செவ்வாய், 14 மார்ச், 2023

ரேனியஸின் திருச்சபைகள் - திருப்புளியன்குடி பரி. மிகாவேல்‌ ஆலய வரலாறு




தூத்துக்குடி மாவட்டம்‌, திருவைகுண்டம்‌ தாலுகாவிற்கு கிழக்கில்‌ 3கி.மீ தூரத்தில்‌ அமைந்துள்ளது  திருப்புளியன்குடி. திரு என்ற மரியாதைக்குரிய அடைமொழியையும்‌, புளிய மரங்கள்‌ இப்பகுதியில்‌ நிறைந்து காணப்பட்டதால்‌ புளி என்ற வார்த்தையையும்‌, மக்கள்‌ வாழ்ந்து வந்த பகுதியாக இருப்பதால்‌ குடி என்ற பதத்தையும்‌ சேர்த்து திருப்புளியன்குடி என்ற பெயர்‌ இப்பகுதிக்கு வழங்கப்படலாயிற்று. 

கி.பி.1818இல்‌ இவ்வூரில்‌ இருந்தவர்கள்‌ அனைவரும்‌ இந்து மதத்தைச்‌ சார்ந்தவர்கள்‌. இவர்களில்‌ ஒரு குடும்பம்தான்‌ நம்பியின்‌ குடும்பம்‌ அப்பொழுது நம்பியின்‌ வயது சுமார்‌ 60. நம்பியின்‌ மனைவியின்‌ பெயர்‌ குறித்து விபரம்‌ இல்லை.

ஆனால்‌ நம்பியின்‌ பெயரைக்‌ கொண்டு நம்பியம்மாள்‌ என்றே உள்ளது. இவர்களுக்கு 3 மகன்கள்‌ இருந்தனர்‌. ஒருவர்‌ பெயர்‌ பெரிய பலவேசம்‌ (வயது26), திருமணம்‌ ஆனவர்‌.  அவருக்கு 2 வயதில்‌ ஒரு மகன்‌ இருந்துள்ளான்‌. நம்பியின்‌ 2வது மகன்‌ பெயர்‌ சின்ன பலவேசம்‌ (வயது 23).  கடைசி பையன்‌ பெயர்‌ சுப்பிரமணியன்‌ (வயது 21).  இவர்கள்‌ விவசாய தொழில்‌ செய்து வந்தனர்‌.

ஒரு முறை சுப்பிரமணியன்‌ தொழில்‌ நிமித்தம்‌ பாளையங்கோட்டைக்குச்‌ சென்றிருந்த போது SPCK  சபையைச்‌ சார்ந்த மாசிலாமணி என்ற உபதேசியார்‌ ஒருவர்‌ விக்கிரக வணக்கத்தைக்‌ குறித்து கண்டித்து பிரசங்கம்‌ செய்வதைக்‌ கேட்டுக்‌ மிகுந்த கோபம்‌ கொண்டு அவர்‌ மேலும்‌ என்ன சொல்லுகிறார்‌ என்பதை கேட்கும்படியாகஅவ்விடம்‌ சென்றுள்ளான்‌. மாசிலாமணி உபதேசியார்‌ தமது பிரசங்கத்தை முடித்துக்‌ கொண்டு போகும்போது கூடியிருந்த அனைவருக்கும்‌ புதிய ஏற்பாடு புத்தகத்தைக்‌ கொடுத்துச்‌ சென்று விட்டார்‌. சுப்பிரமணியன்‌ கையிலும்‌ ஒரு புதிய ஏற்பாடு புத்தகம்‌ கொடுக்கப்பட்டது. அவனும்‌ அதைப்‌ பெற்றுக்கொண்டு ஊர்‌ வந்து அதைப்‌ படித்துப்‌ பார்த்துள்ளான்‌. அது இவனுக்கு பிடித்து விடவே இன்னும்‌ அதிகமாக அதைக்‌ குறித்து அறிந்து கொள்ள விரும்பினான்‌. மீண்டுமாக பாளையங்கோட்டை சென்று உபதேசியார்‌ மாசிலாமணியைச்‌ சந்தித்து இயேசுவைக்‌ குறித்து மேலும்‌ அறிந்துக்‌கொண்டான்‌. 

ஊர்‌ திரும்பிய சுப்பிரமணியன்‌ இது குறித்து தனது குடும்பத்தினரிடம்‌ எடுத்துரைத்தான்‌. அவர்கள்‌  அவனது செயல்‌ குறித்து மிகவும்‌ கடுமையாக எதிர்த்தார்கள்‌. அவனது சகோதரர்கள்‌ அவனை கடிந்துக்‌ கொண்டனர்‌. ஆனால்‌ சுப்பிரமணியன்‌ சிறிதும்‌ பயப்படவில்லை. பின்வாங்கவில்லை.  தனது குடும்பத்தினரை எப்படியாவது கிறிஸ்துவ மதத்திற்குள்‌ கொண்டுவர வேண்டும்‌ என்று வைராக்கியம்‌ கொண்டவனாய்‌ இருந்தான்‌. தன்னிடம்‌இருந்த புதிய ஏற்பாட்டில்‌ உள்ள 4 சுவிசேஷங்களைக்‌ குறித்து அவர்களிடம்‌ எடுத்துச்‌ சொல்லி அவர்களை நாளடைவில்‌ மாற்றிவிட்டான்‌. அவர்களுக்கு இன்னும்‌ தேவனைப்பற்றி எடுத்துச்‌ சொல்ல விரும்பி அவர்களை பாளையங்ககோட்டைக்கு அழைத்துச்‌ சென்றான்‌. அங்கு அருள்திரு. ஜேம்ஸ்‌ ஹாப்‌ ஐயர்‌ கொடுத்த உபதேசங்களையும்‌, ஞான உபதேச நூல்‌ ஒன்றையும்‌ வேறு சில புத்தகங்களையும்‌ பெற்றுக்கொண்டு ஊர்‌ திரும்பினர்‌. 1௦ கட்டளைகளுடன்‌ ஆரம்பமாகும்‌ அந்த ஞான உபதேச வினாவிடை நூல்‌, கடவுளுக்கு முன்பாக அவர்கள்‌ எவ்வளவு பெரிய பாவிகள்‌ என்பதனை உணர்த்தியது. அதோடு இயேசு கிறிஸ்துவினாலே மாத்திரம்‌ பாவ மன்னிப்பு   கிடைக்கும்‌ என்பதை உணர்த்தியது. அக்கம்‌ பக்கத்தில்‌ இருப்பவர்களுக்கும்‌ இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறினர்‌. நம்பியின்‌ குடும்பத்தினர்‌.தினமும்‌ வேதம்‌ வாசித்து ஜெபித்து வந்தனர்‌. ஞாயிற்றுக்கிமை ஆராதனைக்கு பாளையங்ககோட்டைக்கு தவறாமல்‌ சென்று வந்தனர்‌. அந்தக்‌ காலத்தில்‌ வாகன வசதி இல்லாதப்படியால்‌ சுமார்‌ 30கி.மீ நடந்தே சென்று ஆராதனையில்‌ கலந்துக்கொண்டு திரும்பி வந்துள்ளனர்‌. 

பாவத்தைக்‌ குறித்தும்‌, பாவ மன்னிப்பைக்‌ குறித்தும்‌ தாங்கள்‌ பெற்ற இரட்சிப்பை நீங்களும்‌ பெற வேண்டும்‌ என்று சக மக்களுக்கும்‌ போதித்தப்படியால்‌ ஊர்‌ இந்துக்கள்‌ இவர்களை துன்பப்படுத்தினர்‌. உறவினர்களும்‌ இவர்களை வெறுத்தார்கள்‌. எனினும்‌ இவர்கள்‌ குடும்பமாக இயேசுவை சேவித்து வந்தார்கள்‌. பாளையங்கோட்டையில்‌ உள்ள செமினரியில்‌ (இப்போதைய பிஷப்‌சார்ஜென்ட்‌ ஆசிரியர்‌ பயிற்சிப்பள்ளி) ஒரு மாணவனாக சுப்பிரமணியன்‌ சேர்க்கப்பட்டான்‌. அங்கே உபதேசியார்‌ மாசிலாமணியின்‌ மகன்‌ ஏசுவடியான்‌ என்பவரின்‌ நட்பு கிடைத்தது. ஆசிரியர்‌ பயிற்சி முடித்ததும்‌ அருள்திரு.ரேனியஸ்‌, அருள்திரு.சுமித்‌, போதகர்கள்‌ திரு.டேவிட்‌, திரு.மாசிலாமணி, திரு.கிறிஸ்டியான்‌, திரு.ஏசுவடியான்‌ ஆகியோரை திருப்புளியன்குடிக்கு அழைத்து வந்து தங்கள்‌ ஊரில்‌ ஒரு ஆலயமும்‌, பள்ளிக்கூடமும்‌ வேண்டும்‌ என்ற கோரிக்கையை வைத்தார்‌. அதன்‌ விளைவாக 1823 ல்‌ ஆலயத்திற்கு அடிக்கல்‌ நாட்டப்பட்டது. முதலில்‌ ஆலயம்‌ களிமண்ணால்‌ கட்டப்பட்டுஓலை கூறையால்‌ அமைக்கப்பட்டது (தற்போது ஆடிட்டோரியம்‌ இருக்கும்‌ இடத்தில்‌).  அதேபோல்‌ பள்ளிக்கூடமும்‌ களிமண்ணால்‌ கட்டப்பட்டது. இப்பள்ளிக்கு சின்ன பலவேசமே ஆசிரியராக (தற்காலிகமாக) நியமிக்கப்பட்டார்‌. ஊர்‌ மக்கள்‌ தங்கள்‌ பிள்ளைகளை இந்த பள்ளிக்கூடத்தில்‌ படிக்க வைக்க விரும்பவில்லை. எதிர்ப்பு அதிகமாக இருந்தப்படியால்‌ பள்ளிக்கூடம்‌ சிறிது காலம்‌ நடைபெறாமல்‌ இருந்தது.

இதனை கேள்விப்பட்ட அருள்திரு. ரேனியஸ்‌ அவர்கள்‌ திரு. மாசிலாமணி அவர்களையும்‌, திரு.டேவிட்‌ அவர்களையும்‌ பள்ளிக்கூடமும்‌, ஆலயமும்‌ எவ்வித தடங்கள்‌ இல்லாமல்‌ கட்டி முடிக்கப்பட அனுப்பி வைத்தார்‌. நம்பியின்‌ கும்பத்தினர்‌ இம்முயற்சிக்கு பெரிதும்‌ உறுதுணையாக இருந்தனர்‌. இதனைக்‌ கண்ட இந்து மக்கள்‌ மிகவும்‌ கோபம்‌ கொண்டு தங்களுக்குள்‌ கலந்து பேசி நம்பியின்‌ குடும்பத்தை அழித்துவிட வேண்டும்‌ என்ற முடிவுடன்‌ கம்பு, தடிகளுடன்‌ நம்பியின்‌ குடும்பத்தினர்‌ மீது பாய்ந்தனர்‌. ஆலயத்திற்கு தீ வைத்து அழித்தனர்‌. இந்த தாக்குதலில்‌ நம்பியம்மாள்‌ இறந்தார்கள்‌. (திருநெல்வேலி CMS. திருச்சபையின்‌ முதல்‌ இரத்தச்சாட்சி என்று இன்றும்‌வர்ணிக்கப்படுகிறார்‌). எனினும்‌ கலங்காமல்‌ நம்பியின்‌ குடும்பத்தினர்‌ முன்பைவிட இன்னும்‌ தீவிரமாக தேவனின்‌ பணியைச்‌ செய்தார்கள்‌. இந்த விசுவாசத்தைக்‌ கண்ட நம்பியின்‌ அண்ணன்‌ மகன்‌ லெட்சுமணன்‌ என்பவர்‌ தன்‌ குடும்பத்துடன்‌ கிறிஸ்து நாதரை அண்டிக் கொள்ள தீர்மானித்தார்‌. அவருக்கு வயது32.  திருமணமான இவருக்கு இரண்டு ஆண்‌ பிள்கைள்‌ இருந்தனர்‌. அதனைத்‌ தொடர்ந்து அவருடைய உறவினர்கள்‌ சிலர்‌ இயேசுவை ஏற்றுக்கொண்டு நம்பிக்கு ஆதரவாக கைகோர்த்தனர்‌. ஜூலை 1823ல்‌ஆலயம்‌ மீண்டும்‌ கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலயம்‌ தூத்துக்குடி மாவட்டத்தில்‌ இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயமாக உள்ளது. (முதல்‌ ஆலயம்‌ 1803ல்‌ முதலூரில்‌ கட்டப்பட்டுள்ள பரி.மிகாவேல்‌ ஆலயம்‌ ஆகும்‌)


1823ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ 17ம்‌ தேதி திருப்புளியன்குடி சிற்றாலத்தில்‌ வைத்து நம்பியின்‌ குடும்பத்தாருக்கும்‌, அவர்களது உறவினர்கள்‌ சிலருக்கும்‌ அருள்திரு. ரேனியஸ்‌ ஐயர்‌ அவர்களால்‌ ஞானஸ்நானம்‌ கொடுக்கப்பட்டது. அன்று ஞானஸ்நானம்‌ பெற்றவர்களின்‌ பழைய பெயர்‌, வயது, உறவு ,புதிய பெயர்‌ வருமாறு:

1, நம்பி, 65,  தலைவர்‌-  யாக்கோபு பாக்கியான்‌

2. பெரிய பலவேசம்‌ , 31 , 1வது மகன்‌-  பவுல்‌

3, சின்ன பலவேசம்‌ , 28, 2வது மகன்‌-  ஸ்தேவான்‌

4, சுப்பிரமணியன்‌,  26,  3வது மகன்‌-  தீத்து

5. குழந்தை,  3 , பவுலின்‌ மகன்‌-ஏசுவடியான்‌

6. இலட்சுமணன்‌,  32,  நம்பியின்‌ அண்ணன்‌ மகன்‌-  ஆபிரகாம்‌ சத்யன்‌

7  சிறுவன்‌,  சத்யன்‌ மகன்‌ -  நல்லதம்பி

8. சிறுவன்‌,  6,  சத்யன்‌ 2வது மகன்‌ - அந்திரேயா  


அவரது ஆகஸ்ட்,17,  1823 நாட்குறிப்பில் ரேனியஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

"இன்றைக்கு சிறிய அறுவடை நடந்தது. ஏராளமாக திரண்டிருந்த உள்ளூர் புற மதத்தினர் நடுவே ஐந்து பெரியவர்களுக்கும் அவர்களது மூன்று பிள்ளைகளுக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்தேன். வனாந்திரம் போன்ற இடத்தில் இக்காட்சி மிகவும் அருமையாக இருந்தது. இந்தப் பெரியவர்கள் கிறிஸ்துவுக்காக தங்களை அர்ப்பணித்தார்கள் என்றும் இவர்கள் வழியாக நற்செய்தி வெளிச்சம் தொடர்ந்து பரவும் என்றும் நான் நம்புகிறேன்."

அன்றைய தினம் மாலையிலும் ரேனியஸ் ஒரு ஆராதனை நடத்தி, யோவான் 8:31, 32-ன் பேரில் ஒரு பிரசங்கம் செய்து, பாளையங்கோட்டைக்கு அடுத்தாற்போல், CMS சங்கத்திற்காக தான் நிறுவிய இரண்டாவது சபையாகிய அச்சிறு சபையை கர்த்தரின் நாமத்தில் ஆசிர்வதித்தார். அவ்வூரார் அனைவரும் கிறிஸ்து நாதரின் பிள்ளைகளாக வேண்டும் என்று ஆவல் தெரிவித்த அவர் எழுதிய அறிக்கையில், "இவ்வாறு இந்த இடத்தில ஒரு சிறு சபை அமைக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய மகிமை அதின் மேல் தங்குவதாக " என்று எழுதினார்.

தீத்து (சுப்பிரமணியன்‌) பாளையங்கோட்டை ஆசிரியர்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌ படித்து இருந்தபடியால்‌ அவரே இப்பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்‌. முதலில்‌ இப்பள்ளியில்‌ சேர்ந்து கல்வி கற்றவர்கள்‌ 8 பேர்கள்‌ மட்டுமே. பின்பு மதிய உணவு (மிஷனரிகளால்‌) கொடுக்கப்பட்டதால்‌ கூடுதலாகபிள்ளைகள்‌ சேர்ந்து படிக்கலாயினர்‌. 

1824ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 8ம்‌ தேதி அருள்திரு.ரேனியஸ்‌ ஐயர்‌ அவர்களால்‌ இன்னும்‌ சில பேர்களுக்கு ஞானஸ்நானம்‌ கொடுக்கப்பட்டது. தீத்துவே  முதல்‌ உபதேசியராக இருந்து ஆராதனை நடத்தி வந்தார்‌. அது முதல்‌ ஊர்‌ இந்துக்கள்‌ தங்களது பகைகளை மறந்து தங்கள்‌ வேலைகளை பார்க்கலாயினர்‌. 

திருப்புளியங்குடி சபையின்‌ முதல்‌ உபதேசியராக இருந்த தீத்துவின்‌ முயற்சியால்‌ நாகன்பச்சேரியில்‌ வாழ்ந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட ஈசுவரன்‌(வயது46) ஞானமுத்து சொற்பனன்‌ என்றும்‌, பெருமாள்‌ (வயது46) வேதமுத்து என்றும்‌, அவரின்‌ மனைவி ராக்கி (வயது 26) அன்னாள்‌ என்றும்‌, நாராயணன்‌(வயது 35) சற்குணன்‌ என்றும்‌, சற்குணத்தின்‌ மகள்‌ உச்சினிமாகாளி (வயது4) பரிபூரணம்‌ என்றும்‌, மகன்‌(வயது 2) நல்லதம்பி என்றும்‌ 1826 ஆகஸ்ட்‌ 1௦ம்‌ நாள்‌ ரேனியஸ்‌ ஐயர்‌ அவர்களால்‌ ஞானஸ்நானம்‌ கொடுக்கப்பட்டது.

 திருப்புளியன்குடியின்‌ முதல்‌ கிறிஸ்தவ குடும்பத்‌ தலைவரான யாக்கோபு பாக்கியவானின்‌ (நம்பி) இரண்டாவது மகனான்‌ ஸ்தேவானின்‌ இறைத்தொண்டு மகத்தானது. திருநெல்வேலிக்கு வடக்கே 1௦௦ மைல்‌ தொலைவில்‌ உள்ளது கம்பம்‌ என்ற ஊர்‌. இவ்வூரில்‌ ௬விசேஷம்‌ சென்றது  ஸ்தேவான்‌ மூலம்‌ என்றால்‌ அது மிகையாகாது. திருநெல்வேலி CMS சபையார்‌ ஒரு முறை கம்பம்‌ சென்று அங்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிவித்துள்ளனர்‌. மேலும்‌ இயேசுவைப்பற்றி அறிய விரும்பினால்‌ பாளையங்கோட்டையில்‌ உள்ள ரேனியஸ்‌ அவர்களை சந்திக்கும்படி அறிவுரை கூறி வந்துள்ளனர்‌. மூப்பனார்‌ இனத்து மக்களான அவர்கள்‌ அதன்படி பாளையங்கோட்டை வந்து ரேனியஸை சந்தித்தனர்‌(1827).  அவரும்‌ அவர்களுக்கு உபதேசம்‌ செய்து மேலும்‌ கற்றுத்தர ஒரு உபதேசியாரை அனுப்பி வைப்பதாக வாக்கு கொடுத்து  அவர்களை அனுப்பி வைத்துள்ளார்‌. அதன்படி 1828 துவக்கத்தில்‌ நமது ஸ்தேவானை (சின்ன பலவேசம்‌) கம்பத்தின்‌ உபதேசியராக நியமித்துள்ளார்கள்‌. வெகு தொலைவில்‌ உள்ள கம்பத்திற்குச்சென்று பல சிரமங்களை சகித்துக்கொண்டு உற்சாகத்துடன்‌ அவரது மனைவியுடன்‌ சேர்ந்து கம்பம்‌ மற்றும்‌ மாதாங்கோயில்பட்டி என்ற இடத்திலும்‌ ஊழியம்‌ செய்து இரு சபைகளை உருவாக்கினர்‌. இந்த ஊழியம்‌ வெகு காலம்‌ நீடிக்காமல்‌ போனது.  காரணம்‌,  அந்த இடத்தின்‌குளிர்‌ - தட்ப வெப்ப நிலை ஸ்தேவானுக்கு ஒத்துப் போகவில்லை. ஒருவித கொடிய காய்சசலால்‌ பாதிக்கப்பட்டு திருப்புளியங்குடிக்கே திரும்பி வந்து விட்டார்‌. மருத்துவம்‌ பார்த்தும்‌ பலன்‌ கிடைக்கவில்லை. மரண தருவாயில்‌ தனது அருகில்‌ இருந்த மனைவியிடம்‌ ஆறுதல்‌ கூறி நான்‌ இருக்க வேண்டிய இடம்‌ இவ்வுலகில்‌ இல்லை. என்‌ இளைப்பாறுதலும்‌ இங்கில்லை. கடவுள்‌ நம்மை இவ்வுலகிற்காக படைக்கவில்லை. ஆகவே மகிழ்வுடன்‌ என்னை வழியனுப்பி வைக்காமல்‌ இப்படி துக்கத்துடனே வழியனுப்பி வைக்க போகிறீர்களா? என்றுச்‌ சொல்லி சிறிது நேரம்‌ மெளனமாக ஜெபித்துவிட்டு தனது குடும்பத்தினரைப்‌ பார்த்து நான்‌ போகிறேன்‌. நீங்களும்‌ ஆயத்தமாய்‌ இருங்கள்‌ என்று கூறி தனது தம்பி தீத்துவைப்‌ பார்த்து புன்சிரிப்புடன்‌ தம்பி, என்‌ தம்பி எனச்சொல்லி வானத்துக்கு நேராய்‌ தன்‌ கண்களை ஏறேடுத்து கரம்‌ கூப்பினார்‌. அவருடைய ஆவி பிரிந்தது. பக்தன்‌ ஸ்தேவானைப்‌ போல தம்‌ திருப்புளியன்குடி ஸ்தேவானும்‌ இயேசு இரட்சகரின்‌ திருமார்பில்‌ சாய்ந்து  (22.08.1828) மரித்தார்‌.

ஸ்தோவனின் மரணம் குறித்து 1828, ஆகஸ்ட் 24 அன்று அருட்திரு ரேனியஸ் அவரில் இவ்வாறு குறிப்பிடுகிறார் 

"8 அல்லது 9 வருடங்களாக மிகவும் அருமையான கிறிஸ்தவராக இருந்து, தன் எளிய உலகில் தன்னால் இயன்ற  நன்மைகள்  செய்து வந்த  ஸ்தேவான்  இறந்துபோன செய்தி  இந்த வாரம் கிடைத்தது. அவர் வயதில் பெரியவராக இருந்தாலும் வாசிக்கத் கேள்வி ஞானத்திலேயே அறிந்துகொண்ட கிறிஸ்தவத்தை தனது உரையாடல் திறன் மூலமாகவும் நல்ல நடத்தை மூலமாகவும் பரிந்துரைத்தவர். கிறிஸ்துவின்  நாமத்திற்காக பிற மதத்தவரிடம் இருந்து பல்வேறு பாடுகளை தொடர்ந்து அனுபவித்தவர். வடக்கே தூரமாக இருந்த ஒரு கிராமத்தில் உள்ள பிற மதத்தவர்கள் உபதேசம் வேண்டி விண்ணப்பித்ததால் ஒரு தற்காலிக ஏற்பாடாக ஸ்தேவான்  அங்கு அனுப்பப்பட்டிருந்தார். அங்கு அவரை தொற்றிய காய்ச்சல் அவரை விட்டு நீங்கவே இல்லை.  அவரை பிழைக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எல்லாம் வீணாயின. சில வாரங்களுக்கு முன்பாக திருப்புளியங்குடி சென்றார்.  22ஆம் தேதி காலையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களோடு இருக்க  எடுத்துக் கொள்ளப்பட்டார்.  அவரது சகோதரர் தீத்து இந்த சம்பவத்தை குறித்து எழுதும்போது "இன்றைக்கு என்னுடைய மூத்த சகோதரர் ஸ்தேவான்   கர்த்தரில் நம்பிக்கைக் கொண்டவராக மகிழ்வோடு மரித்துப்  போனார். அவரது மரணத்திற்கு முன்பு வருத்தமாக அழுதுகொண்டிருந்த மனைவியையும் நண்பர்களையும் பார்த்து நீங்கள் எனக்காக வருந்தவோ, அழவோ  வேண்டாம். நான் வாழவோ, இளைப்பாறவோ உள்ள இடம் இந்த உலகு இல்லை. ஆண்டவர் நம்மை இந்த உலகத்திற்காக படைக்கவில்லை. . நீங்கள் என்னை மகிழ்ச்சியோடு அல்லாமல் துக்கத்தோடா அனுப்பப் போகிறீர்கள்? என் மனதில் வேதனை உண்டாக்க செய்வீர்களா?  என் மரண நேரத்தில், நான் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற என் ரட்சகரிடம் ஜெபிக்க என்னை விடமாட்டீர்களா? என்னைத் தனியே விடுங்கள் என்று கூறி விட்டு தனது கண்களை உயர்த்தி ஜெபிக்கத் துவங்கினார். இதுபோலவே அவர் பலமுறை பேசினார். அவர் இறந்த அன்றைக்கு அவர் மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளப் போவதில்லையா என்று நான் கேட்டேன். நான் விரைவில் விடை பெற்றுவிடுவேன் எனவே எனக்கு மருந்துகள் தேவையில்லை என்று கூறி விட்டார்.  இறுதி கணங்கள் நெருங்கியபோது வீட்டில் கூடியிருந்தவர்களை அழைத்து இன்னமும் நீங்கள் வேலையாய் இருக்கிறீர்களா? வாருங்கள் நான் போகிறேன். நீங்களும் ஆயத்தமாக இருங்கள். "தம்பி, என் தம்பி" என்று சொல்லிவிட்டு தனது கைகளை குவித்து வானத்திற்கு நேராய் தன் கண்களை ஏறெடுத்து, அப்படியே நித்திய உறக்கத்திற்குள் சென்றார்."

 

1828க்குப்‌ பிறகு இந்த குடும்பத்தைக்‌ குறித்த விபரம்‌ கிடைக்கவில்லை. கண்டிப்பாக இந்த தமிழகத்தின்‌ மூலையில்‌ ஏதாவது ஒரு இடத்தில்‌ இவர்களது குடும்பம்‌ வாழ்ந்துக்‌ கொண்டிருக்கும்‌ என்பதில்‌ சந்தேகம்‌ எதுவுமில்லை. எனினும்‌ இவர்கள்‌ விதைத்த விட்டுச்‌ சென்ற விதைகள்‌ முளைத்து பயன்பெற்றுள்ளது. ஆம்‌ இன்று திருப்புளியன்குடியில்‌ கிறிஸ்தவ குடும்பங்கள்‌ நிறைந்துள்ளதே அதற்குச்‌ சான்று.

20ஆம் நூற்றாண்டில்  இச்சபையின்  முற்பிதாக்களில்‌ பலர்‌ ஆசிரியர்‌ பயிற்சிப் பெற்று நல்ல நிலைகளில்‌ இருந்தப்படியால்‌ ஆலயத்தை சீர்படுத்தும்‌ முயற்சியில்‌ இறங்கினர்‌. அதன்படி 1912ல்‌ களிமண்‌ கொண்டு கட்டப்பட்டு இருந்த ஆலயத்தை செங்கல்‌, சுண்ணாம்பு கொண்டு கட்ட வேண்டும்‌ என்று முடிவு செய்து அதன்படி கட்டி முடித்தனர்‌. 1912ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ 6ம்‌ தேதி பேரருள்‌ திரு.வில்லியம்ஸ்‌(பிஷப்‌, திருநெல்வேலி- மதுரை) அவர்களால்‌ பிரதிஷ்டை செய்யப்பட்டது. 



 1960இல்‌ ஆலயத்தின்‌ கோபுரம்‌ எழுப்பப்பட்டுள்ளது. 29.09.1973 அன்று  ஆலயத்தின்‌ 150வது ஆண்டு பிரதிஷ்டைப்‌ பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. பேரருள்‌திரு.T.S.காரட்‌ (திருநெல்வேலி பிஷப்‌) அவர்கள்‌ கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளார்‌.




ஆலய பிரதிஷ்டைப்‌ பண்டிகையின் போது வேலைகளின்‌ நிமித்தம்‌ வெவ்வேறு இடங்களில்‌ வாழ்ந்து வருகின்ற  மண்ணின்‌ மைந்தர்கள்‌ தமது குடும்பத்தினரோடு வந்திருந்து ஆலய பிரதிஷ்டை ஆராதனையிலும்‌, அசன விருந்திலும்‌ பங்குப்பெற்று தேவ ஆசீர்வாதம்‌ பெற்றுச்‌ செல்வது வழக்கம்‌. அது மட்டுமல்லாது  ஊரின்‌ அக்கம் பக்கத்தில்‌ உள்ள கிராம மக்கள்‌ அனைவரும்‌ சாதி, மதம்‌ பாராது வந்துகலந்துக்‌ கொள்வார்கள்‌.

முக்கிய தினம்: 29 செப்டம்பர் , பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசனம் .


ஆதாரங்கள்:

1. 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருப்புளியன்குடி சபை நினைவு மலர்.

2. ரேனியஸ் ஐயர் நாட்குறிப்புகள் 

3. "திருநெல்வேலி அப்போஸ்தலன் ரேனியஸ்" அருட்திரு. டி.ஏ. கிறிஸ்துதாஸ் 


உதவியர்: சாமுவேல் யாபேத், திருப்புளியன்குடி