திங்கள், 4 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14, ஏற்ற காலத்திற்காய் வைக்கப்பட்டிருக்கும் முழுமையடையாத தரிசனங்கள் (Unfulfilled Visions)



தனது பழைய சிறிய வீட்டிற்கு திரும்பிய பின் ஊருக்கு வெளியே தனக்கிருந்த தரிசு நிலத்தில் தோட்டம் ஒன்றை  உருவாக்கும் பணியில் ஜான் இறங்குகிறார். பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களோடு இந்த தோட்டத்திற்கு செல்கிறார். மாண்வர்கள் தோட்டவேலை, செடிகள், பூச்சிகள் சேகரிக்கும் வேலைகளை செய்யும் சமயம் ஜான் அங்கிருக்கும் கிறிஸ்தவர்களையும், பிற மதத்தவர்களையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டார். அங்கிருந்த மலையின் மீது ஏறி சூழ்ந்திருக்கும் கடல், சுற்றிலும் கிராமங்களால் வளையப்பட்ட தரங்கம்பாடி நகரம், தோட்டங்கள் நெல் வயல்கள் இவற்றையெல்லாம் பார்த்து தன் எண்ண ஓட்டத்தை இவ்வாறு பதிவிடுகிறார். " நான் இங்கே ஏதோ நன்மை  செய்ய அனுமதிக்கப்படுகிறேன் , இந்த சுற்றுப்புறம் முழுவதும், ஆம், இந்த நிலப்பரப்பு முழுவதும் கர்த்தரைப் பற்றிய அறிவாலும், மகிழ்ச்சியாலும், ஆசிர்வாதத்தாலும்   நிரப்பப்படும்." 


இது ஒரு சுவிசேஷகனின்  வெற்றுக் கனவாக, ஆசையாக கருத எனக்கு தோன்றவில்லை.  என்னைப் பொறுத்தவரை இது ஒரு முற்றுப் பெறாத, முழுமை அடைந்திடாத  தரிசனம் (Unfulfilled Vision)

ஏற்ற காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த தரிசனத்தை முழுமை அடைய வைக்கும் பணி ஒரு வேளை என்னுடையதாக, நம்முடையதாக இருக்கலாம். ஒவ்வொரு மிஷினரி கல்லறையையும், அவற்றின் பின் உள்ள வரலாறுகளையும் தோண்டி எடுக்க காரணம், சாகச நாயகர்களை வெளிக்கொண்டு வருவதற்கு அல்ல.  அவர்களுக்கு தேவன் கொடுத்த தரிசனங்கள், அவர்களோடு புதைந்து போய்  விடக் கூடாது. அந்த  தரிசன சுடர்களை நாம் உள்வாங்கி,  இசக்கார் புத்திரரைப் போல காலங்களை கணித்து, நம் காலத்தில் முழுமை அடைய வைப்பதோ, அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுவதோ நம் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என எண்ணுகிறேன். இந்த புரிதலோடு இனிவரும் பகுதிகளை புரட்டுவீர்களானால் இந்த எழுத்துக்களும், அதன் பின் உள்ள பெரும் உழைப்பும்,  அவற்றின்  பலனை பெறும் என  அவருக்குள் நம்புகிறேன். 


ஜான் தொடர்ந்து எழுதுகிறார்- "எங்கள் சபைகளும் பள்ளிகளும் இப்போது மிகவும் ஊக்கமளிக்கின்றன, நம்பிக்கை தருகின்றன. . 

சபையில் இன்னும் பல பயனற்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் உண்மையில் மிஷனைச் சேர்ந்தவர்கள் என்று என்னால் கணக்கிட முடியாது. ஆனால் இன்னும் பலர் உண்மையில் கிறிஸ்தவத்திற்கு தகுதியுள்ளவர்களாக குறைந்தபட்சம் கண்ணியமுள்ளவர்களாக நடக்க துவங்கியுள்ளனர்.நற்கருணைக்காரர்களுக்கு  பிற்பகலில் போதிக்கின்ற எங்களுடைய புதிய ஒழுங்கு இதற்கு காரணமென்று கருதுகிறேன். நற்கருணைக்கு  முந்தைய வாரம் முழுவதும்,   உபதேசிப்பதும், ஆய்வு செய்வதும்  பெரிய அளவில் பலனளித்தது. குறிப்பாக, ஞானஸ்நானத்திற்கான தயாரிப்பில் நாங்கள்   கவனமாக இருக்கிறோம். பல்வேறு பணிகளுக்கிடையே  ஞானஸ்நானம் பெற விரும்புவோர், ஒரு உண்மையான முன்னேற்றத்திற்கு நெருக்கமாக.வருவதற்கு அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், ஞானஸ்நானம் பெருகிறவர்களின்  எண்ணிக்கை குறைகிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் கிறிஸ்தவத்தின் பரவல்பின்னடைவுக்குப் பதிலாக  மேம்பட்டது.  ஞானஸ்நானம் பெற்றவர்கள்   உறுதியாக நிலைத்திருக்க  முயற்சி செய்கிறோம்இதற்காக அவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறோம். 


எங்களின் மிகப்பெரிய மகிழ்ச்சி எங்கள் தமிழ்ப்பள்ளியில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. நாங்கள்

அலட்சியமான அல்லது விருப்பமில்லாத மனநிலையை அங்கு ஒருவரிடமும் காண இயலவில்லை. பெரும்பான்மையான  சிறுவர் , சிறுமிகளிடம் கடவுள் மீதான பயமும்,  உண்மையான அக்கறையும் இருப்பதை காண முடிகிறது. பல மாணவர்கள்  தங்கள் ஆசிரியர்களை மிஞ்சி நிற்கிறார்கள். மாணவிகள்  தங்கள் ஆசிரியைகள் மற்றும் இரண்டு துணை ஆசிரியைகளிடம்  சிறந்த முன் உதாரணங்களைக் கொண்டுள்ளனர்.  அடக்கமும், விடாமுயற்சியும் அனைத்து பள்ளிக் குழந்தைகளிடமும் மேலெழுந்து நிற்கின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டிய மாணவர்களின்  வசதிக்காக நாங்கள் மதிய பள்ளியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக

காலுறைகள்  பின்னுவது  மற்றும் பாய்களை உருவாக்குவது போன்றவற்றை அறிமுகம் செய்தோம். , இது 

அவர்களுக்கு புதிய வாழ்வை  கொடுத்தது. போல் தெரிகிறது. மிகவும் தொந்தரவாக இருந்த, மாணவர்களுக்கு  அடிக்கடி ஏற்படும் நோய்களும், தோலழற்சிகளும்,   உடையில் உள்ள அழுக்குகளும் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டன. 

தேவாலயத்திலும், தெருக்களிலும் கண்ட தூய்மையின் நிமித்தம் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பாழ் பட்டுக் கிடந்த  எங்கள் இரண்டு பெரிய  பள்ளித் தோட்டங்கள் இப்போது அழகான ஆனந்த தோட்டங்களாக மாறியுள்ளன. இவை, குழந்தைகளுக்கும், தோட்டங்களுக்கும் சிறந்த நண்பனான, எனது யோனத்தான், மிஷினரி ராட்லரால் உருவாக்கப்பட்டவை.எங்கள் இருவரில் ஒருவர்  பள்ளிக்குள் வரும்போது தங்கள் ஆசிரியர் மற்றும் தகப்பனிடம் மாணவர்கள் வெளிப்படுத்தும் அன்பும் , மகிழ்ச்சியும் நன்றாக தெரிகிறது. தண்டனை என்பது மிக அரிதாகவே தேவைப்பட்டது. 

எங்கள் வீட்டில் வளர்ந்தவர்களில்  ஒருவர், இப்போது தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருக்கிறார். மற்றொருவர்  திறமையான மிகவும் அங்கீகரிக்கப்பட்ட  அரசாங்க  மொழிபெயர்ப்பாளர். இருவர் ஐரோப்பிய வணிகர்களிடம் எழுத்தார்களாக பணி புரிகின்றனர். மற்றவர்களும் சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றனர்.  இவர்கள் கடவுளின் ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்கிறார்களோ இல்லையோ,  குறைந்தபட்சம்   

 பூமியில்  பயனுள்ள குடிமக்களாக உள்ளனர். பல ஐரோப்பிய வீடுகளின் தரைகள் ,   10 முதல் 40 டாலர்கள் வரை விலையுள்ள, . பள்ளியில் செய்யப்பட்ட பாய்களால் மூடப்பட்டுள்ளன. இங்கொன்றும் , அங்கொன்றுமாக  சுமார் 4 டாலர்கள் விலையுள்ள  அரிசி பெட்டிகள் உள்ளன. ஐரோப்பியர்கள் எங்கள் காலுறைகளை விரும்புகின்றனர். 20 ஜோடிகளுக்கு 30 ரிக்ஸ் டாலர் விலை வருகிறது. நாங்கள் இப்போது மேஜர் ஜெனரல் அபெஸ்ட்டிற்கு இருபது ஜோடிகளை தயாரித்து வருகிறோம். 

இங்கு வசிக்கும் பலர் பிரம்பு வேலைக்காக நாற்காலிகள், படுக்கைகள், பல்லக்குகள் மற்றும் சோபாக்களை எங்களுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூர்காரர்கள் நடுவே காலுறை தைக்கும் தொழிலகம் ஒன்றிக்கு திரு. ராட்லர் அடிக்கல் நாட்டியுள்ளார்.


பின்குறிப்பு 


தன்னிடம் தங்கிப் படித்த மாணவர்களில் ஒருவர் தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருப்பதாக ஜான் குறிப்பிட்டுள்ளார். அது, தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்பது எனது அனுமானம். 1789 முதல் வேதநாயகம் சாஸ்திரியார் இரண்டு ஆண்டுகள் அருட்திரு. ஜான் அவர்களுடன் தங்கி கல்வி கற்றுள்ளார். அதன் பின்  தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த இறையியல்  கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் என்கிற புத்தகத்தில் அவரது  தரங்கம்பாடி வாழ்க்கை குறித்து குறிப்பிட்டுள்ளவைகள் மேலே ஜான் எழுதியதற்கு எந்த விதத்திலும் முரணாக இல்லை.."1789ம் ஆண்டு வேதநாயகம் டாக்டர் யோன் ஐயரோடே தரங்கம் பாடிக்கு போனார்.யோனயர் வேதநாயகத்திற்குத் தொடக்கமாக வேத சாஸ்திரத்தை (a book on theology) எடுத்துக் கொடுத்து, நீ இந்த புத்தகத்தை படித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதை அவர் நன்கு படித்தார்.....வேதநாயகம் தரங்கன் பாடியில் படிக்கின்ற போது ஒவ்வொரு நாள் மாலையிலும் யோனையரோடே உலாவப் போகும் வழக்கம் இருந்து. அப்பொழுது ஐயர் அநேக உபதேசங்களையும் சீரிய கதைகளையும் சொல்லிக் கொண்டு நடந்து போவார். டாக்டர் யோனையரும், கேமரையர், (Dr. Cammerer)  உரோத்துவர் (Rottler) முதலிய ஐயர்மார்களும் வேதநாயகத்தைப் பட்சமாய் விசாரித்தார்கள்."


பின்குறிப்பு-2 

திருநெல்வேலி பகுதியில் பிரசித்தி பெற்ற ஜான் தேவசகாயம் ஐயரும் அருட்திரு. ஜான் அவர்களின் மாணவர்களில் ஒருவர்




உதவிய நூல்கள் 
1.  History of the Tranquebar Mission- J. Fred. Fenger
2. தஞ்சாவூர் சுவிசேட கவிராயராகிய வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக