தமான இறை நம்பிக்கை குறித்த கருத்துக்களை பெற்றுக் கொண்டேன் என்பதனை ரேனியஸ் உறுதியாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறார். கிறிஸ்துவின் தெய்வீக தன்மை குறித்த சந்தேகங்களினால் அவர் குழம்பியிருக்க வேண்டும் என்பதனை முந்தய பத்திகளில் இருந்து உணர முடியும். அந்த ஜெர்மனியாரின் எண்ணம் , இயல்பாகவே இந்த பகுதியை குறித்து தீர ஆராய விழைந்தது. ரேனியஸ் வேறு ஒரு இடத்தில் குறிப்பிடுகிறபடி, உள்ளார்ந்த நம்பிக்கையின்படி மாத்திரம் இந்த பழமையான மதத்தை பின்பற்ற அவர் முன்வரவில்லை. அயர்ச்சி ஊட்டக்கூடியது என்று நன்கு தெரிந்தும் "மிகவும் புரிந்துகொள்ள முடியாத இறைத்தன்மை" குறித்து பொறுமையாக கற்றுக் கொள்கிறார். ஞானத்திற்காகவும் , வழிநடத்தலுக்காகவும் ஜெபத்தில் தரித்திருக்கிறார். மிகவும் குழப்பமான, சந்தேகம் நிறைந்த ஒரு தருணத்தில், ”அவிசுவாசம் எப்படியாய் என்னை துயரப்படுத்துகிறது .ஒரு முன்னணையில் கவனிப்பாரற்றுக் கிடந்த, எல்லா குழந்தைகளையும் போன்ற ஒரு குழந்தையை நாம் ஆராதிக்க முடியுமா? ஆனால் பயமுறுத்தும் அவிசுவாசம் என்ற இந்த எதிரிக்கு தேவ வசனமும் , ஜெபமுமே என் போராயுதங்கள். "என்று குறிப்பிடுகிறார். இந்த அவநம்பிக்கையும், சந்தேகமும் நிறைந்திருந்த இந்த காலகட்டம் அவரை சுயபரிசோதனைக்குள் நடத்தி, இறுதியில் அவரது விசுவாசத்தில் உறுதிப்படுத்தியது. முழுமையான நம்பிக்கையும், மகிழ்ச்சியாக அது நிறைவடைந்தது.
ஆழ்மனதில் அமைதியையும், உறுதியான விசுவாசத்தையும் பெற்ற பின், உள்ளத்தில் நிறைந்திருந்த அன்பும், ஆர்வமும் ஒரு புதிய கோட்பாட்டில் வெளிப்பட்டது .அது தனது எஜமானரின் விருப்பத்தை உறுதியோடும், அவருடைய கிருபையோடும், மாம்சத்தோடும், ரத்தத்தோடும் முரண்பாட்டாலும் , தன்னுடைய எல்லா பொறுமையும் , சுயத்தையும் கொடுக்க வேண்டி வந்தாலும் நிறைவேற்றுவது என்பதாகும். தனது பெரியப்பா வீட்டில் ஆவிக்குரிய புத்தகங்களை வாசித்து மகிழ்ந்திருந்த இந்த காலகட்டத்தில், மிஷினரி சரிதைகள் , குறிப்பாக யுனைட்டட் பிரதரன் மற்றும் மொரேவியன் திருச்சபை குறித்த நூல்கள் அவரது கவனத்தை ஈர்த்தன..
----------------------------------------------------------------------
யுனைடெட் பிரதரன் என்பது 1760 களில் துவங்கிய ஒரு கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம். "நாம் எல்லோரும் சகோதரர்கள்" என்பது தான் இதன் அடிப்படை கோட்பாடு. ஆரம்பத்தில் ,இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருந்த விவசாயிகள் பகுதி நேரங்களில், சம்பளம் ஏதுமின்றி குதிரைகளில் சென்று கிறிஸ்துவை அறிவிப்பதை தங்கள் பணியாக மேற்கொண்டனர். படிப்படியாக இது பெரிய மிஷினரி அமைப்பாக ,திருச்சபையாக வளர்ந்தது. ரேனியஸின் திருநெல்வேலி செயல்பாடுகளை உற்று நோக்கின்னால் இந்த "யுனைடெட் பிரதரன்" ஊழிய வழிமுறைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதை காணலாம். "யுனைடெட் பிரதரன் " நிறுவிய திருச்சபைகளே மொரேவியன் திருச்சபைகள். இந்த பழையமான சீர்திருத்த திருச்சபையில் இன்றும் உலகம் முழுக்க 7,50,000 உறுப்பினர்கள் உள்ளனர். அறியப்படாதவர்களுக்கு சுவிஷேசம் அறிவித்தலை இன்றளவும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
----------------------------------------------------------------------
அந்த வெளியீடுகளின் சாராம்சம் அவரை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் துவங்கின என்பதை அறிய முடிகிறது.. மற்றவர்கள் என்னமும் செய்துவிட்டுப் போகட்டும். உண்மை தேவனின் ரட்சிப்பை கிறிஸ்து வழியே அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பது தனது அடிப்படை கடமை அல்லவா என்கிற கேள்வி அவருக்குள் தீவிரமாக எழுந்தது. தனது பணி என்று ரேனியஸ் கருதியதை அவரது குடும்பத்தினரால் புரிந்து கொள்ள முடையவில்லை. ஆனால் அவரது பெரியப்பாவிற்குள் ஒரு நண்பன், ஒரு நல் ஆலோசகன் இருப்பதை ரேனியஸ் உணர்ந்தார். ஆரமபத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும், விரைவில் தேவ சித்தத்திற்கு மகிழ்ச்சியுடனும் , மனமுவந்தும் அர்ப்பணிக்க குடும்பத்தினர் இணங்கினர். பெரியப்பாவும் ரேனியஸும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்த போதிலும், தங்களுடைய விருப்பங்களையும் , உலக பிரகாரமான ஆர்வங்களையும், விட்டு விட்டு தெளிவாக உணரப்பட்ட தேவ வழிநடத்துதலை மட்டும் பின்பற்றுவது என முடிவெடுத்தனர். இதன் பின் அநேக ஆண்டுகள் அவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. வயோதிகம் காரணமாக பெரியப்பாவின் கண்பார்வை மங்கி, கைகள் நடுங்கத் துவங்கியபோதும் , அவர் தன்னுடன் இருந்தவர்களுக்கு கடித சாராம்சத்தைச் சொல்லி எழுதவைத்து, நடுங்கும் தன் கரங்களால் கையெழுத்தை மட்டும் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்.
. ரேனியசின் மனப்போராட்டங்கள் பற்றிய சில குறிப்புகளை அவர் ஆரம்ப காலங்களில் எழுதிய நாட்குறிப்புகளின் சில பகுதிகளை மொழியாக்கம் செய்யும் போது அறிய முடிகிறது.
---------------------------------------------------------------------
ரேனியஸ் 17 ஆம் வயது முதல் எழுதிய நாட்குறிப்பின் பாகங்களை நாம் காண முடிகிறது. அந்த கால கட்டங்களில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கிலாந்து வந்த பின் அவர் மெல்ல ஆங்கிலத்தில் எழுத துவங்குகிறார். அது வரையிலான நாட்குறிப்புகள் ஜெர்மானிய மொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேனியஸின் ஆரம்ப கால ஆங்கிலத்தையும், முதிர்ச்சி பெற்ற பின் பயன்படுத்திய ஆங்கிலத்தையும் உற்று நோக்கும் போது , ரேனியஸின் மொழி ஆளுமை குறித்து பதிப்பாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரேனியஸ் ஐயர் சி,.எம்.எஸ் ற்கு, எழுதிய கடிதங்களை வாசித்த ஆய்வாளர் எலிசபெத் வைல்ட் என்பவரும், ரேனியஸ் ஐயரின் ஆங்கில மொழிப் புலமை குறித்த தன ஆச்சரியங்களை பதிவு செய்துள்ளார்.
----------------------------------------------------------------------
டிசம்பர் 7, 1810
எனக்குள் விழிப்புணர்வு ஏற்பட்ட நாளின் வருடாந்திர நினைவு தினமாகிய இந்த நாளில் நான் என்னை அவருக்கு மறுபடியும் அர்ப்பணிப்புச் செய்கிறேன்.. இன்றைய தினத்தை நான் அமைதியான தியானத்தில் கழித்தேன். கடவுளுக்கு போதுமான அளவு நன்றி உள்ளவனாக நான் இருப்பதாக உணர முடியவில்லை.
டிசம்பர் 9. 1810
மிஷினரி பதிவுகளில் கிழக்கிந்திய தீவு பகுதிகளில் இருந்த புற மதத்தவர்கள் குறித்து வாசித்தேன். எவ்வளவு அருவருப்புகளை தினமும் அவர்கள் பின் பற்றி உள்ளார்கள். அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவோ, அவர்களுக்காக ஜெபம் செய்யவோ எனக்கு விருப்பமேயில்லை. ஆண்டவரே, எவ்வளவு பரிதபிக்கப் படவேண்டியவன் நான்? ஒரு சுவிசேஷகனாக என்னை பொருத்திக் கொள்வதற்கான எந்த அம்சமும் என்னிடம் இல்லை. எனக்கான சாமாதானத்தை, ஆறுதலை தரும்படி யேசுவிடம் ஜெபிக்கிறேன்.
டிசம்பர் 16, 1810
மிகப் பெரிய அவிசுவாசம் இருப்பதை தாமதமாக உணருகிறேன்.எனது மனநிலை குறித்து பெரியப்பாவிடம் பேசினேன். அவர் எனக்குத் தேவையான ஆறுதலை, அறிவுரையை, வழிகாட்டுதலைத் தந்தார்.
பிப்ரவரி 9, 1811
இந்த உலகத்தில் இருந்து என்னை தெரிந்தெடுத்து , வாழ்தலுக்கான வழியைக் காட்டி, , அவரது அன்பை நான் ருசிக்கும்படிச் செய்த அவரது கிருபை எல்லாவிதமான புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது.
மார்ச் 5, 1811
இன்று என் பெரியப்பா நான் திட்டமிட்டிருக்கிற பிரிதல் குறித்து என் பெரியம்மாவிடம் சொன்னார். பெரியம்மாவுக்கு என் மேல் கோபம் எழுந்தது. உற்சாகமிழக்கும்படியான அநேக வார்த்தைகளுக்கு நடுவே சொன்னார், அவர் எனது சொந்த அம்மாவாக இருந்திருந்தால் அவர் இதற்கு சம்மதித்திருக்கவே மாட்டாராம். பெரியம்மாவின் எதிர்ப்பினால் என் மனதில் கார் மேகம் சூழ்ந்து எனக்கிருந்த மனமகிழ்ச்சியை குன்றிப் போக செய்தது. ’அம்மாவை, சகோதரர்கள் மற்றும் குடும்பத்தவரை விட்டுவிட்டு வெளி தேசங்களுக்குப் போவது என்பது கொஞ்சம் முட்டாள்தனமான செயல்தான். என் குடும்பத்தவர் எனக்காக அழும்போது, என் நடவடிக்கைகளை குறித்தது கண்ணீர் சிந்தும் போது , நானும் நிச்சயம் வருந்த வேண்டும். இந்த நியாயப்படுத்துதல்களை நான் சோதனையாக கருதினேன். என் ரட்சகர் என்னை கைவிடாமல் பாதுகாக்க, அவருடைய அன்பும் , வெளிச்சமும் உள்ளத்தில் பிரகாசிக்க, அவருடைய ராஜ்யத்தை எல்லா தேசங்களுக்கும் விரிவு படுத்துவது மட்டுமே என் மிகப் பெரிய விருப்பமாக இருக்க ஜெபித்தேன். .
இன்னொரு இடத்தில் அவர், ‘பிற மத மக்களுக்கு சிலுவையின் உபதேசத்தைச் சொல்வதன் முக்கியத்துவத்தை , கஷ்டங்களை தீவிரமாக பரிசீலித்து பரிசுத்த ஆவியானவரின் உதவியை ஜெபத்தில் வேண்டினேன்" என்று எழுதுகிறார். இந்த மிகப்பெரிய பணியைச் செய்வதற்கு நான் ஏற்றவனும், தகுதியானவனுமில்லை என்று தோன்றுகிறது. ஆனாலும், இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலையும், பெலத்தையும் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்கிற அப்போஸ்தலனுடைய வசனத்தை நினைவு கூர்ந்து பெற்றுக் கொள்கிறேன். நான் அன்பாக நேசித்த என் தாயை, சகோதரர்களை சகோதரியை பிரிவது குறித்த எண்ணத்தை, "தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல" என்கிற தேவ வசனத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடு கடந்தேன்.
ஊழியக் களத்திற்குள் இறங்குவதற்கு இருந்த முதன்மையான இடையூறுகள் நீங்கி விட்ட சூழலில் நேரத்தை வீணாக்காமல் களம் இறங்குவதற்கான ஆயத்த பணிகள் துவங்கின. . 1810ம் ஆண்டு ரேனியஸ் பெர்லினில் வாலிபர்களை மிஷினரி பணிகளுக்காக ஆயத்தப்படுத்துவதற்காக சிறிது காலம் முன் துவங்கப்பட்டு அருள்திரு. ஜான் ஜெனிக்கேவின் மேற்பார்வையில் இருந்த இறையியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்து அனுமதியும் பெற்றார்.
---------------------------------------------------------------------
அருள்திரு. ஜான் ஜெனிக்கேவின் சகோதரர் ஜோசப் டேனியல் ஜெனிக்கே ரேனியஸிற்கு முன்னமே பாளையம்கோட்டை பகுதியில் பணியாற்றிய முன்னோடி மிஷினரி. 1759 இல் பிறந்த இவர் மிஷினரியாக 1788 இல் மெட்ராஸ் வந்தார். (அந்த காலத்தில் சென்னை இல்லை). அதன் பின் ஷ்வார்ட்சின் உடன் ஊழியராக தஞ்சை, திருச்சி பாளையம்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் பணியாற்றினார். . 1798 ஆம் ஆண்டில் இள வயதில் மரித்து அவர் தகப்பனை போல நேசித்த ஷ்வார்ட்ஸ் அவர்களின் கல்லறை அருகே தஞ்சையில் புதைக்கப்பட்டார். ஷ்வார்ட்ஸ் மற்றும் ஜெனிகேவின் மறைவினால் ஒரு இருண்ட காலத்திற்குள் சென்ற திருநெல்வேலி கிறிஸ்தவம் 1820 இல் ரேனியஸின் வருகையால் புத்துயிர் பெற்றது.
----------------------------------------------------------------------