செவ்வாய், 27 டிசம்பர், 2022

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -2 (AYG கேம்பெல் , H.R.Pate)

 மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -2



இன்று சிக்கன்-65 ஒரு சர்வதேச உணவாக இருக்கிறது. இந்த பெயர் தெரியாத தமிழர்களே இருக்க இயலாது. ஆனால், இது சென்னையில் உள்ள புஹாரி உணவகம் 1965 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய உணவு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? 




இந்த உணவகத்தை 1951 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் துவங்கியவர்   திரு. ஏ.எம். புஹாரி. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பைன் டைனிங் (Fine Dining)  முறையில் தென்னிந்திய உணவுகளை பரிமாறிய முதல் உணவகம்   என்று கூட இதனை சொல்லலாம். திரு. புஹாரி 1973-74 இல் சென்னை நகர ஷெரிப் ஆக இருந்தவர். இளம் வயதிலேயே இலங்கை சென்று, அங்கே கல்வி கற்று,  வணிகத்தில் சம்பாதித்து  திரும்பியவர். 




கொழும்பு நகரில் அவர் நடத்திய கடை பெயர் Hotel De Bhuhari.   அவரது சொந்த ஊர் பெயர் கேம்பலாபாத். கேம்பலாபாத் ஊராட்சி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி வட்டத்தில் அமைந்துள்ளது.

புஹாரி ஹோட்டல் மட்டுமல்ல ஹோட்டல் புளு டைமெண்ட் உரியமையாளர்களுக்கும் சொந்த ஊர் இதே கேம்பலாபாத் தான். சிக்கன்-65 போலவே மற்றொரு பெயர் பெற்ற உணவு கேம்பலாபாத் தக்கிடி. இஸ்லாமிய திருமண வீடுகளில் திருமணத்திற்கு அடுத்த நாள்  பரிமாறப்படும் உணவு இது. 




இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட கேம்பலாபாத் உருவான கதை சுவையானது. சிவராமன் குளம், கங்கநாதபுரம் ஆகிய இடங்ககளில் வசித்த இஸ்லாமியர்கள் 1937 ஆம் ஆண்டு தங்களுக்கு ஒரு நல்ல வாழ்விடம் வேண்டி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களை அணுகினார்கள். அவர் இந்த முறையீட்டை Sir Archibald Young Gipps Campbell என்கிற ஆங்கிலேயரிடம் எடுத்துச் சென்றார். AYG கேம்பெல் மெட்ராஸ் மாகாண  தலைமை செயலராக பணியாற்றியவர். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். அவர் உடனடியாக இந்த புதிய குடியிருப்பு உருவாக 80 ஏக்கர் நிலங்களை ஒதுக்க ஏற்பாடு செய்தார். இந்த நகரம் உருவாகும் போது இதற்கு கேம்பெல் அவர்கள் பெயரினை இட வேண்டும் என்பது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் ஆலோசனையாக இருந்தது. அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த புதிய குடியேற்ற நகரம் " கேம்பலாபாத்" என்று பெயர் சூட்டப்பட்டது. பெர்சிய சொல்லான "அபாத்"  என்பதற்கு குடியிருப்பு என்று பொருள். அஹமதாபாத், வாலாஜாபாத், ஹைதராபாத் என்பவையும் இந்த பெர்சிய சொல்லின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நகரங்கள் தான். 

சிவராமன் குளம், கங்கநாதபுரம் இஸ்லாமியர்களுக்கு தனி குடியிருப்பு நகரம் என்கிற ஆவல் எப்படி தோன்றியது என்பதை அறிய கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்றொரு ஊர் பேட்மாநகரம்  . கீழடிக்கு முந்தையதாக கருதப்படும் சிவகளை அகழாய்வு நடை பெரும் இடத்தில உள்ள ஊர். இந்த ஊர் தான் கேம்பலாபாத் உருவாகும் உந்து சக்தியை கொடுத்தது.



 

1914 ஆம் ஆண்டு இரண்டு வாரங்கள்  நிற்காமல் பெய்தது கன மழை. தாமிரபரணி கரைகளை தாண்டி வெள்ளம் புரண்டது.  இந்த வெள்ளத்தில் சிக்கி தவித்தனர் தோப்பூர் எனும் கிராம மக்கள். உயர்ந்த கட்டிடங்களிலும், மசூதியின் கோபுரங்களிலும் தங்கி உயிர் தப்பினர். இங்கு வசித்த, நெசவு தொழில் செய்யும்,  100 இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஒவ்வொரு பருவ மழை காலத்திலும் இந்த வாழ்வா, சாவா போராட்டம் நிகழ்ந்து வந்தது. இந்த இழப்புகளுக்கும், துயரங்களுக்கும் முடிவு கட்ட அவர்கள்   தூத்துக்குடி சப் கலெக்டராக இருந்த பேட் (H.R.Pate) என்பவரை அணுகினர். அந்த கிராமத்திற்கு வந்து, சேதங்களை பார்த்தவர் அரசுக்கு இவர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடம் கோரி பரிந்துரை செய்தார். அவரது முயற்சியில் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் 150 ஏக்கர் நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அங்கு நேர்த்தியான ஒரு புது நகரம் உருவானது.  தங்களுக்கு ஒரு பாதுகாப்பான குடியிருப்புக்கு ஏற்பாடு செய்த திரு.பேட் அவர்களுக்கு நன்றிக்கடனாக தாங்கள் உருவாக்கிய மாநகரத்திற்கு  " பேட்மாநகரம்" என்று பெயரிட்டனர். 

1879 ஆம் ஆண்டின் திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவின் மேம்பட்ட பதிப்பை 1916 இல் வெளியிட்டது திரு. பேட் அவர்களின் பேசப்படும் சாதனை.

  "திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப  ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம்." எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

உதவிய கட்டுரை :

https://www.thehindu.com/society/history-and-culture/the-story-behind-campellabad-and-patemanagaram-in-thoppur/article19414617.ece

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

பீட்டர் பாண்டியன் - மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -1



அவர் பெயர் ரவுஸ் பீட்டர்  (Rous Peter). பிறப்பால் ஆங்கிலேயர். பாசக்கார மதுரைக்காரர்கள் அவருக்கு இட்ட பெயர் பீட்டர் பாண்டியன். யார் இந்த பீட்டர் பாண்டியன் என அறிய நீங்கள் 200 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். ரவுஸ் பீட்டர் 1785 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஹார்லி என்ற இடத்தில பிறந்தவர்.  1801 ஆம் ஆண்டு இந்தியா வந்து புனித ஜார்ஜ் கோட்டையில் எழுத்தராக சேர்ந்தார்.  படிப்படியான பயணத்திற்குப் பின் 1812 முதல் 1828 வரை மதுரை மாவட்ட  கலெக்டராக பணிபுரிந்தார். அந்த காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில்  மாவட்ட ஆட்சியரே திருக்கோவில்களின் தக்கார்களாகவும் இருந்து வந்தனர். இந்த வகையில் ரவுஸ் பீட்டர் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் மற்றும் அழகர் கோவில் தக்காராகவும் இருந்து வந்துள்ளார். இந்த தக்கார் பணியை அவர் மிகவும் பயபக்தியுடன் மேற்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. 

 கன்னிவாடி, பெரியகுளம், போடி நாயக்கனூர் பகுதிகளில் காட்டு யானைகள் மக்களை தொந்தரவு செய்த போது  அவற்றை வேட்டையாடி மக்களால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். மதுரை மக்கள்  பாண்டிய மன்னனே  திரும்ப வந்து ஆள்வதாக கருதினர்.   அவரின் வள்ளல் தன்மையும் வீரத்தையும் பாராட்டி நாட்டுப்புறப் பாடல்கள் வழங்கி வந்திருக்கின்றன.  பீட்டர் பாண்டியன் அம்மானை என்ற நூலும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த  நூல் நமக்கு  கிடைக்கவில்லை.

ஒரு மழை நாள்  இரவில் உறங்கிக்  கொண்டிருந்த அவரை மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி  கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், அவ்வாறு அழைத்துச் சென்ற சற்றைக்கெல்லாம் அவரது வசிப்பிடம்  இடிந்ததாகவும், அச்சிறுமி கோயிலுக்குள் சென்று புகுந்ததாகவும் கூறப்படுகிறது.  அவ்வாறு சிறுமி வடிவில் வந்து தம்மைக் காப்பாற்றியது மீனாட்சி அம்மனே என்று கருதிய பீட்டர், மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதம் தாங்கிகள்) அம்மனுக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில் அம்மன் மாசி வீதிகளில் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வரும்போது இந்த அங்கவடிகளே அணியப்படுகின்றன. 

பீட்டர் பாண்டியன் தனது கொடை மற்றும் இரக்க உணர்வால் அரசு கருவூலத்தில் இருந்து தான் எடுக்க வேண்டியதற்கும் அதிகமான பணத்தை எடுத்துள்ளார். இவரது இளகிய மனம் கண்ட இவருக்கு கீழ் பணியாற்றியவர்களும் தவறுகள் புரிந்துள்ளனர். 1819 இல் ஒரு கடிதத்தை எழுதி மூடி முத்திரை இடுகிறார். தனது மரணம் வரை அந்த கடிதம் பிரிக்கப்படக்கூடாது என்று குறிப்பு எழுதுகிறார். அதில் தனது கவனக் குறைவை ஒத்துக்கொண்ட அவர், வேறு நேர்மையற்ற நோக்கம் ஏதும் இல்லை என்பதை குறிப்பிடுகிறார். பற்றாக்குறைகளை சரி செய்ய தன் சொத்துக்களை விற்று எடுத்துக்கொள்ள சொல்கிறார். இந்த கடிதம் எழுதி ஒன்பது ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 6, 1828 இல் தற்கொலை செய்து கொள்கிறார். 

நீதி துறையால் அவரது கடிதம் கைப்பற்றப்படுகிறது. கணக்குகள் தணிக்கை செய்யப்படுகின்றன. ரூ 1,75,000/- அவரால் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளப்பட்டது தெரிய வருகிறது. அதில் அவர் எடுத்து எவ்வளவு, அவர் கீழ் பணியாற்றியவர்கள் கொள்ளை அடித்தது எவ்வளவு என்பது தெரியவில்லை. ஆனால், மேல் விசாரணைக்குப் பின் 5 பேர் சிறை தண்டனை பெறுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மதுரை மாவட்ட கெஸட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஐயா தொ. பரமசிவம் எழுதிய  "அறியப்படாத தமிழகம்" நூலில் குறிப்பிடுகிறார். 

இவரது உடல் உடல்  மதுரையில் உள்ள தூய ஜார்ஜ் ஆலய வளாகத்தில் புதைக்கப்பட்டது. இவர் அரசு பணத்தை கொள்ளை அடித்தாரோ  , இல்லையோ, மக்கள் மனதை கொள்ளை அடித்தார் என்பது மறுக்க இயலாத உண்மை.  

புதன், 28 செப்டம்பர், 2022

கல்லறை எண் 14- அறிவியல் வளர்த்த தரங்கம்பாடி சங்கம்

கல்விப்பணி, இறைப்பணி இவற்றோடு கூட இயற்கை அறிவியல் மீது திரு. ஜான் அவர்களுக்கு தீராத தாகம் இருந்தது. 

15 அக்டோபர் 1788 இல் கல்கத்தாவில் இருந்த British Asiatic Society  போலவே தரங்கபாடியில் THE TRANQUEBARIAN SOCIETY (in Danish Det Tranquebarske Selskab)  உருவாக்கப்பட்டது. 1789 இல் இதில் 33 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். போர், நிதி பற்றாக்குறை, மரணங்கள் என பல்வேறு காரணங்களால் இந்த அமைப்பு அருட்திரு. ஜான் மரணமடைந்த 1813 இல் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 

இந்த அமைப்பில்  DHM   என்று அழைக்கப்பட்ட  Danish-Halle Mission  மிஷினரிகளோடு கூட  அரசு அதிகாரிகளும், தனிப்பட்ட வியாபாரிகளும் இடம் பெற்று இருந்தனர்.   இந்த குழு  உலகளாவிய அறிஞர்களின் வலைப்பின்னல் மூலம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது . அந்த வலைப்பின்னலில் இருந்த முக்கியமான சிலர்: 

Christoph Samuel John (1747-1813)

Johann Peter Rottler (1749-1836)

August Friedrich Cämmerer (1767-1837)

Johann Gottfried Klein (1766–1818)

 Patrick Russell (1726-1805)

James Anderson (1738-1809) 

 WilliamRoxburgh (1751-1815)

Benjamin Heyne or Heine (1770-1819)

இவர்கள் தாங்கள் கண்ட இயற்கை வரலாற்று மாதிரிகளை லண்டன், கோபன்ஹேகன், பெர்லின், ரோஜென்ஸ்பேர்க், லுண்ட் ஆகிய நகரங்களில் இருந்த அறிவியலாளர்களோடும், அறிவியல் அமைப்புகளோடும் பகிர்ந்து வந்தனர்.  டச்சு மலபார் கடற்கரை மற்றும் டச்சு சிலோன் ஆளுநராக இருந்த Johann Gerard van Angelbeek இவர்களின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இந்த அமைப்பிற்கு கிடைத்த மற்றொரு ஆதரவாளர் தஞ்சை மன்னர் சரபோஜி (2). 

இந்த காலகட்டத்தில் தரங்கம்பாடியில் நிறைய அறிவியல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தாவரவியல், விலங்கியல், பூச்சியில் மாதிரிகளும், அறிவியல் நூல்களும் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டன. ஒரு தாவரவியல் பூங்கா நிறுவப்பட்டது.

 இந்த தாவரவியல் பூங்கா மிஷினரி ஜானின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது. இந்திய தாவரங்களை ஐரோப்பிய அறிவு மற்றும் இந்திய அனுபவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதன் மூலம் உணவு, உடை, சாயம், மருந்து, நறுமணம் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளை கண்டடைய முடியும், இதனால் சமூகம் பயன்படும்  என்பது அவர் வாதமாக இருந்தது. இந்த முன்மொழிவை அரசு ஏற்றுக் கொண்டு தரங்கம்பாடி நகரின் வடக்கே கடற்கரை ஓரமாக 32.5 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியது. இதன் பொறுப்பாளராக மிஷினரி ராட்லர் நியமிக்கப்பட்டார்.

   இந்த அறிவியல் வசதிகளை பார்வையிட நிறைய இந்திய, ஐரோப்பிய முக்கியஸ்தர்கள் தரங்கம்பாடி வந்தனர். தரங்கம்பாடி சுற்று சுவருக்கு வெளியே இருந்த இந்த மிஷன் தோட்டம் முக்கியமான உரையாடல்கள் நடக்கும் இடமாக அமைந்தது. இதில் தமிழ் பிராமணர்கள், இந்திய மருத்துவர்கள், மிஷினரிகள், மிஷன் மருத்துவர்கள் கலந்து அறிவியல் குறித்து கலந்துரையாடினர். மேலும், தென்னிந்தியாவில் இருந்த ஹலே மிஷன் தோட்டங்கள் பராமரிப்பாளர்கள் மத்தியில் ஒரு வலைப்பின்னல் உருவாகி தோட்டங்களில் விவசாயம் செய்வது குறித்த சமகால  செய்திகளை பரிமாறிக்கொண்டனர். 

மிஷினரிகளுக்கு இயற்கையை புரிந்து கொள்ளும் இந்த ஆர்வம் "இயற்கை இறையியல்" (Natural Theology or Physico-theology) என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தது. அதிலும் மிஷினரி ஜான் இயற்கை புத்தகத்தை (The Book of Nature.) அறிவியல் பூர்வமாக  ஆராய்ந்து அறிந்து கொள்வது மூலம் இறைவனை அறிந்து கொள்வது எனும் கோட்பாட்டின் தீவிர ஆதரவாளராக இருந்தார். கோபன்ஹேகன் அரசும் இந்த முற்சிகளுக்கு ஒத்தாசையாக இருந்தது. உலகெங்கும் பரவிக்கிடந்த டேனிஷ் பேரரசில் எட்டு வானியல் கண்காணிப்பு கூடங்களை அமைக்கும் பணியில் டென்மார்க் ஈடுபட்டது. அதில் ஒரு கூடம் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டு 1795 இல் ஒரு அரசாங்க வானியலாளரும் பணியமர்த்தப்பட்டார்.

 மிஷினரி ஜான்  சேகரித்த மாதிரிகளை உடனுக்குடன் சமகாலத்தைய ஆய்வாளர்களான ஜார்ஜ் ஃபாஸ்டர், மார்கஸ் ஃப்ளோஜ் (Marcus Élieser Bloch) வில்லியம் ரோஸ்பர்க் போன்றோருடன் பகிர்ந்துகொண்டார். ஜான் வரைந்த ஓவியங்களும், ஆய்வுக்குறிப்புகளும் மார்கஸ்   எழுதிய மீன்களின் வரலாற்று நூலுக்கு அடிப்படையாக அமைந்தன.


 ஆய்வாளர் மார்கஸ் ஒரு மீன் பேரினத்திற்கு ஜானியஸ் (Johnius)  எனும் பெயர் சூட்டினார்.Lutjanus johnii எனபதும் இவர் கண்டறிந்த  மீன் வகையாகும்.

 


 இந்தியாவின் முதல் பாம்பு மனிதர் எனும் புகழைப் பெற்ற நீர் நில ஊர்வன விலங்குகள் ஆய்வுத்துறையின் முன்னோடி பேட்ரிக் ரஸ்ஸல் மண்ணுள்ளிப் பாம்புகளுக்கு எரிக்ஸ் ஜான்னி Eryx johnii   என பெயர் சூட்டி கெளரவித்தார்.



 இவர் சேகரித்த மூலிகை செடி ஒன்றிற்கு Impatiens johni என்று பெயரிடப்பட்டது.



அறிவியல் துறைக்கு அருட்திரு. ஜான்  ஆற்றிய சேவைக்கு மரியாதையாக ஜெர்மானிய ஆய்வறிஞர்கள் சொஸைட்டி அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.  

பின் குறிப்பு-1

Johan Peter Rottler

பிரான்ஸ் தேசத்தை சார்ந்த மிஷினரி மற்றும் தாவரவியலாளர். டேனிஷ் மிஷனில் ஆரம்பத்தில் தரங்கம்பாடியிலும் பின் சென்னை வேப்பேரியிலும் பணியாற்றியவர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான தாவர மாதிரிகளை தென் இந்திய பகுதிகளில் சேகரித்து ஐரோப்பாவிற்கு ஆய்வுக்கு அனுப்பியவர்  .

பின் குறிப்பு-2

August Friedrich Cämmerer

திருக்குறளை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்த டேனிஷ் மிஷினரி. 1803 ஆம் ஆண்டு முதல் இரண்டு புத்தகங்கள் வெளியாகின. தரங்கம்பாடி மிஷனின் கடைசி மிஷனரியாக 1837 இல் மரணமடைந்தார். 

பின் குறிப்பு-3

Johann Gottfried Klein

J G Klein என்று அறியப்பட்ட தாவரவியலாளர். 

பின் குறிப்பு-4

Patrick Russell 

ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் . இயற்கை ஆர்வலர். இந்திய பாம்பு வகைகளை ஆய்வு செய்தவர். "இந்திய பாம்பு ஆய்வியலின் தந்தை" ( "Father of Indian Ophiology")  என அழைக்கப்படுபவர்.

பின் குறிப்பு-5

James Anderson 

ஸ்காட்லாந்தை சேர்ந்த மருத்துவர்  மற்றும் தாவரவியலாளர்.  கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணியாற்றியவர்.சென்னை மாம்பலத்தில் ஒரு தாவரவியல் பூங்காவை நிறுவியவர்.

பின் குறிப்பு-6

William Roxburgh

ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தாவரவியலாளர். கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணியாற்றியவர். இந்திய தாவரவியல் துறையை நிறுவியர்  (Founding father of Indian botany) எனும் பேர் பெற்றவர். 

பின் குறிப்பு-7

Benjamin Heyne

ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர், இயற்க்கை ஆர்வலர், தாவரவியலாளர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர். இவர் சேகரித்து அனுப்பிய நிறைய தென்னிந்திய தாவரங்கள் ஐரோப்பிய விஞ்ஞானிகளால் இவர் பெயராலேயே வழங்கப்பட்டன. 

பின் குறிப்பு-8

டேனிஷ் அரசால் பணியமர்த்தப்பட்ட வானியலாளர் பெயர் Henning Munch Engelhart . இவர் தரங்கம்பாடி சீயோன் ஆலய ராணுவ குருவாகவும் பணியாற்றினார். இந்த வானியல் கூடம் சீயோன் ஆலய கோபுரத்தில் நிறுவப்பட்டது. 

பின் குறிப்பு-9

மிஷினரி ஜானுக்கு முனைவர் பட்டம் கொடுத்த ஜெர்மானிய ஆய்வறிஞர்கள் சொஸைட்டி அமைப்பின் ஆங்கில பெயர் மற்றும் தேதி  நம் தேடுதலில் உள்ளது. 

பின் குறிப்பு-10

இந்திய மருத்துவம், தாவரவியல், உயிரியல், வரலாறு, வானியல்,வேதியல் ,  அகராதி  உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்களிப்பு குறித்த தனி புத்தகம் திட்டமிட்டுள்ளேன். அந்த தருணத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் குறித்து விரிவாக பதிவிடுவேன். 

உதவிய பதிவுகள் 

1. The Medical Skills of the Malabar Doctors in Tranquebar, India, as Recorded by Surgeon T L F Folly, 1798

2. THE TRANQUEBARIAN SOCIETY’ Science, Enlightenment and Useful Knowledge in the Danish-Norwegian East Indies,c. 1768-1813. 

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

கல்லறை எண்: 14 - சும்மா வரவில்லை கிறிஸ்தவம்

C.S.John என்று அழைக்கப்படும் Christoph Samuel John 1747, ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தவர்.  இவரது அப்பா Julius Gerhard ஒரு குருவானவர்.  தாயார் பெயர் Catharina Dorothea Pyrläus. ஜான் ஹலே  பல்கலைக்கழகத்தில் குருத்துவக் கல்வி பெற்றார். 1769 ஆம் ஆண்டு கோபன்கேஹனில் குருத்துவ அபிஷேகம் பெற்று தரங்கம்பாடி மிஷனுக்கு அனுப்பப்பட்டார். 16 , மார்ச் ,  1771 இல் இந்தியா நோக்கி புறப்பட்ட இவரோடு Wilhelm Jacobus Müller என்ற உடன் ஊழியரும் பயணமானார். 



தரங்கம்பாடி பகுதியில் கல்வி பரப்புதலே இவரது பிரதான நோக்கமாக இருந்தது. ஐரோப்பியர்களுக்கும், இந்தியர்களுக்கும் பள்ளிகளை நிறுவினார். டென்மார்க்கிற்கும், இங்கிலாந்திற்கும் இருந்த மோதல் காரணமாக கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தான் இவரால் பள்ளிகளை நடத்த முடிந்தது. இந்தியா வந்த முதல் ஆறு ஆண்டுகள் மிகக் கடுமையான வறுமையுடன் போராடினார். அதன் பின் செராம்பூரில் கடைப்பிடிக்கப்பட்ட முறைப்படி ஐரோப்பிய பள்ளிகளை கட்டண அடிப்படையில் நடத்தி அந்த வருமானத்தில் தமிழ் பள்ளிகளை நடத்தும் உத்தியை கையாண்டார். நிதி நெருக்கடியினை சமாளிக்க சுதேச ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தினார். கல்வி மீதான இவரது அதீத ஈடுபாடு காரணமாக பணித்தளத்தில் இருந்த பலருக்கு இவருடன் கருத்து வேறுபாடு இருந்தது. 


 அருட்திரு. ஜான் அவர்களுக்கு ஜெர்மானிய மொழி தவிர ஆங்கிலம், தமிழ் மற்றும் போர்த்துகீசிய மொழிகள் நன்கு தெரியும். தரங்கம்பாடியில் வைத்து Christina Sophia Guldberg என்பவரை  27 நவம்பர்  1776 அன்று திருமணம் செய்தார். 42 ஆண்டுகள் இந்தியாவில் இடையறாது பணியாற்றினார். இந்த 42 ஆண்டுகளில் இவர் 20 பள்ளிகளை நிறுவியதாக அறிய முடிகிறது. குறுகிய கால இடைவெளியில் இவரது மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது இவரை உலுக்கிப் போட்டது. அவரது இறுதி காலங்களில் அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது. நுரையீரல் சார்ந்த நோய்களும் இருந்தன. கடைசியில் பக்கவாதம் வந்து 1813 செப்டம்பர் மாதம் முதல் தேதி  மரணமடைந்தார். . தரங்கம்பாடியில் புதிய எருசலேம் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 

பின் குறிப்பு -1 

அருட்திரு. ஜான் அவர்களுடன் பயணித்த Wilhelm Jacobus Müller 24, மே 1734 இல் Waldeck என்ற இடத்தில பிறந்தவர். ஹலே பல்கலைக்கழகத்தில் குருத்துவ பட்டம் பெற்று 1769 இல் கோபன்ஹேகனில் திரு. ஜான் உள்ளிட்ட பலருடன்   பேராயர் Ludvig Harboe என்பவரால் குருத்துவ அபிஷேகம் பெற்றவர். 1771 ஜூன் மாதம் 13 ஆம் தேதி  தரங்கம்பாடி வந்தவர் மனச்சோர்வுடனே இருந்து, பக்கவாதத்தினால்    1771 டிசம்பர் 30இல் இறந்து விட்டார்.1771இன் இறுதி தினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.   இப்படி சொற்ப நாட்களில் இறந்து போன ஒரு கூட்ட மிஷினரிகளில் மிகவும் பரிதவிக்க தக்கவர் அருட்திரு. முல்லர். தரங்கம்பாடி புதிய எருசலேம் சபை வளாகத்தில் இவரது கல்லறை எண் 2. இவர் கல்லறையில் ஏசாயா 45: 15 என்று பொறிக்கப்பட்டுள்ளது. (இஸ்ரவேலரின் தேவனும் ரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக் கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்).

பின் குறிப்பு-2  

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி  அருட்திரு. ஜான் அவர்களின் கல்லறையில் C.S.John 1813 & 4 Children என்கிற குறிப்பு இருக்கிறது. சிறு முயற்சிக்குப் பின் கர்த்தர் அருட்திரு. ஜான் அவர்களுக்கு கொடுத்து, பின்  எடுத்துக்கொண்ட அன்பு குழந்தைகளின் விபரங்கள் கிடைத்தது. 

Julie Susanne- 4 வயது, இறந்த நாள் 8 பெப்ருவரி 1782

Ernst Christian- 2 1/2 வயது. இறந்த நாள் 8 மே 1782

Gottlieb Friederich- 1 1/2 வயது, இறந்த நாள் 10 ஜனவரி 1783

Ernst Gottlieb- 3 வயது, இறந்த நாள் 15 செப்டம்பர் 1787

பின் குறிப்பு-3

அருட்திரு. ஜான் அவர்களின் துணைவியார் Christina Sophia Guldberg எங்கு, எப்பொழுது மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்கிற விவரத்தினை தேடியும் கண்டுபிடிக்க  இயலவில்லை. தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறேன்.

திங்கள், 26 செப்டம்பர், 2022

கல்லறை எண் 14- முன்குறிப்பு


ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது தான் முதன் முதல் இந்த பெயர் எனக்கு அறிமுகமாகியது. 1814, ஜூலை 4ஆம் தேதி ரேனியஸ் மற்றும் ஸ்னார் (Revd John Christian Schnarre) சென்னை வந்து சேருகின்றனர். அப்பொழுது ஒரு குறிப்பு காணக் கிடைக்கிறது. "தரங்கம்பாடியில் இருந்த அருள்திரு. டாக்டர். ஜாண் இறந்து போனார் என்கிற செய்தியே மிஷனரிகளுக்கு முதலில் கிடைத்தது. இவரது வழிகாட்டுதலின் கீழ் மிஷனரிகள் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க பட்டிருந்தது".  இந்த குறிப்பை மொழியாக்கம் செய்த பின்  அருள்திரு.டாக்டர். ஜாண் என்கிற பெயர் என் மனதில் எங்கேயோ பதிவாகிப் போனது. 

ரேனியஸ் ஐயர் உடன்  ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட உடன் ஊழியர் ஸ்னார். இருவரும் ஒன்றாகவே இங்கிலாந்து வந்து, அங்கிருந்து மெட்றாஸிற்கு பயணிக்கின்றனர். ரேனியஸ் திருநெல்வேலி வந்த சில நாட்களுக்கு பின் ஸ்னார் குறித்த செய்திகள் அவரது நாட்குறிப்பில் இல்லை. ஆனால், அவர் துவங்கிய பெண்கள் செமினரியை நடத்தியவர்களில் ஒருவராக திரு.ஸ்னாரின் விதவை மனைவி என்கிற குறிப்பு வருகிறது. இந்த குறிப்பை வாசித்த பின்   ஸ்னார் இறந்து போனார் என்பதை அனுமானிக்க முடிந்தது. இருப்பினும், அவர் எங்கு, எப்பொழுது, எப்படி இறந்தார் என்கிற கேள்விகளோடு அலையும் போது,  ஸ்னார், தரங்கம்பாடிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார் என்பதும் அங்கேயே இறந்து, அடக்கம் பண்ணப்பட்டார் என்பதையும் அறிய முடிந்தது. 




அருட்திரு.ஸ்னார் அவர்களின் கல்லறையை தேடி  தரங்கம்பாடி பயணித்தேன். அங்கிருந்த புதிய எருசலேம் சபை வளாகத்தில், சில நிமிடங்களிலேயே கல்லறை கண்ணில் பட்டது. அந்த சிறு வளாகத்தை சுற்றி வருகையில் கண்ணில் பட்ட மற்றொரு கல்லறை C.S.John 1813 & 4 Children என்கிற பெயர் தாங்கிய கல்லறை. 



இந்த C.S.John தான் நான் முதல் பத்தியில் குறிப்பிட்ட அருள்திரு. டாக்டர். ஜாண், என்பது மின்னல் வெட்டு  போல பளிச்சிட்டது. ஆனால், ஏன் நான்கு குழந்தைகளும் அவரும் ஒரே கல்லறையில் புதைக்கப்பட வேண்டும் என்கிற கேள்வியோடு தரங்கம்பாடியை  சுற்றி அலையும் போது Karin Kryger மற்றும் Lisbeth Gasparski  எழுதிய Tranquebar Cemetries and Grave-monuments எனும் புத்தகம் கண்ணில் பட அதன் ஒளிப்பட பிரதியை வாங்கினேன். அந்த புத்தகத்தில் புதிய எருசலேம் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகளின் வரைபடம் ஒன்று நேர்த்தியாக வெளியிடப்பட்டிருந்தது. அந்த, வரைபடத்தில், அருள்திரு. டாக்டர். ஜாண் என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் Christoph Samuel John அவர்களின் கல்லறை எண்.14.



இந்த கல்லறை எண் 14 குறித்த பின்னோக்கிய பயணமே இனி வரும் பகுதிகள். 

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

பெயர்களுக்கு பின்னால் -4, சுவர் வரி சாலை (Wall Tax Road)

 சீன பெரும் சுவர் தெரியும் நமக்கு. சென்னை பெரும் சுவர் தெரியுமா? 1746 இல் மெட்றாசை பிரான்ஸ் தேசத்தவருக்கு இழந்த ஆங்கிலேயர்கள் மூன்று ஆண்டுகள் கழித்து அதை திரும்ப பெற்ற பின், பாதுகாப்பு விஷயத்தில் அதீத கவனம் செலுத்தினர். 

லாலி பிரபுவின் மெட்ராஸ் முற்றுகை, ஹைதர் அலி தரப்பில் இருந்து வந்த ஆபத்துக்கள் இவையெல்லாம் புதிய கறுப்பர் நகரை சுற்றிலும் சுவர் எழுப்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

1764 இல் துவங்கிய இந்த பணி, சுணக்கத்துடனே நடைபெற்றது. 1767, 69 ஆம் ஆண்டுகளில் நடந்த ஹைதர் அலியின் படையெடுப்புகள் இந்த சுவர் வேலையை தீவிரப்படுத்தின.  பீரங்கிகளும், துப்பாக்கிகளும் நிறைந்த கோட்டைக்கு பதிலாக ஹைதர் அலியின் கண்கள் பொது மக்கள் வாழும் கறுப்பர் நகரம் மீது இருந்தது.

 தெற்கு பக்கம் கோட்டையும் , அதை தாண்டி  எஸ்பிளனேடு எனும் காலி இடமும், கிழக்கு பக்கம் கடலும் இருந்ததால், வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சுவர்கள் எழுப்பப்பட்டன.  

Paul Benfield எனும் ஆங்கில பொறியாளர் இந்த சுவர் கட்டும் பணியை மேற்கொண்டார்.  கருப்பர் நகர சுவர் (The Black Town Wall) என்று இதற்கு பெயர்.

 1772 இல் வேலை முடிவடையும் போது இந்த சுவர் மூன்றரை மைல் நீளம் கொண்டதாக இருந்தது. இதில் 17 காவற்கோபுரங்கள் இருந்தன . அந்த சமயம் வடக்கு பக்க சுவர்கள் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன. மேற்கு பக்கம் முழுவதும் முடிவடையவில்லை.

  வடபக்கத்தில் இருந்து மெட்ராசிற்குள் நுழைய ஏழு வாயில்கள் இருந்தன. இந்த வடபுற  சுவரின் ஒரு சிறு பகுதி மட்டும் இன்றும் "மாடிப் பூங்காவாக" எஞ்சி நிற்கிறது. 

 மேற்கு பக்க சுவரை ஒட்டி 50 அடி அகல சாலை அமைப்பதென்றும், அந்த  சாலையை பயன்படுத்த வரி வசூலிக்கவும் தீர்மானம் ஆயிற்று. எனவே, இந்த சாலைக்கு சுவர் வரி சாலை "Wall tax Road" எனும் பெயர் உண்டாயிற்று. 

                                                                    Wall Tax Road 1901

ஆனால், மக்கள் வரி செலுத்த இணங்கவில்லை.  பல்வேறு விவாதங்களுக்கு பின் வரி வசூலிப்பு  திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், பெயர் மட்டும் Wall Tax Road என நீடித்தது. 

                                                                    Wall Tax Road 1962

வால் டாக்ஸ் ரோடு இப்பொழுது வ. உ.சிதம்பரம் சாலை எனும் புதிய பெயரை பெற்றுள்ளது. 

பெயர்களுக்கு பின்னால் -3, எஸ்பிளனேடு- Esplanade

எஸ்பிளனேடு என்பதற்கு கோட்டைக்கு வெளியிலுள்ள இடம் அல்லது கோட்டை மைதானம் என பொருள் கொள்ளலாம். எதிரியின் வருகையை தொலைவில் இருந்தே  அறிய கோட்டையை சுற்றி காலி இடங்கள் பேணப்பட்டன. ஆங்கிலேயர் ஆண்ட கொல்கொத்தா , மும்பை  உள்ளிட்ட பெருநகரங்கள் பெரும்பான்மையானவற்றில்   ஒரு எஸ்பிளனேடு இருக்கும்.மெட்ராஸில் ஆங்கிலேயர்கள் வடிவமைத்த முதல் தெரு எஸ்பிளனேடு என சொல்லப்படுகிறது. 

                                          Esplanade, Madras around c1870

சென்னைக்கு வந்திறங்கிய ஆங்கிலேயர்கள் 1644-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி முடித்தார்கள். கோட்டையை ஒட்டி கறுப்பர் நகரம் உருவானது. . இடையில் ஆங்கிலேயர்களைத் தாக்கிய பிரெஞ்சுப் படையினர் கோட்டையைக் கைப்பற்றினர். மூன்று ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கையில் கோட்டை இருந்தது. அதன்பிறகு இருதரப்புக்கும் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயரிடம் கோட்டை வந்தது.

அதன் பின்  ஆங்கிலேயர்கள் கோட்டையின்  பாதுகாப்பைப் பலப்படுத்தினர். கோட்டையை ஒட்டி நெருக்கமாக அமைந்திருந்த 8,700 வீடுகளைக் கொண்டிருந்த கறுப்பர் நகரம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு எந்தக் கட்டுமானங்களையும் உருவாக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அந்த எல்லையைக் குறிக்கும் வகையில் 13 தூண்கள்  நிறுவப்பட்டன. அந்த தூண்களில்  ஒன்று மட்டும் ‘1 ஜனவரி 1773’ என்ற நாட்குறிப்பைச் சுமந்துகொண்டு இன்றும்  டேர் மாளிகையின் கீழ் நிற்கிறது.

கிழக்கில் இன்றைய ராஜாஜி சாலையில் தொடங்கி, மேற்கே வால்டாக்ஸ் சாலையில் முடியும் எஸ்பிளனேடு கடந்த நூற்றாண்டில் நகரின் முதன்மை வணிக மையமாக விளங்கியது. எஸ்பிளனேடு கடந்த தற்போது என்.எஸ்.சி போஸ் சாலை என அழைக்கப்படுகிறது.


                                         Esplanade Road Madras – Old Photo 1900


உதவிய பதிவு 

இடம், பொருள், ஆவல்:சு. அருண் பிரசாத் , விகடன் 07-01-2022

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

பெயர்களுக்கு பின்னால் -2, ஏழு கிணறு-Seven Wells

ஏழு கிணறு,  சென்னையின்  முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட குழாய்  குடிநீர் திட்டம்.

  சென்னையின் நீர்ப் பிரச்சனை ஆங்கிலேயர்  கோட்டை கட்டிய காலத்திலேயே இருந்ததுதான். உப்பு நீர் தான் கோட்டையைச் சுற்றி ஒருமைல் சுற்றளவில் கிடைத்திருக்கிறது. இதைச் சரிகட்ட பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார்கள்.பிரெஞ்சுப் போரின் போது பிரெஞ்சுக்காரர்கள் தண்ணீரை வெளியிலிருந்து கொண்டு போவதைத் தடுத்துள்ளனர்.  பிரெஞ்சுகாரர்களிடமிருந்து கோட்டை மறுபடியும் ஆங்கிலேயர் கைக்கு வந்தபோது நீர்ப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட்டது.

 1772இல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்தத் திட்டத்தால் பெத்தநாயக்கன் பேட்டைக்கு வடக்கில் கிணறுகள் தோண்டப்பட்டன. “ஏழு கிணறு அரசு தண்ணீர்த் திட்டம்”  (Seven Wells Government Water Works ) என்ற பெயரில் தண்ணீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன. 16 அடி விட்டம் 23-29 அடி ஆழமுள்ள பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன. அந்தப் பத்துக் கிணறுகளில் மூன்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் அவை கைவிடப்பட்டு, ஏழு கிணறுகள் மட்டுமே எஞ்சின . கேப்டன் பேகர் உடனான ஒப்பந்தம் 21 ஆண்டுகளாக இருந்த போதும் , பேகர் இங்கிலாந்து திரும்ப விரும்பியதால்    1782-ம் ஆண்டு இந்த ஏழு கிணறு தண்ணீர் சேவையை அரசாங்கம் நல்ல  விலைக்கு வாங்கிக்கொண்டது. சென்னை வரலாற்றில் தண்ணீர் விற்று பெரும் பணம் ஈட்டிய முதல் மனிதனாக பேகர் மாறினார்.இவர் பெயரில் ஒரு தெருவும் சென்னையில் இருக்கிறது. 


 ஆரம்பத்தில் கிழக்கிந்திய அரசு ஏழு கிணற்றிலிருந்து பெற்ற தண்ணீரைக் கோட்டைக்கு மட்டும்தான் பயன்படுத்தியது. பின்பு அதை அருகில் இருந்த ராணுவ மையங்களுக்கும் ,பிரசிடென்ஸி குடியிருப்புக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்தது. 1782 ஆம் ஆண்டு முதல் 125 ஆண்டுகளுக்கு  இந்த ஏழு கிணறுகளின் பாதுகாப்பாளராக நிக்கோலஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள் . ஆனால், 1925-ம் வருடம்வரை  பாதுகாப்பாளராக இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  இருந்துள்ளார்கள்



. 18-ம் நூற்றாண்டில் மைசூர் நவாப் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களைத் தென்னிந்தியாவில் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர். 1769-ல் நடந்த போரின்போது அப்பகுதியில் இருந்த குடிநீர்க் கிணறுகளில் விஷத்தைக் கலக்கும் ஹைதர் அலியின் முயற்சியை  நிக்கோலஸ் எனும் படை வீரர் முறியடித்துள்ளார். நேர இருந்த பெரும் ஆபத்திலிருந்து ஆங்கிலேயர்களைக் காப்பாற்றிய அவருடைய துணிவைக் கௌரவிக்கும் விதமாக, அந்த நிகழ்வுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு கிணறுகள் தண்ணீர் நிலையத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  தலைமுறை தலைமுறையாகத் தன் குடும்பத்தின் வசம் இருந்த அந்தப் பணியை 1925-ம் ஆண்டு எவ்லின் நிக்கோலஸ் அரசாங்கத்திடம் ஒப்படைத்து முடித்து வைத்தார்.

வ்லின் நிக்கோலஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் 


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

பெயர்களுக்கு பின்னால் -1 , ஜார்ஜ் டவுன் - George Town

 1639இல் புனித ஜார்ஜ் கோட்டை உருவான பின், இந்திய நெசவாளர்களும், வியாபாரிகளும் கோட்டைக்கு அருகில் குடியேற துவங்கினர். இந்த குடியேற்ற பகுதி கறுப்பர் நகரம் (Black Town) என அழைக்கப்பட்டது. குத்து மதிப்பாக இப்பொழுது சென்னை உயர் நீதிமன்றம்  இருக்கும்  பகுதியில் இந்த கறுப்பர் நகரம் இருந்துள்ளது. 

Wheeler Tollboy's map of Madars in 1733

பிரெஞ்சியர்கள் 1746 இல் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றினர். மூன்று ஆண்டுகள் கோட்டை பிரெஞ்சியர் வசம் இருந்தது. 1749 இல் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தது. இந்த காலகட்டத்தில் கறுப்பர் நகரம் அழிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் அதே இடத்தில கறுப்பர் நகரம் மீண்டும் அமைய கிழக்கிந்திய கம்பெனி விரும்பவில்லை. எஸ்பிளனேட் பகுதிக்கு வடக்கே இருந்த திறந்தவெளியில் புதிய கறுப்பர் நகரம் உருவானது. முத்தியால்பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை பகுதிகள் இந்த புதிய கறுப்பர் நகராக ஆரம்பத்தில் அறியப்பட்ட போதும், நகரம் வளர, வளர இதன் எல்லைகளும் மாறிக்கொண்டே இருந்தது. இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட நிறவெறி பெரும் காரணமாக கருதப்பட்டாலும் வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. காரணம் என்னவாக இருந்தாலும் இந்த வெறுப்பூட்டும்  பெயர் 20 ஆம் நூற்றாண்டு   வரை நீடித்தது. 


                                                                Faden's Map of Madras 1814


1906 ஜனவரியில், வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் ஆல்பர்டின் வருகையை ஒட்டி இந்த பகுதியை  பெயர் மாற்றம் செய்ய பரிசீலிப்பதாக மெட்ராஸ் அரசு அறிவித்தது. பல்வேறு விவாதங்களுக்குப் பின், புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் இருப்பதாலும், ஜார்ஜ் இளவரசரின் வருகையை ஒட்டியும் இந்த பகுதிக்கு "ஜார்ஜ் டவுன்" என பெயரிடுவது சரியாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. ஜனவரி 24 முதல் 28 வரையிலான தனது பயணத்தை முடித்து இளவரசர் புறப்படும் நேரத்தில் அவர் ஒப்புதல் பெற்ற பின் ஒரு சிறப்பு கெசட் மூலம் மெட்றாஸ் அரசு இந்த பெயர் மாற்றத்தை அறிவித்தது.


                                 Photograph of Black Town in Madras, taken by Frederick Fiebig in c.1851.



உதவிய பதிவு 
The Madras Black Town- Origins and Name Change- Vikram Raghavan

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

காலத்தின் காற்றில் கரைந்த திருநெல்வேலி குடியேற்றம்???

19ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி பகுதியை சார்ந்தவர்கள் வட சென்னைக்குள் ஒரு குடியேற்ற பகுதியை உருவாக்கி இருந்தனர் என்ற செய்தி வியப்பாக இருந்தது. Madras Musings Nov 16-30, 2017 இதழில் Lost landmarks of Chennai என்கிற தலைப்பில் Sriram V என்பவர் எழுதிய கட்டுரை கண்ணில் பட்டது. அவர் இந்த கட்டுரையை தன்னுடைய வலை பூவிலும் பதிவிட்டு இருந்தார். நெல்லை மண் சார்ந்தவன் என்கிற அடிப்படையில் காணாமல் போன அந்த பகுதியை குறித்த தேடலே இந்த பதிவு. 

 நமக்கு கிடைத்த ஆவணங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால் அந்த பகுதிக்கு தமிழ் பெயர் இருந்ததா? ஆம் எனில், என்ன பெயர் என்பதை அறிந்து கொள்ள இயலவில்லை . 1862 ஆம் ஆண்டின் சர்ச் மிஷனரி அட்லஸ் உதவிகரமாக ஒரு வரைபடத்தை வழங்குகிறது, அதில் ராயபுரத்திற்கு மேற்கே உள்ள குடியேற்றம் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் அது பழைய வண்ணாரப்பேட்டை இருக்கும் இடமாக இருக்கும். (இந்த அட்லஸை உருவாக்கிய லேக், எட்வர்ட் ஜான் குறித்து பின்பு ஒரு தருணத்தில் விரிவாக காணலாம்)
எரிக் பிரிகென்பெர்க்  (Robert Eric Frykenberg) தனது Christianity in India நூலில் 1845 இல் நிகழ்ந்த நல்லூர் கலவரம் குறித்து விரிவாக பதிவு செய்துள்ளார். கலவரத்திற்கு பின்னான கைது நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட இருவரை சென்னைக்கு தேடி வந்து திருநெல்வேலி குடியேற்றத்தில் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். 

 மார்ச் 8, 1848 அன்று, சி.எம்.எஸ் மிஷினரி பில்டர்பெக் (JOHN BILDERBECK ) திருநெல்வேலி குடியேற்றம் சென்று தான் புத்தாண்டு தினத்தில் ஞானஸ்தானம் கொடுத்த ஒருவரின் உறவினர்களை சந்தித்த சம்பவத்தை தனது நாட்குறிப்புகளில் எழுதியுள்ளார் . 

 இவர் இந்த பகுதியில் பணி செய்தவர் என்பதால் அவர் நாட்குறிப்பில் நிறைய முறை திருநெல்வேலி குடியேற்றம் குறித்து எழுதுகிறார்.
 பில்டர்பெக்  நாட்குறிப்பு 1849, அக்டோபர் 16 
 "At half- past 5 A.M. I left my house for the Tinnevelly Settlement.I first examined the School- room, which lately underwent repair, and then got into conversation with some bystanders out side, asking them whether they understood the object for which such Schools were established.

" ரெவ். ஞானமுத்து நாட்குறிப்பு ஆகஸ்ட் 10 1849  
 "This morning I visited Surkunen, who was very ill at the Tinnevelly Settlement, and shewed him how the Lord is good, even in His sending afflictions to us. I was very glad to see that he was so patient as to utter no word of complaint. His trials had been various.The Tinnevelly Settlers did not allow him to draw water from any well which they made use of, and abused him and his family. In addition to this, his wife,having heard of her sister's death in England, fell sick ; and at last, being himself laid on a long sick bed, he was compelled to go to his native land, Tinnevelly. Under these trials, I was glad to observe in him a Christian Disposition, a quiet mind,and fervent spirit." 

 1855 ஆம் ஆண்டின் மிஷனரி பதிவில் திருநெல்வேலி குடியேற்ற்றம் கறுப்பர் நகர சபையின் பகுதியாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. 1854 ஆம் ஆண்டு மிஷினரி பில்டர்பெக் எழுதிய அறிக்கையின் ஒரு சிறு பகுதி இது. "Indeed, Tinnevelly Settlement, Mount Road, and South Beach, are like satellites, and it is hoped will never be removed from the influence of this Mission. Yet the field is the Lord's, and the servants thrust into it are His, and therefore it matters little how or where He portions out His work to them." 

 இதே புத்தகத்தில் 1854 ஆம் ஆண்டில் இறந்தவர்கள் குறித்த பட்டியல் கிடைக்கப்பெறுகிறது. அதில் மிஷினரி பில்டர்பெக் 12 செப்டம்பர் 1854 ஆம் ஆண்டு நிகழ்ந்த அருளாயி என்பவரின் மரணத்தை கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார். 
"This day interred the remains of Aroolai at the burial-ground attached to Korakapettah.. She was a native of Tinnevelly, and was baptized, I think in the time of the late Mr. Rhenius. She and her only son came to Madras several years ago, along with her married daughter, and settled in the Tinnevelly Settlement. She, stood firm in her Christian profession, though she was often persuaded to become a heathen by her children and grand-chil dren, with whom she lived until her death, as well as by her relatives and neighbours. She openly professed the name of Christ among the heathen, and used to attend to the means of grace very regularly. In her latter days she suffered much from different indispositions, and finally from dysentery, which put an end to her earthly career on September 11, 1854. During her illness she was visited and spoken to several times, and she manifested a warm attachment to her crucified Saviour to the very end. I sincerely trust that she has obtained the pardon of her sin from God through Jesus the Saviour of sinners, and entered into eternal rest." 

 இந்த ஆண்டு Miss Giberne's  என்பவர் Tinnevelly Settlement பெண்கள் பள்ளியின் பொறுப்பாளராக இருந்ததை அறிய முடிகிறது. கிபர்ன் தன்னிடம் பயின்ற மூன்று மாணவிகளின் இறப்பை உருக்கமாக பதிவிட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் ஆசிரியைகளை  உருவாக்கிய இந்த கிபர்ன்  குறித்து அதற்கு முந்தைய ஆண்டின் மிஷினரி பதிவில் காண முடிகிறது. 
"Miss Giberne , who devoted herself several years ago to female education in India, and for some years conducted a Female Institution in Tinnevelly, until she was compelled by ill health to visit Europe, has again resumed her zealous exertions in the cause dear to her heart. She has been appointed to commence a Female School at the Tinnevelly Settlement, in Madras, which may one day become a model School in that interesting community. At the end of the year she had 18 children, in addition to 5 boarders, whom she has taken into her house.

 1958 ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் நடந்த தென் இந்திய மிஷனரி மாநாட்டில் இந்த குறிப்பை காணமுடிகிறது   
"About this period Miss Giberne transferred her services from Tinnevelly to Madras . She opened a Boarding School for girls at Royapuram and a Day School at the Tinnevelly Settlement . Mrs . Bilderbeck’s School was mergedinto this new one . These schools now contain 50 scholars , of whom 30 are Boarders . In September last, Miss Meredith came out from England to assist Miss GIberne in this work , and is now preparing for her duties by studying the language."

 மேலும் இதே பதிவில் திருநெல்வேலி குடியேற்ற சபைக்கு நிலம் வாங்கியவர் குறித்து வாசிக்க முடிகிறது   "Mr .Elouis also had to leave on account of health , but before his departure he succeeded in securing a plot of ground in the Tinnevelly Settlement, two miles to the north of Madras , and so led to the continuance of the work in that neighboured .   (Mr.Elouis அவர்களின் முழுப்பெயர் Rev. J. J. H. Elouis) 

 1959 ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் நடந்த தென் இந்திய மிஷனரி மாநாட்டில் சி எம் எஸ் நிறுவனத்திற்கு Black town, John Perira's, tinnevelly settlement,Mount Road ஆகிய நான்கு இடங்களில் சபைகள் இருந்ததாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. (ஜான் பெரைரா குறித்தும் , ஜான் பெரைரா சிற்றாலயம் குறித்தும் விரிவாக எழுத வேண்டும்) 

 1865 ஆண்டின் சி எம் எஸ் அட்லஸ் கீழ்கண்ட விபரங்களை விரிவாக தருகிறது. " To the north is the important suburb of Royapūram , embracing what is designated the Tinnevelly Settlement, from the circumstance that, some years ago ,many emigrants from that district had planted themselves there, though their numbers are now much decreased . This locality is also occupied by the Society, where it maintains a Native English School , used also as a Chapel and Preaching House, and also a Native Girls'- school,admitting both boarders and day scholars." 

 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்  பழைய வண்ணாரப்பேட்டை சென்னைக்கு குடியேறும் நாடார் இனத்தவரின் இதய பகுதியாக இருந்ததால், இங்கு ஆரம்ப காலத்தில் குடியேறியவர்களும் இதே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என நம்ப இடம் இருக்கிறது.   எரிக் பிரிகென்பெர்க்  (Robert eric frykenberg) தனது Christianity in India நூலில் கீழ்க்கண்ட தகவலை தருகிறார் 
 " Converts who became literate turned to new occupations and drifted to towns and cities. Many who migrated to Madras,for example, became ever more independent and prosperous, to such an extent that by the 1840s an area adjacent to George [Black] Town became known as the ‘Tinnevelly Settlement’. Savings accumulated in Madras enabled the purchase of landholdings and proper houses."    

திரு. ஸ்ரீராம் 1900 வரை மாநகராட்சி ஆவணங்களில் குறிப்பாக காலரா தாக்குதலின் முக்கிய பகுதியாக இது இருந்ததாக  தகவல்களை தருகிறார். ஆனால் அது குறித்த ஆவணங்கள் எனக்கு கிடைக்கவில்லை என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை. 

 1840 முதல் 1865 வரை பல்வேறு மிஷினரி ஆவணங்களில் பேசப்பட்ட திருநெல்வேலி குடியேற்றம் அதன் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. புது பெயர் பெற்றதா? அல்லது அழிந்து போயிற்றா? கிபர்ன் துவங்கிய பெண்கள் உறைவிட பள்ளி என்னவாயிற்று? எலூயிஸ் திருச்சபைக்கு வாங்கிய நிலம் என்னவாயிற்று? ஆங்கில பள்ளியாகவும், சிற்றாலயமாகவும் செயல்பட்ட கட்டிடம் என்னவாயிற்று ? 

 ஒரு உறக்கமில்லா இரவின் நீண்ட தேடலுக்கு பின் உறங்கச் செல்கிறேன். 
புதிய  விடியல் கண்ணுக்கு தெரிகிறது. 

சனி, 13 ஆகஸ்ட், 2022

சென்னையில் ராக்லாண்ட் வசித்த வீடு

The engravings represent the view from the verandah of the usual sitting-room in the Church Mission-house at Madras, and will help you more thoroughly to understand the scenes that are constantly passing before the eyes of those who are dwelling in heathen countries. The Church Mission-house is in Black Town, in the midst of East-Indians, Heathen, and Mahomedans, and is the residence of the Secretary of the Madras Corresponding Committee, the Rev. T. G. Ragland. The room from which the present view is taken is on the first floor, facing the east, and, as the surrounding houses are all low, it has the advantage of the sea breezes. You will observe the masts of some vessels lying in the Madras Roads, and the sea itself would be seen from the verandah, were it not for the buildings on the beach. On the left of the picture are the minarets of a Mahomedan mosque, and the roofs of a multitude of native houses. standing in streets, or rather lanes, through some of which an European would not like to pass. The right-hand half of the picture is occupied by a small pagoda, with the houses inhabited by the Brahmins belonging to it. Were you to step out into the verandah, and look round further to the right, you would see the small cupola of a Church belonging to the Armenian Christians, who are ; and close by it, the Cathedral and Nunnery of the Irish Roman Catholics. -
Church Missionary Paper, No. CXXX. Midsummer, 1848.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகள்- 1. சுவிஷேசகனாக செல்லும் முடிவு

 


1790ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ரேனியஸ் ஐயரின் பிறந்த தினம்.  சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ் என்பது இவரது முழுப் பெயர்.  மேற்கு பிரசியாவில் உள்ள  க்ரொடன்ஸ் கோட்டை இவரது பிறந்த ஊர். பிரசியா இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லை. ஒரு காலகட்டத்தில் ஜெர்மனியின் வரலாற்றை செதுக்குவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தேசம், பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பின் இப்பொழுது,  போலந்தின் ஒரு பகுதியாக உள்ளது.  


 இவரது தந்தை ஒதோ ரேனியஸ் பிரசிய ராணுவத்தில்  தரைப்படை அதிகாரியாக இருந்தார்.  சார்லஸ் ரேனியசுக்கு ஆறு வயதிருக்கும்போது மெரின்வெர்டர் என்ற இடத்தில் இவரது தகப்பனார் இறந்து போனார். சார்லஸ் ரேனியசும் , அவரது  மூத்த சகோதரன் ஜான் வில்லியம் ரேனியஸும்   இளைய சகோதரர்  ஆடம் பிரெட்ரிக் ரேனியஸும் , இளைய சகோதரி சோபியா காதரின் ரேனியஸும் இளம் வயதிலேயே தந்தையற்றவர்கள் ஆனார்கள்.  தந்தைக்குப் பிறகு நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றும் பொறுப்பு அவரது தாயின் தலையில் விழுந்தது. பற்றாக்குறையிலும் தனது தாய் தங்களை அன்போடும் ஆதரவாகவும் கவனித்துக் கொண்ட விதம் பற்றி ரேனியஸ் மிகவும் பெருமித்ததத்தோடு  அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.


ரேனியஸ் தனது 14ம் வயதுவரையில் மெரின்வெர்டரில் உள்ள  கதீட்ரல் பள்ளியில் படித்தார். பிறகு மூன்று வருடங்கள் கோனிங்ஸ்பெர்க் நகருக்கு அருகிலுள்ள பல்கா என்ற ஊரில் அரசு அதிகாரியாக இருந்த அவருடைய உறவினரின் அலுவலகத்தில் வேலை செய்தார்.  1807ம் ஆண்டின் வசந்த காலத்தில்  மெமெல் என்ற இடத்துக்கு அருகில் அவரது வயது முதிர்ந்த பெரியப்பா வில்ஹம் ஆண்ட்ரியா ரேனியசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றார். பச்மானில் உள்ள பெரியப்பாவின் எஸ்டேடில் கிடைத்த உபசரிப்பை குறித்து " ஒரு தகப்பனின் அன்போடு நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஒரு மகனுக்குரிய உரிமைகளை அனுபவித்தேன்" என்று எழுதுகிறார் ரேனியஸ்.   இதே ஊரில் தனது பெரியாப்பாவுடனே  அவரது எஸ்டேட்டைக் கவனித்துக்கொண்டு இருந்திருந்தால் ஒருவேளை, , அவரது சொந்த   தேசத்தில் கிடைத்தற்கரிய ஒரு வாழ்வாக அவருக்கு அமைந்திருக்கும்.


ரேனியஸ் தனது பெரியப்பாவை பற்றிய பழைய நிகழ்வுகளைப் பேசும்போதெல்லாம் அது பசுமையான நிகழ்வுகளாவாகவே இருந்தன.  பச்மன் ஊரில் தான் அனுபவித்த அன்பையும் ,கனிவையும்  அவர் எப்போதும் மறந்ததில்லை. எனினும் அந்த சமயம் , அவருக்குள் உறைந்திருந்த "உண்மையான மதம் மற்றும் கறைபடாத வாழ்வு" குறித்த தேடல் மற்ற எல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாகின. அவர் அனுபவித்த நிறைவான இறைவிசுவாசம் அவரை எப்போதும் மன மகிழ்ச்சியாக வைத்திருந்தது. ஒரு இடத்தில் அவர் குறிப்பிடும்போது, 


"1807 ஆண்டு வரையிலான என் வாழ்வை திரும்பிப் பார்த்தால், "மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது" என்கிற வேத வசனம்  எத்தனை உண்மையானது  என்பதை என் வாழ்வின் அனுபவங்கள் ஊடாக அறிய முடிந்தது. நான் வளர வளர  என்னுள் இருந்த அசுத்தங்களும்  நாளுக்கு நாள் வளர்ந்தன.   நான் எனது நிலையைப் புரிந்து கொள்ளவோ, அறிந்துகொள்ளவோ இல்லை. கடவுள் குறித்த சிந்தையின்றி  வாழும் உலக இயற்கையின்படி நானும் அதன்  இயல்பான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னை அறிந்தவர்களும் என்னோடு தொடர்பு கொண்டிருந்தவர்களும் என்னை நல்லவனாக, உபயோகமானவனாக நினைத்திருந்தார்கள். அவர்கள் புலன்களால் உணர்ந்து கொள்ளக் கூடியவைகளையே அவர்கள் கண்டார்கள். உள்ளிந்திரிங்களை ஆராய்ந்து பார்க்கிறவருக்கு முழுமையாகவும், பரிசுத்த ஆவியினாலே நடத்தப்படுகிறவர்களுக்கு ஓரளவும் சாதாரணர்களுக்கு மறைக்கப்பட்ட இருதயத்தின் ஆழங்களுமே  தெரியும்." 


----------------------------------------------------------------------

"Memoir of C.T.E. Rhenius, by his son by J. Rhenius"  என்கிற நூலை  எழுதியது அவரது மகன் J.ரேனியஸ் என்று அந்த நூலில் உள்ளது. இது ரேனியஸ் ஐயரின் இரண்டாவது மகனான யோசியா ரேனியஸ் (Josiah Rhenius) என்று அனுமானிக்கமுடிகிறது. இவர் ரேனியஸ்  சென்னையில் இருக்கும் போது 1818 இல் பிறந்த இரண்டாவது  குழந்தை. இவருக்கு முன்னர் பிறந்த  தியோதேஷியா இரண்டு வயதுக்கு முன்னதாகவே இறந்து விட்டதால், உயிரோடிருந்த குழந்தைகளில் J.ரேனியஸ் தான் மூத்தவர். இஸ்லிங்டனில் இருந்த சி எம் எஸ் பயிற்சி பள்ளியில் பயின்ற இவர், ஸ்காட்லாந்து திருச்சபையில்  குருவானவராக பணியாற்றி 1878 இல் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்கில் காலமானார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மனிதர்கள் முன் நீதிமானாக நடந்து கொள்ளுவதால், இறைவனுக்கு  ஏற்புடையவனாக மாறமுடியாது  என்பதை புரிந்து கொண்ட ரேனியஸ் தன்னைத் தான் அறிந்துகொள்வதில் படிப்படியாக நடத்தப்பட்டார். உலக ஞானத்துக்கும் , கிறிஸ்துவின் சிந்தைக்கும் நடுவே ஆவியில் நிகழ்ந்த பல்வேறு போராட்டங்களுக்குப் பின்,   பழைய மனிதனுக்கும் புதுப்பிக்கப்பட்ட மனிதனுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் முடிவில், நீங்காத மன அமைதியில் மகிழ்ந்திருக்கும் அனுபவத்தை  ரேனியஸ் பெற்றார்.  இந்த மாற்றம் பொதுவில் நடப்பது போல படிப்படியாகவோ, நுட்பமாகவோ நிகழாமல் , வல்லமையோடும் , தெளிவோடும் நிகழ்ந்தது. இதனால் , தன்னுள் நிகழ்ந்த மாற்றம் குறித்தோ , அது ஏற்ற  காலத்தில் நிகழ்ந்தது என்பது குறித்தோ  எந்த சந்தேகமும் அவருள் இல்லாமல் போயிற்று .  மத வெறி என்று உலகத்தாரால் குற்றஞ்சாட்டப்படும் ஆபத்து இருந்தும் ,  கருத்துருவாக்கத்தில் , நம்பிக்கையில், ஆளுமையில்  சுருங்கச் சொன்னால் ஒரு முழு மனிதனுள் மெய்யாகவே ஒரு பெரு மாற்றம் நிகழ்ந்த சம்பவம் இது. இந்த மாற்றம் பரிசுத்த ஆவியின் செயலாற்றலால்  மட்டுமே நிகழ்ந்திருக்க  முடியும். இது குறித்து ரேனியஸ் விசுவாசித்த அல்லது ஒப்புக் கொண்டபடி "மனிதர்களால் அல்ல ,  இறைவனால்" சாத்தியப்பட்டது.


 பின்னாட்களில் திரு.ரேனியஸின் ஆரம்பகால அனுபவத்தை குறித்து கவனிக்கும் போது அவர் இவ்வாறு எழுதுவதை காண முடிகிறது.

 

" தெய்வீக காரியங்கள் குறித்த அறிவில் நான் நடத்தப்பட்டதால் 1807 ம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு.  இந்த  சூழ்நிலையை  நான் விளக்க முற்பட்டால் அது நீண்டதாக இருக்கும். நம் ரட்சகரின் ஒரு வசனம் நிறைவேறுவதை என் சொந்த அனுபவத்தில் மறுபடியும் கண்டேன். "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்கிற வசனமும்  ‘என்னைப் பின்பற்றி வா‘ என்ற  கட்டளையுமே என் ஆத்துமாவை மீட்கும் மாற்றத்தை என்னுள் கொண்டு வர காரணாமாயிருந்தன . கிறிஸ்து யேசுவில் இருந்த , ஆண்டவரின் கிருபை என் உள்ளத்திலும் வாசம் செய்ய துவங்கி, சுவிசேஷத்தின் தூய ஒளியில் என்னை தெளிவுபடுத்தியது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." என்கிற யோவான் 3 ஆம் அதிகார வசனத்தை என்னால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடிந்தது .


நித்திய வாழ்வும் , மெய்யான தேவனுமாக எனக்கு வெளிப்படுத்திய கிறிஸ்து ஏசுவின் ஆவியானவர் என் இருதயத்தில் திறந்த வாசலை கண்டதோடு உறுதியான முடிவோடு அவரைப் பின்பற்றும் ஈர்ப்பைத் தந்தார். 

ஒவ்வொரு நாளும் நான் என்னையும்,  என் தீவிர பாவ நிலைமையை உணரும் அறிவிலும் வளர்ந்தேன். ஏழைப் பாவிகளை நோக்கிய தேவனின் அன்பு மற்றும் கிறிஸ்துவின் மூலமாக செயல்படுத்தப்பட்ட மீட்பு குறித்த அறிவிலும் மேம்பட்டேன். என்னை நான் ஒப்புவித்த ஆசிர்வாதமான ஆவியானவர் மூலமாக, இயேசுவை பின்பற்றவும் , எதிர்காலத்தில் பாவத்திலிருந்து விலகவும் , என் ஆத்துமாவையும் , சரீரத்தையும் அவற்றின் எல்லா வல்லமையோடும் நேர்மையின் பாதையில் நடக்க அர்ப்பணிக்கவும் முடிவெடுத்துக் கொண்டேன்.   சுருக்கமாக சில வார்த்தைகளில் சொல்லுவதானால், இயேசு கிறிஸ்துவின் மீதான உயிர்ப்புள்ள விசுவாசம் என்னுள்  உருப்பெற துவங்கியிருந்தது. "


வெளியரங்கமான நீதி மற்றும் ஒழுக்கம், இவற்றின் மீது சார்ந்திருக்கும் மாயை குறித்த சில கருத்துக்களுக்குப் பின் ரேனியஸ் தொடருகிறார் ..............


“நான் இப்பொழுது என்னை படைத்தவரோடும் ,மீட்டவரோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வழியை நித்திய வாழ்வு குறித்த வேத  வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை  கண்டேன். சரீர பிரகாரமான ஞானத்தை மேற்கொள்ளும், புறந்தள்ளும் வல்லமை அதில் இருப்பதை கண்டு கொண்டேன். மட்டுமல்லாது, இயேசு கிறிஸ்து கடவுளும் , தேவனுமானவர்  என்பதையும், அதே நேரம் மாம்சமானார் என்பதையும் என் சொந்த அனுபவத்தில் கண்டு உறுதி செய்து கொண்டேன்.  என்னால் இதை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் விசுவாசிக்க முடிந்தது. தேவனின் வல்லமையால் இந்த விசுவாசம் என்னுள் சுடர் விட்டு எரிந்தது. . என் ரட்சகர் ஆட்சி செய்யும் மேலானவைகளை என் இருதயம் தேடுவதை உணர்ந்தேன். அவரில் நான் களிகூர்ந்தேன். அமைதியாக அவரோடு தரித்திருக்கும் தருணங்களில் அவரது அன்பை தியானிக்க முடிந்தது. சத்தியம் எதுவென்று எனக்கு தெரிந்திருந்தது. நானும் அந்த சாத்தியமாகவே மாற விரும்பினேன்.. 


எனது வாழ்வின் இந்த மகிழ்வான தருணங்கள் குறித்து நான் வேறென்ன சொல்ல முடியும்? இது  நான் விளக்கிச் சொல்ல கூடாததாக இருக்கிறது.  இதை என்னில் நிகழ்த்திய, ஒரு சிறந்த பணியை துவங்கிய , அவரைப்  பற்றி நான் என்ன சொல்லுவேன்?  துதிக்கப்படுவதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார். நானோ இன்னும் நிறைவற்றவனாக,  பாவத்தால் ஏராளமாக கறைபட்டவனாக இருக்கிறேன். உண்மையில் இது என் தேவனின் முன் என்னை தாழ்த்துகிறது. அதே நேரம்,   உலகம்  தரக்கூடாத, உலகத்தால் மறுக்கப்பட்ட என் ரட்சகரின் குணமாக்கும் வல்லமையை நான் உணர வைத்தது. கிறிஸ்துவின் அன்பான கிருபை என்னை அந்த மகிழ்ச்சிக்கு நேராக  மென்மேலும் நெருங்கிவரச் செய்யும் என்றும், அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துவைப் போல மாற வைக்கும் என்றும் இந்த வசனத்தின் மூலம் நான் உறுதியாக நம்புகிறேன்.அவருக்கே புகழும் மகிமையும் உண்டாகட்டும். அறியாமையினாலோ, அழுக்கினாலோ, இந்த உலகம் முழுவதும் அவருக்கு எதிராக வந்தாலும், அவரே கர்த்தர் என்பதை நான் மறுதலிக்க கூடாதபடி என் அனுபவங்கள்  எனக்கு வல்லமையை தரும் .அவரே எல்லாவற்றிக்கும் சதாகாலமும் தேவன்."


இப்படியாக, எப்படி தான் ஆழ்ந்த , பரிசுத்தமான இறை நம்பிக்கை குறித்த கருத்துக்களை  பெற்றுக் கொண்டேன் என்பதனை ரேனியஸ் உறுதியாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறார். கிறிஸ்துவின் தெய்வீக தன்மை குறித்த சந்தேகங்களினால் அவர் குழம்பியிருக்க வேண்டும் என்பதனை முந்தய பத்திகளில் இருந்து உணர முடியும்.  அந்த ஜெர்மனியாரின் எண்ணம் , இயல்பாகவே இந்த பகுதியை குறித்து  தீர ஆராய  விழைந்தது. ரேனியஸ் வேறு ஒரு இடத்தில் குறிப்பிடுகிறபடி, உள்ளார்ந்த நம்பிக்கையின்படி மாத்திரம் இந்த பழமையான மதத்தை பின்பற்ற அவர் முன்வரவில்லை. அயர்ச்சி ஊட்டக்கூடியது என்று நன்கு தெரிந்தும் "மிகவும் புரிந்துகொள்ள முடியாத இறைத்தன்மை" குறித்து பொறுமையாக கற்றுக் கொள்கிறார். ஞானத்திற்காகவும் ,  வழிநடத்தலுக்காகவும் ஜெபத்தில் தரித்திருக்கிறார். மிகவும் குழப்பமான, சந்தேகம் நிறைந்த ஒரு  தருணத்தில், ”அவிசுவாசம் எப்படியாய் என்னை துயரப்படுத்துகிறது .ஒரு முன்னணையில் கவனிப்பாரற்றுக் கிடந்த, எல்லா குழந்தைகளையும் போன்ற ஒரு குழந்தையை நாம் ஆராதிக்க  முடியுமா?  ஆனால் பயமுறுத்தும் அவிசுவாசம்  என்ற இந்த எதிரிக்கு  தேவ வசனமும் , ஜெபமுமே என் போராயுதங்கள். "என்று குறிப்பிடுகிறார்.  இந்த அவநம்பிக்கையும், சந்தேகமும் நிறைந்திருந்த இந்த காலகட்டம்  அவரை சுயபரிசோதனைக்குள் நடத்தி, இறுதியில் அவரது விசுவாசத்தில்  உறுதிப்படுத்தியது. முழுமையான நம்பிக்கையும், மகிழ்ச்சியாக அது நிறைவடைந்தது.


ஆழ்மனதில் அமைதியையும், உறுதியான விசுவாசத்தையும் பெற்ற பின், உள்ளத்தில் நிறைந்திருந்த அன்பும், ஆர்வமும் ஒரு புதிய கோட்பாட்டில்  வெளிப்பட்டது .அது தனது எஜமானரின் விருப்பத்தை உறுதியோடும், அவருடைய கிருபையோடும், மாம்சத்தோடும், ரத்தத்தோடும் முரண்பாட்டாலும் , தன்னுடைய எல்லா பொறுமையும் , சுயத்தையும் கொடுக்க வேண்டி வந்தாலும் நிறைவேற்றுவது என்பதாகும்.  தனது பெரியப்பா வீட்டில் ஆவிக்குரிய புத்தகங்களை  வாசித்து மகிழ்ந்திருந்த இந்த காலகட்டத்தில், மிஷினரி சரிதைகள்  ,   குறிப்பாக  யுனைட்டட் பிரதரன்  மற்றும் மொரேவியன் திருச்சபை குறித்த நூல்கள்   அவரது கவனத்தை ஈர்த்தன.. 

----------------------------------------------------------------------

யுனைடெட் பிரதரன் என்பது 1760 களில் துவங்கிய ஒரு கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம். "நாம் எல்லோரும் சகோதரர்கள்" என்பது தான் இதன் அடிப்படை கோட்பாடு. ஆரம்பத்தில் ,இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருந்த விவசாயிகள் பகுதி நேரங்களில், சம்பளம் ஏதுமின்றி  குதிரைகளில் சென்று கிறிஸ்துவை அறிவிப்பதை தங்கள் பணியாக மேற்கொண்டனர். படிப்படியாக இது பெரிய மிஷினரி அமைப்பாக ,திருச்சபையாக வளர்ந்தது. ரேனியஸின் திருநெல்வேலி செயல்பாடுகளை உற்று நோக்கின்னால் இந்த "யுனைடெட் பிரதரன்" ஊழிய வழிமுறைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதை காணலாம். "யுனைடெட் பிரதரன் " நிறுவிய திருச்சபைகளே மொரேவியன் திருச்சபைகள். இந்த பழையமான சீர்திருத்த திருச்சபையில் இன்றும் உலகம் முழுக்க 7,50,000 உறுப்பினர்கள் உள்ளனர். அறியப்படாதவர்களுக்கு சுவிஷேசம் அறிவித்தலை இன்றளவும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.


----------------------------------------------------------------------


அந்த  வெளியீடுகளின் சாராம்சம் அவரை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் துவங்கின என்பதை அறிய முடிகிறது.. மற்றவர்கள் என்னமும் செய்துவிட்டுப் போகட்டும். உண்மை தேவனின் ரட்சிப்பை  கிறிஸ்து வழியே அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பது தனது அடிப்படை கடமை அல்லவா என்கிற கேள்வி அவருக்குள் தீவிரமாக எழுந்தது. தனது பணி என்று ரேனியஸ் கருதியதை அவரது குடும்பத்தினரால் புரிந்து கொள்ள முடையவில்லை. ஆனால் அவரது பெரியப்பாவிற்குள் ஒரு நண்பன், ஒரு நல் ஆலோசகன் இருப்பதை ரேனியஸ் உணர்ந்தார். ஆரமபத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும், விரைவில் தேவ சித்தத்திற்கு மகிழ்ச்சியுடனும் , மனமுவந்தும் அர்ப்பணிக்க குடும்பத்தினர் இணங்கினர். பெரியப்பாவும் ரேனியஸும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்த போதிலும், தங்களுடைய விருப்பங்களையும் , உலக பிரகாரமான ஆர்வங்களையும், விட்டு விட்டு தெளிவாக உணரப்பட்ட  தேவ வழிநடத்துதலை மட்டும் பின்பற்றுவது என முடிவெடுத்தனர். இதன் பின் அநேக  ஆண்டுகள் அவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. வயோதிகம் காரணமாக பெரியப்பாவின்  கண்பார்வை மங்கி, கைகள் நடுங்கத் துவங்கியபோதும் , அவர் தன்னுடன் இருந்தவர்களுக்கு கடித சாராம்சத்தைச் சொல்லி எழுதவைத்து, நடுங்கும் தன் கரங்களால் கையெழுத்தை மட்டும் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்.

. ரேனியசின் மனப்போராட்டங்கள் பற்றிய சில குறிப்புகளை அவர் ஆரம்ப காலங்களில் எழுதிய நாட்குறிப்புகளின் சில பகுதிகளை மொழியாக்கம் செய்யும் போது அறிய முடிகிறது. 


---------------------------------------------------------------------

ரேனியஸ் 17 ஆம் வயது முதல் எழுதிய நாட்குறிப்பின் பாகங்களை நாம் காண முடிகிறது. அந்த கால கட்டங்களில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கிலாந்து வந்த பின் அவர் மெல்ல ஆங்கிலத்தில் எழுத துவங்குகிறார். அது வரையிலான நாட்குறிப்புகள் ஜெர்மானிய மொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேனியஸின் ஆரம்ப கால ஆங்கிலத்தையும், முதிர்ச்சி பெற்ற பின் பயன்படுத்திய ஆங்கிலத்தையும் உற்று நோக்கும் போது , ரேனியஸின் மொழி ஆளுமை குறித்து பதிப்பாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரேனியஸ் ஐயர் சி,.எம்.எஸ் ற்கு, எழுதிய கடிதங்களை வாசித்த ஆய்வாளர் எலிசபெத் வைல்ட் என்பவரும், ரேனியஸ் ஐயரின் ஆங்கில மொழிப் புலமை குறித்த தன ஆச்சரியங்களை பதிவு செய்துள்ளார்.

----------------------------------------------------------------------


டிசம்பர் 7, 1810

எனக்குள் விழிப்புணர்வு ஏற்பட்ட நாளின் வருடாந்திர நினைவு தினமாகிய இந்த நாளில் நான் என்னை அவருக்கு மறுபடியும்  அர்ப்பணிப்புச் செய்கிறேன்.. இன்றைய தினத்தை நான் அமைதியான தியானத்தில் கழித்தேன். கடவுளுக்கு போதுமான அளவு நன்றி உள்ளவனாக நான்  இருப்பதாக உணர முடியவில்லை. 


டிசம்பர் 9. 1810

மிஷினரி பதிவுகளில் கிழக்கிந்திய தீவு பகுதிகளில் இருந்த புற மதத்தவர்கள் குறித்து வாசித்தேன். எவ்வளவு அருவருப்புகளை தினமும் அவர்கள் பின் பற்றி உள்ளார்கள். அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவோ, அவர்களுக்காக ஜெபம் செய்யவோ எனக்கு விருப்பமேயில்லை. ஆண்டவரே, எவ்வளவு பரிதபிக்கப் படவேண்டியவன் நான்? ஒரு சுவிசேஷகனாக என்னை பொருத்திக் கொள்வதற்கான எந்த  அம்சமும் என்னிடம் இல்லை. எனக்கான சாமாதானத்தை, ஆறுதலை தரும்படி யேசுவிடம் ஜெபிக்கிறேன்.


டிசம்பர் 16, 1810

மிகப் பெரிய அவிசுவாசம் இருப்பதை தாமதமாக உணருகிறேன்.எனது மனநிலை குறித்து  பெரியப்பாவிடம்  பேசினேன். அவர் எனக்குத் தேவையான ஆறுதலை, அறிவுரையை, வழிகாட்டுதலைத் தந்தார்.


பிப்ரவரி 9, 1811

இந்த உலகத்தில் இருந்து என்னை தெரிந்தெடுத்து , வாழ்தலுக்கான வழியைக் காட்டி, , அவரது அன்பை நான் ருசிக்கும்படிச் செய்த அவரது கிருபை   எல்லாவிதமான புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது.


மார்ச் 5, 1811


இன்று என் பெரியப்பா நான் திட்டமிட்டிருக்கிற பிரிதல் குறித்து என் பெரியம்மாவிடம் சொன்னார். பெரியம்மாவுக்கு என் மேல் கோபம் எழுந்தது. உற்சாகமிழக்கும்படியான அநேக வார்த்தைகளுக்கு நடுவே சொன்னார், அவர் எனது சொந்த அம்மாவாக இருந்திருந்தால் அவர் இதற்கு சம்மதித்திருக்கவே மாட்டாராம். பெரியம்மாவின் எதிர்ப்பினால் என் மனதில் கார் மேகம் சூழ்ந்து எனக்கிருந்த மனமகிழ்ச்சியை குன்றிப் போக செய்தது.  ’அம்மாவை, சகோதரர்கள் மற்றும் குடும்பத்தவரை விட்டுவிட்டு வெளி தேசங்களுக்குப் போவது என்பது கொஞ்சம் முட்டாள்தனமான செயல்தான். என் குடும்பத்தவர் எனக்காக அழும்போது, என் நடவடிக்கைகளை குறித்தது கண்ணீர் சிந்தும் போது , நானும் நிச்சயம் வருந்த வேண்டும். இந்த நியாயப்படுத்துதல்களை நான் சோதனையாக கருதினேன். என் ரட்சகர் என்னை கைவிடாமல் பாதுகாக்க, அவருடைய அன்பும் , வெளிச்சமும் உள்ளத்தில் பிரகாசிக்க, அவருடைய ராஜ்யத்தை எல்லா தேசங்களுக்கும் விரிவு படுத்துவது மட்டுமே என் மிகப் பெரிய  விருப்பமாக இருக்க ஜெபித்தேன்.  . 


இன்னொரு இடத்தில் அவர், ‘பிற மத மக்களுக்கு  சிலுவையின் உபதேசத்தைச் சொல்வதன் முக்கியத்துவத்தை , கஷ்டங்களை தீவிரமாக பரிசீலித்து  பரிசுத்த ஆவியானவரின் உதவியை ஜெபத்தில் வேண்டினேன்" என்று எழுதுகிறார். இந்த மிகப்பெரிய பணியைச்  செய்வதற்கு நான் ஏற்றவனும், தகுதியானவனுமில்லை என்று தோன்றுகிறது. ஆனாலும், இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலையும், பெலத்தையும் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்கிற அப்போஸ்தலனுடைய  வசனத்தை நினைவு கூர்ந்து பெற்றுக் கொள்கிறேன். நான் அன்பாக நேசித்த என் தாயை, சகோதரர்களை சகோதரியை பிரிவது குறித்த எண்ணத்தை, "தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல" என்கிற தேவ வசனத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடு கடந்தேன். 


ஊழியக் களத்திற்குள் இறங்குவதற்கு இருந்த முதன்மையான  இடையூறுகள் நீங்கி விட்ட சூழலில் நேரத்தை வீணாக்காமல் களம் இறங்குவதற்கான ஆயத்த பணிகள்  துவங்கின. . 1810ம் ஆண்டு ரேனியஸ் பெர்லினில் வாலிபர்களை மிஷினரி பணிகளுக்காக ஆயத்தப்படுத்துவதற்காக சிறிது காலம் முன் துவங்கப்பட்டு அருள்திரு. ஜான் ஜெனிக்கேவின்  மேற்பார்வையில் இருந்த   இறையியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்து அனுமதியும் பெற்றார்.


---------------------------------------------------------------------

அருள்திரு. ஜான் ஜெனிக்கேவின் சகோதரர் ஜோசப் டேனியல் ஜெனிக்கே ரேனியஸிற்கு முன்னமே பாளையம்கோட்டை பகுதியில் பணியாற்றிய முன்னோடி மிஷினரி. 1759 இல் பிறந்த இவர் மிஷினரியாக 1788 இல் மெட்ராஸ் வந்தார். (அந்த காலத்தில்  சென்னை இல்லை). அதன் பின் ஷ்வார்ட்சின் உடன் ஊழியராக தஞ்சை, திருச்சி பாளையம்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் பணியாற்றினார். .  1798 ஆம் ஆண்டில் இள வயதில்  மரித்து அவர் தகப்பனை போல நேசித்த ஷ்வார்ட்ஸ் அவர்களின் கல்லறை அருகே தஞ்சையில் புதைக்கப்பட்டார். ஷ்வார்ட்ஸ் மற்றும் ஜெனிகேவின் மறைவினால் ஒரு இருண்ட காலத்திற்குள் சென்ற திருநெல்வேலி கிறிஸ்தவம் 1820 இல் ரேனியஸின் வருகையால் புத்துயிர் பெற்றது. 

----------------------------------------------------------------------