ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14 , மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் நடுவேயான ஒரு போர் வீரனின் ஊசலாட்டம்

 

ஒரு வேட்டைக்காரனைப் போல அருட்திரு. ஜான் அவர்களின் வரலாற்றை தேடி அலைந்தாலும் ரேனியஸின் நாட்குறிப்புகள்  போல தொடர்ச்சியாக குறிப்புகள் கிடைக்காததால், அவரது வரலாற்றை ஒரு நேர்கோட்டில் என்னால் கட்டமைக்க இயலவில்லை. எனவே, கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். எனக்கு பின் வரும் ஆய்வாளர்களோ, உயிர் பிழைத்து கிடந்தால் நானோ  இன்னும் அதிக தகவல்களை வரும் காலங்களில் தரக்கூடும்.

இந்தியாவில் இருந்த முதல் ஆறு வருடங்கள் அவரது சம்பளம் வெறும் 250 ரிக்ஸ் டாலர்கள் தான். இதனால் அழுக்கான ஆடைகளை அணிய நேர்ந்ததாகவும், போர்வை, உடை, தேநீர், சர்க்கரை போன்றவை அவருக்கு தேவையாய் இருந்ததை பிறர் அறிய நேரிட்டதையும் சொல்கிறார். அவருக்கு அருகில் வசித்த வசதியானவர்கள் மூலமாக இந்த தேவைகள் சந்திக்கப்பட்டாலும், வாங்குவதை பார்க்கிலும் கொடுப்பதை விரும்பிய அவர் ஒரு உள்ளான அவமானத்துடன் அவைகளை பெற்றுக் கொண்டார். 

இங்கு வாழ்ந்த மிஷினரிகளுக்கு ஐரோப்பிய மணப்பெண் கிடைப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், ஜான் அவர்களுக்கு நல் வாய்ப்பாக நல்லதொரு மணப்பெண் கிடைத்தார். ஆனால், அந்த இளம் தம்பதிக்கு வாழ்க்கையை நடத்த போதுமான வருமானம் இல்லை. துயர பெருமூச்சுகளின் நடுவே அவர்கள் மண வாழ்வு துவங்கியது. அவர்கள் ஜெபித்தார்கள், ஐரோப்பாவிற்கு கடிதம் எழுதினார்கள். உதவிகள் வர தாமதித்தது. வேறுவழியின்றி ஜான் கடல் சங்குகள் மற்றும் அபூர்வ பொருட்களை சேகரித்து விற்று, அதில் கிடைத்த சில நூறு டாலர்களை கொண்டு தன் கடன்களை தீர்த்ததை அறிய முடிகிறது. 

கடைசியில், நிரந்தர வருமானத்திற்கு அவர் ஒரு வழியை கண்டுபிடித்தார். ஐரோப்பியர்களுக்கான பள்ளி நடத்தும் அவரது திட்டம் சக பணியாளர்களுக்கு உவப்பாக இல்லை. ஊழியம் சாராத பள்ளிக்கூடம் நடத்துவது ஒரு மிஷினரிக்கு பொருந்தி வராது. அது, பணித்தளத்தின் எதிர் காலத்தையும் , ஒட்டுமொத்த ஊழியத்தையும் பாதிக்கும் என்பது மற்றவர்களின் எண்ணமாக இருந்தது. துணிச்சலோடு அவர் ஒரு பெரிய வீட்டினை பள்ளி நடத்த வாங்கிய போது இந்த பயம் இன்னும் அதிகரித்தது.  

அது ஒரு உண்டு, உறைவிட பள்ளி என அனுமானிக்க முடிகிறது. அந்த பெரிய வீட்டில்18 ஐரோப்பிய மாணவர்களும், அதே அளவு தமிழ் மாணவர்களும் இருந்தனர்.  உயர் தட்டு மாணவர்களுக்காகவும்,  அவரது  குடும்ப தேவைக்காகவும் குதிரை வண்டியும்,குதிரைகளும் இருந்தன. நாகப்பட்டினத்தில் இருந்து தப்பி வந்த அநேக குடும்பங்களை அவர் ஆதரித்தார். அவர்களது பொருட்களும் இந்த வீட்டில் இருந்தன. அங்கிருந்த தோட்டத்தில் கிட்டத்தட்ட 60 பேர் பணியாற்றினர். 

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அவரது பல்வேறு திட்டங்களை அவர் அனுபவித்த கொடிய வறுமை தடுத்து நிறுத்தி இருந்தது. மிஷனில் நிதி இல்லாத காரணத்தால், ஐம்பதிற்கும், நூறுக்கும் கணக்கு பார்க்கும் நிலை மாறி, நல்லவற்றை செய்ய அவரால் முயற்சிக்க முடிந்தது. இது ஊழியத்திற்கும், உள்நாட்டு இளைஞர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.  அதே நேரம், ஊழிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக யாரும் அவரை குற்றப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆண்டுக்கு வெறும் 3000 ரிக்ஸ் டாலர் வருமானம் தந்த ஊழிய பாதையை விட்டு வெளியேறுவது ஒருபோதும் அவரது எண்ணமாக இல்லை. 

இருப்பினும், இந்த சொற்ப கால சந்தோஷத்திற்கு பின் அவரின் நீண்ட துயர குறிப்பு ஒன்று கிடைக்கிறது.  தனது  பெருமையான நினைவுகளை தாழ்த்துவதற்காக அடி மேல் அடி விழுந்ததாக குறிப்பிடுகிறார். "நான் அடிக்கடி சுகவீனமடைந்தேன். பள்ளியில் 13 குழந்தைகள் ஒரே நேரத்தில் சுகவீனமடைந்தனர். ஒரு வருட இடைவெளியில் என் மூன்று சொந்த குழந்தைகளை ஆண்டவர் தன்னிடம் எடுத்துக் கொண்டார். இவை என் சந்தோஷத்தையும், மகிழ்வான நம்பிக்கைகளையும் தின்று போட்டன. என்னை நான் எதிர்காலத்தின் பயனற்ற சுமையாக எண்ணினேன். ஒரு சிதைந்த யுத்த வீரனாய், என்னை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி துயரத்தின் தொனியுடன் கேட்டிருந்தேன்.  பள்ளியில் தங்கியிருந்த பாதிக்கு மேலான மாணவர்களை பெற்றோர் திரும்ப அழைத்துக் கொண்டனர். அது எனக்கு பிடித்திருந்தது. மற்ற மாணவர்களும் அப்படி திரும்பி செல்லும் பட்சத்தில், மிச்சமிருக்கும் என் சொற்ப நாட்களை ஜெர்மனியில் உள்ள என் சகோதரி இடத்தில் சென்று துயரத்துடன் கழிக்க தடையேதும் இருக்காது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால், என் நன்மைக்காக என்னை தாழ்த்திய ஆண்டவர் சுகத்தையும், பெலத்தையும், மகிழ்ச்சியையும் எனக்கு திரும்ப கொடுத்தார். ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகளை கொடுத்துள்ளார். புத்தாண்டில் மூன்றாவது குழந்தையை எதிர்நோக்குகிறேன். அவர் என்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபுவாக மாற்றி, ஆசீர்வதித்திருக்கிறார்."

இந்த சம்பவங்களுக்கு பின், தனக்கும் தனது ஒன்பது மாணவர்களுக்கும் இந்த பள்ளிக்கூட வீடு பெரியதாக இருந்ததால் அதை விற்று விட்டு, தான் வாசித்த பழைய சிறிய வீட்டிற்க்கே ஜான் திரும்பி விட்டதை அறிய முடிகிறது. 

பின் குறிப்பு-1 இந்த குறிப்புகளை ஜான்  1785 ஆம் ஆண்டு எழுதியதாக தெரிகிறது. . ஜான் குறிப்பிட்ட மூன்றாவது குழந்தை புத்தாண்டில் எப்பொழுது பிறந்தது  என தெரியவில்லை?. அவரது கடைசி காலத்தில் துயரம் தருகிற ஒரு குறும்புக்கார  மகன் இருந்தான் என அறிய முடிகிறது.  அந்த மகனின் பெயர் கிடைக்கவில்லை.அவன் தான் அந்த புத்தாண்டில் பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும்.  ஏனெனில்,  Ernst Gottlieb எனும் அவர் குறிப்பிட்டிருக்கும் ஆண்  குழந்தை 15 செப்டம்பர் 1787 இல் தனது மூன்றாது வயதில்  இறந்து கல்லறை எண் 14 இல் புதைக்கப்பட்டுள்ள நான்காவது குழ்ந்தை பட்டியலில் இடம் பெறுகிறது. அவரது ஒரு மகள் மற்றும் மனைவி பற்றிய குறிப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.

பின் குறிப்பு-2கல்லறை எண் 14 இல் இப்பொழுது வாசகங்கள் எதுவும் இல்லை. ஆனால், கீழ்கண்ட ஜெர்மானிய வாசகங்கள் இருந்ததாக பழைய குறிப்புகள் கூறுகின்றன. இந்த உச்ச பட்ச துயரத்தின் வாசகங்கள் மீண்டும் அந்த கல்லறை மீதோ, அருகிலோ இடம் பெற வேண்டும் என்பது என் பெருவிருப்பம் 

முதல் மூன்று குழந்தைகளின் இறப்பிற்கு பின் அவர்கள் பெயர் விபரங்களுக்கு முன் எழுதப்பட்டவை - Hier liegen die Freuden der Eltern bis zum frohen Wiedersehen  (Here lie the joys of the parents until the happy reunion)நான்காவது மகனின் பெயருக்கு முன்னால் - Ach, auch Du, theurster Sohn (Ah, you too, dearest son). கடைசியாக- Wer folget nun? Wachet, denn ihr wisset nicht, wenn es Ziet ist. (Who follows now? Watch, for you do not know when it is time)

பின்குறிப்பு: 3தன்னை, தன் சார்ந்தவர்களை வேதாகம பாத்திரங்களோடு ஒப்பிடுவது ஜானின் வழக்கமாக இருந்துள்ளது. என் கண்ணில் பட்ட சிலவற்றை சொல்லலாம் என தோன்றுகிறது. தன் இழப்பின் காலத்தில் தன்னை யோபுவோடு ஒப்பிடும் இவர், பின் தன்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபு (Recovered Job) என குறிப்பிடுகிறார். எல்லா சூழலிலும் இவரை புரிந்து கொண்டவராய், ஒத்தாசை செய்பவராக இருந்த ராட்லர் குறித்து கூறும் போது ராட்லர் எனது யோனத்தான் என கூறுகிறார். ஜான்சன், லீபெக் எனும் தனது  இரு மாணவர்கள் மீது இவர் தனி கவனம் செலுத்துகிறார். பெரு நம்பிக்கை கொள்கிறார். தனக்கு பின் மிஷனை வளர்த்தெடுப்பார்கள் என நம்புகிறார். இவர்களை தனது தீமோத்தேயுக்களாக வர்ணிக்கிறார். (அவர் நம்பிக்கை பொய்த்துப் போனது தனி கதை)





உதவிய நூல்கள் History of the Tranquebar Mission- J. Fred. Fenger

Tranquebar Cemeteries and Grave- Monuements- Karin Kryger and Lisbeth Gasparski

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக