வியாழன், 7 செப்டம்பர், 2023

கல்லறை எண் : 14 - காற்று வெளிதனிலே... இங்கொன்றும்...அங்கொன்றுமாக...

     ஜான் அவர்களின் துயர்மிகு கடைசி நாட்களை எண்ணி உறக்கம் தொலைத்தவன் ஆனேன்.  ஏன் இந்த பாடுகள்? இந்த பாடுகளின் பயணத்தில் இந்த மனிதன் விட்டுச் சென்றது என்ன? போன்ற கேள்விகள் என்னை தரங்கபாடி கடலின்  இரைச்சலின் இடையே அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து தேடுகிறேன்... காயத்திற்கு மருந்திடுவது போல சில பதிவுகள், ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி,  தென்படுகின்றன.... 

    ஜெர்மனியில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. எழுதியவர்  ஜோஹன் ரெய்ன்ஹோல்ட் ஃபார்ஸ்டர்    (Johann Reinhold Forster). இவர் ஒரு இறையியலாளர் மற்றும் அறிவியலாளர். கடிதத்தின் சாராம்சம் இது தான்- "விஷப் பாம்புகளின் கடிக்கு செலுத்தப்படும் விஷ முறிவு மருந்துகளின் மூலப்பொருட்களை கண்டு பிடிக்க இயலாதா?  இந்த விஷ முறிவு எப்பொழுதும் பயனளிக்கிறதா?" இந்த கடிதம் அருட்திரு. ஜான் அவர்களுக்கு எழுதப்படுகிறது. இனி அவரின் பதில்- "மிஷனரி ஸ்வார்ட்ஸின் முந்தைய ஊழியர் 'சாமுவேல்'  நாகப்பாம்பு (Brillen Schlange)மற்றும் வெறிநாய் கடிக்கான மருத்துவ செய்முறையை வைத்திருந்தார். ஸ்வார்ட்ஸ் முன்னிலையில், அவர் [சாமுவேல்] பலரைக் குணப்படுத்தி இருக்கிறார். அவரது சில குணப்படுத்தல்கள் கவனத்தை ஈர்த்து, அவருக்கு புகழ் சேர்த்தன. அரைப்பணம் விலையிலான மாத்திரைகளை அவரிடம் எல்லோரும் வாங்கினார்கள். அவை ஒரு பட்டாணியின் வடிவத்தில் , கருத்த நிறத்தில் இருந்தன. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பார். அதன் மூலப்பொருட்களை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். மெட்ராஸ் அரசாங்கம் அவரை மெட்ராஸ் அனுப்பி வைத்து அந்த ரகசியத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளிப்படுத்த வைக்கும்  படியும் அதற்கு தக்க சன்மானம் அளிப்பதாகவும் ஷ்வார்ட்ஸுக்கு வேண்டுகோள் வைத்தது. அது நிறைவேறவும் செய்தது. நான் (ஜான்) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெட்றாஸில் இருந்து திரும்பும் போது அவரை சந்தித்தேன். அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு 200 நட்சத்திர- பக்கோடாக்கள் அவருக்கு கிடைத்தது. மெட்ராஸ் கூரியரிலும் இது வெளிவந்தது."

    1792 இல் நடந்த இந்த  கடித போக்குவரத்து அறிவியல் துறையில் எப்படிப்பட்ட நபர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார், எவ்வளவு ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் அறிவியல் பணியை செய்தார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. மேலே சொல்லப்பட்டுள்ள "தாஞ்சாவூர் மாத்திரைகள் (Tanjore Pills) குறித்து பின் குறிப்பில் விரிவாக  சொல்லியிருக்கிறேன். 

    மகாராசன் வேதமாணிக்கம் திருவிதாங்கூரின் முதல் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம் வேரூன்றியதில் இவரது பங்களிப்பு மிகப் பெரியது. புதிதாக கிறிஸ்தவம் தழுவிய அவர் ஜான் அவர்களின் ஊழியம் குறித்து அறிந்து கொள்ள தரங்கம்பாடி சென்றதை ஒரு வலைப்பூ பதிவில் காணமுடிந்தது.  . "பைபிளின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றிய சில அடிப்படை அறிவைப் பெற்ற பிறகு, வேதமாணிக்கம் தரங்கம்பாடி  மிஷனுக்குச் சென்று தரங்கம்பாடி  மிஷனின் தலைவரான டாக்டர் ஜானைப் பார்க்க விரும்பினார், அப்போது அவர் தரங்கம்பாடி  அருகே பொறையாரில் வசித்து வந்தார். வேதமாணிக்கம் டாக்டர். ஜான் அவர்களை சந்தித்து  தரங்கம்பாடி  மிஷன் பிரஸ் பணி  செய்யும் விதம், பெரிய தேவாலயம் , பள்ளிகள், அச்சக அலுவலகம் மற்றும்  கிறிஸ்தவ குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட  தேவாலயம் சார்ந்த  நிறுவனங்களின் செயல்பாட்டைக் கவனிக்கும் பாக்கியத்தை பெற்றார். . பின்னர் வேதமாணிக்கம் தஞ்சை திரும்பினார்."

    2005 ஆம் ஆண்டு தானேயில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் பேசிய டாக்டர் விஜய் பெடேகர் என்பவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் மிக முக்கியமாக ஜான் உள்ளிட்ட மிஷினரிகள்  டாக்டர் பட்டம் பெற்ற தகவல் குறிப்பிடத்தகுந்தது. "சி.எஸ். ஜான் மீனவர்களின் உதவியுடன் உள்ளூர் பிராந்தியத்தின் பல வகையான மீன்களைச் சேகரித்தார், தொழில்முறை இந்திய ஓவியர்களால் அவற்றை வரையச் செய்தார்.  சுமார் 50 இனங்களை ஜாடிகளில் பாதுகாத்து பெர்லினுக்கு பேராசிரியர் மார்கஸ் எலியேசர் ப்ளாச்சிற்கு (Professor Marcus Eliezer Bloch)  அனுப்பினார். 1793 ஆம் ஆண்டில், ப்ளாச் மீன்களின் இயற்கை வரலாறு குறித்த தனது பன்னிரண்டு தொகுதிப் படைப்பை வெளியிட்டார். ப்ளாச்  தனக்கு உதவிய  மிஷனரிகளை கௌரவித்தார்,  "அந்தியாஸ் ஜானி" (Anthias Johnii)  "அயோனியஸ் கருட்டா"  (Iohnius Carutta) மற்றும் "அயோனியஸ் அனியஸ்" (Iohnius Aneus) என சில மீன் இனங்களுக்கு ஜான் உடைய  பெயரிடப்பட்டது.  "ஸ்கொம்பர் ரோட்லரி" (Scomber Rottleri)  என்ற இனம்  அவரது சக ஊழியர்  ராட்லருக்கு  அர்ப்பணிக்கப்பட்டது,"ஸ்காம்பர் க்ளீனி"  (Scomber Kleinii) மிஷனரி  மருத்துவர் க்ளீனுக்கு (Klein) அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மீன்களின் பெயர்கள்  லத்தீன் என்றாலும் இவை இந்திய மீன்கள் என்பது வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள்.""கிறிஸ்டியன் சாமுவேல் ஜான் (1747-1813) மற்றும் ஜோஹன் பீட்டர் ரோட்லர் (1749-1836) ஆகியோர்  இந்திய மருத்துவ தாவரங்களில் அதிக ஆர்வம் காட்டினர். 1834-1841 வரை நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட “A Dictionary of the Tamil and English Language" " என்ற மாபெரும் படைப்பிற்காக அறியப்பட்ட ராட்லர், சுமார் 60 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்.  இவர் அப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட செடிகளை சேகரித்து வைத்திருந்தார்.ஜான், க்ளீன்   மற்றும்  ராட்லர் ஆகிய மூவருக்கும்  புகழ்பெற்ற  German Leopoldina Academy of Researchers. எனும் அமைப்பு  இயற்கை வரலாற்றில் அவர்களின் களப்பணிக்காக முனைவர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது.க்ளீன் மருத்துவ மூலிகைகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் பல மாதிரிகளை சேகரித்து ஜெர்மனிக்கு பல்வேறு அறிவியல் சங்கங்களுக்கு அனுப்பினார்".


    அறிவியலைப் போலவே, என் பார்வையில், தமிழ் சமூக வரலாற்றிற்கும் அருட்திரு. ஜான் பெரிய பங்களிப்பை  செய்துள்ளார். இன்னும் அறியப்படாத அந்த பக்கங்கள் புரட்டப்படும் போது அது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம். தானியேல் பிள்ளை- இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர். அன்றைய மொழியில் சொன்னால் துபாஷி.  "தரங்கம்பாடியில்  இருந்த  டேனிஷ் கவர்னர் பீட்டர் ஹெர்மன் அபெஸ்டியின் இந்திய துபாஷி தானியேல் பிள்ளை (Daniel Pulley 1740-1802) . இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு,  தனது நீண்டகால நம்பிக்கையாளரும்,  நண்பருமான  ஜானிடம்   தனது வாழ்க்கையின் சூழ்நிலைகளை விவரிக்கிறார். ஜான் இந்த கதையை படியெடுத்து   இது 'மிகவும் குறிப்பிடத்தக்க ' சுயசரிதைகளில் ஒன்றாகும் என்ற குறிப்புடன் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். தனது முழு கதையையும் சொல்லி முடிப்பதற்கு முன்பதாகவே தானியேல் பிள்ளை இறந்து விடுகிறார். இருப்பினும் C.S. ஜான் எழுதிய அவரது நினைவுகள், இந்து மத சூழலில் செதுக்கப்பட்ட, ஒரு மதம் மாறிய இந்திய கிறிஸ்தவன் தனது  விசுவாசத்தையும்,  தார்மீக போதனைகளையும்   கையாண்ட விதம் குறித்து,   ஈர்க்கக்கூடிய  சாட்சியாக அமைகிறது. ஒரு தமிழர் கிறிஸ்தவராக  தானியேல் பிள்ளை  ஒரு மிஷன் பள்ளியில் பயின்றார்.   சில காலம் மிஷனில் பணியாற்றினார். அவர் தரங்கம்பாடியில்  டேனிஷ் ஆளுநரின் சேவையில் நியமிக்கப்பட்ட பிறகும், மதத்திலிருந்து அரசியல் துறைக்கு மாறிய பின்னரும், மிஷனுடன்  தனது நல்ல தொடர்புகளைப் பேணினார். ஒரு தமிழனாக, கிறிஸ்தவனாக, உள்ளூர் நீதிமன்றத்தின் உறுப்பினராக, டேனிஷ் ஆளுநரின் ஆலோசகராக, தேவாலயக் காப்பாளராக, தென்னிந்தியாவின் சிறிய நகரமான தரங்கம்பாடி நகரின் வளமான குடிமகனாக தானியேல் பிள்ளை பல்வேறு அடையாளங்களை கொண்டவர். அவற்றில் சில ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை. அவர் ஜானிடம் தனது கதையைச் சொல்லும் போது, தனது தனிப்பட்ட சண்டைகள், உள்மன போராட்டங்கள்  மற்றும் சந்தேகங்களை எல்லா உண்மையோடும் வெளிப்படுத்தி உள்ளார். இந்த கதை தமிழில் விரிவாக  விரைவில் வரும் என அவருக்குள் நம்புகிறேன். 

பின்குறிப்பு-1

வெறிநாய்கடி, பாம்புக்கடி மருந்து

டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை' என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கி வந்தது 1788 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைகாலுக்கு நன்கு பயன் தருகிறது என்று சென்னை மாநில கவர்னர் Sir Archibad Campbell, ராணுவ மருத்துவக் குழுத் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார். சென்னை மாகாணத்தின் முதல் ஆங்கில வார இதழான மெட்ராஸ் கூரியரில் இச்செய்தி வெளியாகியுள்ளது. இநத மாத்திரைகளை வேலூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் William Duffin பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானதை, தன் கடிதம் மூலம் ராணுவ மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்திருக்கிறார். (ஆதாரம்: Dr. Duffin Minute to the Hospital Board 17.11.1788, பக்கம் 238-41) தஞ்சாவூர் மாத்திரை என்ற (Tanjore Pills) சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது (ஆதாரம்: Current science vol.16, No. 12, 25.06.2014). ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ. 6,72,000. பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையைப் பரம்பரை வைத்தியர் விளக்கினார். இதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்குக் காரணமாகிவிட்டது

250 வருட காத்திருப்பு

தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் வந்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பாதிரியார் கிறிஸ்டியன் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களைச் சென்றடையாமல் காத்திருக்கிறது.

(உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள்,  இந்து தமிழ் திசை, 16 Apr, 2016 டாக்டர் ஜெ.ஸ்ரீராம்)

உதவிய பதிவுகள் 

1. The arsenic and mercury-containing Tanjore pills used in treating Snake bites in the 18th century Madras Presidency,  Ramya Raman, Anantanarayanan Raman and P. Ram Manoha

2. வலைப்பூ- Milestones of Kanyakumari


3. Dr. Vijay Bedekar's Speech- Seminar on Indian Contribution to World Civilization , 24th December 2005


புதன், 6 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14, மரணத்தை யாசித்த போராளி

கடந்த அத்தியாயத்தில்  ஜான் பகிர்ந்து கொண்ட  மகிழ்வான தருணங்கள் மீது  இருளின் நிழல் மெல்ல படியத்  துவங்கியது. மெச்ச தகுந்த விதத்தில் பள்ளிகளுக்காக  ஜான் பெரிய முயற்சிகள் எடுத்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  தனக்காக அவர் குறித்துக் கொண்ட பாதையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து நடந்தார். ஆனால் மறுபுறம் ராட்லரை தவிர மற்ற சக ஊழியர்களால் அவரது திட்டங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக  ஐரோப்பிய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது முள்ளாக அவர்கள் கண்களை உறுத்தியது. அது ஒரு நல்ல காரியமாக இருப்பினும்,  ஓசையின்றி ஜானையும் அவர் சார்ந்தவர்களின் கவனத்தையும் திசை திருப்பி, .ஊழியத்திற்கு உலை வைக்கும் என எண்ணினர். 


ஜான் மீது முதன் முதலில் புகார் அளித்தவர் மிஷனரி ஹேகலண்ட்' டென்மார்க்கை சேர்ந்த இவர்    கோபன்ஹேகனில் இறையியல் கற்று  1785 இல் தரங்கம்பாடி வந்தார். தரங்கம்பாடி மிஷனின் அறிக்கைகளை ஹலே கல்லூரிக்கு அனுப்பும் பணியை ஜான் தான் செய்து வந்தார்.  இப்பொழுது   ஹேகலண்ட்' எழுதுகிறார்  " இங்குள்ள மிஷன் பணியில் நானும் பங்கு பெறுவதற்கான  தருணம் வருகிறதாக  நம்புகிறேன். இப்போது வரை ஜானின் செயல்பாடுகளையும், எல்லாவற்றையும் தானே முன்னிற்று செய்ய வேண்டும் என்கிற அவரது ஆசையையும் ஒரு மௌனப் பார்வையாளனாக பார்த்து வருகிறேன். இனி  கல்லூரியுடனான கடிதப் பரிமாற்றத்தில் நான்  பங்கு கொள்வது எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது." இதற்காக கல்லூரியில் இருந்து கடுமையான கண்டனத்தைப் பெற்ற  ஹேகலண்ட் அதற்கு அடுத்த ஆண்டே இறந்து போனார்.


ஹேகலண்ட் போலவே உடன் பணியாளரான கோனிக் ஜான் உடன்  கருத்து வேறுபாடு கொள்கிறார்.  17 மற்றும் 15 வயதுடைய ஜான்சன்,  லெபெக் எனும் இரு மாணவர்கள் மீது பெரு நம்பிக்கை வைக்கிறார், ஜான் . அவர்கள் மிஷினரிகளாக மாறுவார்கள். கல்வி நிலையங்களுக்கு தலைமை ஏற்பார்கள் என எதிர்பார்க்கிறார். தனது தீமோத்தியுக்களாக எண்ணி உயர் கல்விக்கு ஐரோப்பா அனுப்புகிறார். ஆனால், அவர்கள் மிஷனில் இருந்து விலகி செல்கின்றனர். "அவர்களின் முக்கிய ஆதாரமாக இருந்த என்னைப்போல் இதில் துயரம் அடைந்தவர்கள் யாரும் இருக்க இயலாது" என எழுதுகிறார் ஜான். 


இவை எல்லாவற்றிற்கும் மேல் ஜானுக்கும், ஊழியத்திற்கும் இருந்த மிகப் பெரிய எதிரி "காலத்தின் ஆவி" (Spirit of the Time). புறஜாதிகளுக்கு மத்தியில் ஊழியம் என்பது 18 ஆம் நூற்றாண்டின் கடைசி மற்றும் 19 ஆம்  நூற்றாண்டின்  தொடக்கத்தில் ஒரு அபத்தமான யோசனையாக மேற்கத்திய உலகில்  தோன்றத்  துவங்கியது. அது உலகளாவிய ஏளனத்திற்கு ஆளானது. திருச்சபைகளின் இந்த உலகளாவிய சிதைவு, பொருத்தமான, ஆர்வமானவர்களை   தரங்கம்பாடிக்கு மிஷினரிகளாக அனுப்பும் பணியை  சிரமத்திற்கு உள்ளாகியது.


ஒரு மிஷினரி இறந்து போகிறார். அவர் இடத்தை நிரப்ப சரியான நபர்கள் கிடைக்காததால் புதிய மிஷனரி   அனுப்படுவதில்லை. அது பணித்தளத்தில் எஞ்சி நின்ற மிஷினரிகளை மன  அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. "ஜெர்மானிய திருச்சபைகளின் நிலைமை துயரம் தருவது. பவுலுக்கும் , பிற அப்போஸ்தலர்களும் தெரியாத புதிய சுவிஷேசத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற தியாகத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையான செயல்பாடுகளையும் புறந்தள்ளுகின்றனர். இரட்சிப்பிற்கும், எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமான அவரது ஒப்புரவாக்குதலின் ரத்தம் இகழப்பட்டு, கிறிஸ்து ஒரு நல்ல போதகராக மட்டுமே பார்க்கப்படுகிறார்.  " என  தன் கருத்தை பதிவிடுகிறார்  ஷ்வார்ட்ஸ்.  


இதை தவிர்த்து, தரங்கம்பாடி அரசுக்கும், மிஷினரிகளுக்கும் இணக்கமான உறவு இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் கோபன்ஹேகன் சென்று தங்கள் தரப்பு நியாத்திற்காக வாதாட வேண்டும் என்று ஜான் எண்ணுமளவுற்கு இந்த பனிப்போர் தீவிரமாக இருந்தது. இதற்காக மெட்ராஸ் வரை சென்றவர் , கப்பல் எதுவும் இல்லாததால் மீண்டும் தரங்கம்பாடி திரும்பினார். 


புதிதாக அனுப்பப்பட்ட மிஷினரிகளில் ஒருவரான ஃப்ருச்டெனிச்ட் (Fruchtenicht) குடி நோயாளியாக மாறி பெரிய தலைவலி ஆகிறார். இந்த சம்பவத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே ஜான் எழுதுகிறார்., "ஒரு புதிய நேர்மையான மிஷினரி எங்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கக் கூடும். அப்படி பொருத்தமான மனிதர்கள் கிடைக்காத பட்சத்தில் எங்களை இப்படியே இறந்து போக அனுமதிப்பதே சிறந்தது."


இன்னொரு மிஷினரி இப்படி பதிவிடுகிறார். " ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், உலகமெங்கிலும் பெருகிவரும் கடவுள் மறுப்பு ஒரு காட்டாற்று வெள்ளம் போல தன் முன் உள்ள எல்லாவற்றையும் அடித்துச் சென்று விடுவது  போல் பயமுறுத்துகிறது. அதை எங்களாலும் எதிர்கொள்ள இயலவில்லை.   இந்த தேசத்தில் நீதிநெறிகள் சிதைவதை பார்க்கும் பொழுது, பிரசங்கங்கள், ஜெபங்கள், எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டியும் எங்கள் சபைகளில் அனுதினமும்  அதிகமாக இந்த தாழ்ச்சியை காண நேரிடும் போது, ஜெபத்தில் கடவுளுக்கு  முன்பாக மட்டுமே  வைக்கக்கூடிய இந்த  பன்முக பிரச்சனைகளின் கீழ் நாம் மூழ்க வேண்டி வரும்  என்று உணர்கிறோம்.  இந்த மிஷன் தன முடிவை நெருங்குகிறது என நாங்கள் எண்ணுவதற்கு பல காரணங்களை நாங்கள் முன் வைக்க முடியும்". இப்படியான துயர சூழலில் தான் தரங்கம்பாடி மிஷன் தனது முதலாம் நூற்றாண்டை கொண்டாடியது.


பிப்ரவரி 13, 1808 அன்று ஆங்கிலேயர்களால் தரங்கம்பாடி  கைப்பற்றப்பட்டதுபோர் உக்கிரமாக நடந்த ஆண்டுகளில்டென்மார்க் மற்றும் டென்மார்க் காலனிகள். இடையேயான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மதராசில் இருந்த ஆங்கிலேய அரசு தரங்கம்பாடி மிஷனுக்கு சில ஆதரவை வழங்கியது. இந்த தேவை மிகுந்த நாட்களில் மிஷனுக்கு உதவியவர்களில்  முக்கியமானவர் ஷவார்ட்ஸின் நண்பரான தஞ்சாவூர் மன்னர்.

ஜானுக்கு இப்பொழுது வயதாகி விட்டது. நோய்களும், துயரங்களும் அவரை மிகவும் பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பாக அவரது மகனின் கெட்ட நடத்தை அவரை மனமடிவிற்கு உள்ளாகியது. இந்த பலவீனங்களின் மத்தியிலும்  செயல்பட்டுக் கொண்டே இருப்பது   அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவரது பள்ளிகள் அவரின்  கண்ணின் மணிகள் போல இருந்தன. அவர் கண்கள் பலவீனப்பட்டுக் கொண்டே வந்து,  ஒரு கட்டத்தில் அவர் முழுவதும் பார்வையற்றவர் ஆனார். சில நேரங்களில் அவர் சபையில் பிரசங்கிற்பதற்காக கைபிடித்து  பீடத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்டார். 

அவர் தனது விடுதலைக்காக ஏங்கினார். தனது மரணம் குறித்து தினம் தோறும் பேசினார். தனது துயரங்களை  நீட்டிக்க வேண்டாம் என இறைவனிடம் மன்றாடினார். அவர் ஜெபம் கேட்கப்பட்டது. செப்டம்பர் 1, 1813.அன்று மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். 


பின் குறிப்பு

ஹேகலண்ட் நோயுற்று இருந்த காலங்களில் மிஷினரி ஜெனிக்கெ  தரங்கம்பாடியில் இருந்தார். அவரை அடிக்கடி சென்று சந்தித்து பேசி வந்தார். அவரது மரண தருவாயிலும், அடக்க ஆராதனையில் உடன் இருந்ததாக ஜெனிக்கே தனது நாட்குறிப்பில் கூறியுள்ளார். 



திங்கள், 4 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14, ஏற்ற காலத்திற்காய் வைக்கப்பட்டிருக்கும் முழுமையடையாத தரிசனங்கள் (Unfulfilled Visions)



தனது பழைய சிறிய வீட்டிற்கு திரும்பிய பின் ஊருக்கு வெளியே தனக்கிருந்த தரிசு நிலத்தில் தோட்டம் ஒன்றை  உருவாக்கும் பணியில் ஜான் இறங்குகிறார். பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களோடு இந்த தோட்டத்திற்கு செல்கிறார். மாண்வர்கள் தோட்டவேலை, செடிகள், பூச்சிகள் சேகரிக்கும் வேலைகளை செய்யும் சமயம் ஜான் அங்கிருக்கும் கிறிஸ்தவர்களையும், பிற மதத்தவர்களையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டார். அங்கிருந்த மலையின் மீது ஏறி சூழ்ந்திருக்கும் கடல், சுற்றிலும் கிராமங்களால் வளையப்பட்ட தரங்கம்பாடி நகரம், தோட்டங்கள் நெல் வயல்கள் இவற்றையெல்லாம் பார்த்து தன் எண்ண ஓட்டத்தை இவ்வாறு பதிவிடுகிறார். " நான் இங்கே ஏதோ நன்மை  செய்ய அனுமதிக்கப்படுகிறேன் , இந்த சுற்றுப்புறம் முழுவதும், ஆம், இந்த நிலப்பரப்பு முழுவதும் கர்த்தரைப் பற்றிய அறிவாலும், மகிழ்ச்சியாலும், ஆசிர்வாதத்தாலும்   நிரப்பப்படும்." 


இது ஒரு சுவிசேஷகனின்  வெற்றுக் கனவாக, ஆசையாக கருத எனக்கு தோன்றவில்லை.  என்னைப் பொறுத்தவரை இது ஒரு முற்றுப் பெறாத, முழுமை அடைந்திடாத  தரிசனம் (Unfulfilled Vision)

ஏற்ற காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த தரிசனத்தை முழுமை அடைய வைக்கும் பணி ஒரு வேளை என்னுடையதாக, நம்முடையதாக இருக்கலாம். ஒவ்வொரு மிஷினரி கல்லறையையும், அவற்றின் பின் உள்ள வரலாறுகளையும் தோண்டி எடுக்க காரணம், சாகச நாயகர்களை வெளிக்கொண்டு வருவதற்கு அல்ல.  அவர்களுக்கு தேவன் கொடுத்த தரிசனங்கள், அவர்களோடு புதைந்து போய்  விடக் கூடாது. அந்த  தரிசன சுடர்களை நாம் உள்வாங்கி,  இசக்கார் புத்திரரைப் போல காலங்களை கணித்து, நம் காலத்தில் முழுமை அடைய வைப்பதோ, அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுவதோ நம் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என எண்ணுகிறேன். இந்த புரிதலோடு இனிவரும் பகுதிகளை புரட்டுவீர்களானால் இந்த எழுத்துக்களும், அதன் பின் உள்ள பெரும் உழைப்பும்,  அவற்றின்  பலனை பெறும் என  அவருக்குள் நம்புகிறேன். 


ஜான் தொடர்ந்து எழுதுகிறார்- "எங்கள் சபைகளும் பள்ளிகளும் இப்போது மிகவும் ஊக்கமளிக்கின்றன, நம்பிக்கை தருகின்றன. . 

சபையில் இன்னும் பல பயனற்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் உண்மையில் மிஷனைச் சேர்ந்தவர்கள் என்று என்னால் கணக்கிட முடியாது. ஆனால் இன்னும் பலர் உண்மையில் கிறிஸ்தவத்திற்கு தகுதியுள்ளவர்களாக குறைந்தபட்சம் கண்ணியமுள்ளவர்களாக நடக்க துவங்கியுள்ளனர்.நற்கருணைக்காரர்களுக்கு  பிற்பகலில் போதிக்கின்ற எங்களுடைய புதிய ஒழுங்கு இதற்கு காரணமென்று கருதுகிறேன். நற்கருணைக்கு  முந்தைய வாரம் முழுவதும்,   உபதேசிப்பதும், ஆய்வு செய்வதும்  பெரிய அளவில் பலனளித்தது. குறிப்பாக, ஞானஸ்நானத்திற்கான தயாரிப்பில் நாங்கள்   கவனமாக இருக்கிறோம். பல்வேறு பணிகளுக்கிடையே  ஞானஸ்நானம் பெற விரும்புவோர், ஒரு உண்மையான முன்னேற்றத்திற்கு நெருக்கமாக.வருவதற்கு அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், ஞானஸ்நானம் பெருகிறவர்களின்  எண்ணிக்கை குறைகிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் கிறிஸ்தவத்தின் பரவல்பின்னடைவுக்குப் பதிலாக  மேம்பட்டது.  ஞானஸ்நானம் பெற்றவர்கள்   உறுதியாக நிலைத்திருக்க  முயற்சி செய்கிறோம்இதற்காக அவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறோம். 


எங்களின் மிகப்பெரிய மகிழ்ச்சி எங்கள் தமிழ்ப்பள்ளியில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. நாங்கள்

அலட்சியமான அல்லது விருப்பமில்லாத மனநிலையை அங்கு ஒருவரிடமும் காண இயலவில்லை. பெரும்பான்மையான  சிறுவர் , சிறுமிகளிடம் கடவுள் மீதான பயமும்,  உண்மையான அக்கறையும் இருப்பதை காண முடிகிறது. பல மாணவர்கள்  தங்கள் ஆசிரியர்களை மிஞ்சி நிற்கிறார்கள். மாணவிகள்  தங்கள் ஆசிரியைகள் மற்றும் இரண்டு துணை ஆசிரியைகளிடம்  சிறந்த முன் உதாரணங்களைக் கொண்டுள்ளனர்.  அடக்கமும், விடாமுயற்சியும் அனைத்து பள்ளிக் குழந்தைகளிடமும் மேலெழுந்து நிற்கின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டிய மாணவர்களின்  வசதிக்காக நாங்கள் மதிய பள்ளியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக

காலுறைகள்  பின்னுவது  மற்றும் பாய்களை உருவாக்குவது போன்றவற்றை அறிமுகம் செய்தோம். , இது 

அவர்களுக்கு புதிய வாழ்வை  கொடுத்தது. போல் தெரிகிறது. மிகவும் தொந்தரவாக இருந்த, மாணவர்களுக்கு  அடிக்கடி ஏற்படும் நோய்களும், தோலழற்சிகளும்,   உடையில் உள்ள அழுக்குகளும் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டன. 

தேவாலயத்திலும், தெருக்களிலும் கண்ட தூய்மையின் நிமித்தம் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பாழ் பட்டுக் கிடந்த  எங்கள் இரண்டு பெரிய  பள்ளித் தோட்டங்கள் இப்போது அழகான ஆனந்த தோட்டங்களாக மாறியுள்ளன. இவை, குழந்தைகளுக்கும், தோட்டங்களுக்கும் சிறந்த நண்பனான, எனது யோனத்தான், மிஷினரி ராட்லரால் உருவாக்கப்பட்டவை.எங்கள் இருவரில் ஒருவர்  பள்ளிக்குள் வரும்போது தங்கள் ஆசிரியர் மற்றும் தகப்பனிடம் மாணவர்கள் வெளிப்படுத்தும் அன்பும் , மகிழ்ச்சியும் நன்றாக தெரிகிறது. தண்டனை என்பது மிக அரிதாகவே தேவைப்பட்டது. 

எங்கள் வீட்டில் வளர்ந்தவர்களில்  ஒருவர், இப்போது தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருக்கிறார். மற்றொருவர்  திறமையான மிகவும் அங்கீகரிக்கப்பட்ட  அரசாங்க  மொழிபெயர்ப்பாளர். இருவர் ஐரோப்பிய வணிகர்களிடம் எழுத்தார்களாக பணி புரிகின்றனர். மற்றவர்களும் சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றனர்.  இவர்கள் கடவுளின் ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்கிறார்களோ இல்லையோ,  குறைந்தபட்சம்   

 பூமியில்  பயனுள்ள குடிமக்களாக உள்ளனர். பல ஐரோப்பிய வீடுகளின் தரைகள் ,   10 முதல் 40 டாலர்கள் வரை விலையுள்ள, . பள்ளியில் செய்யப்பட்ட பாய்களால் மூடப்பட்டுள்ளன. இங்கொன்றும் , அங்கொன்றுமாக  சுமார் 4 டாலர்கள் விலையுள்ள  அரிசி பெட்டிகள் உள்ளன. ஐரோப்பியர்கள் எங்கள் காலுறைகளை விரும்புகின்றனர். 20 ஜோடிகளுக்கு 30 ரிக்ஸ் டாலர் விலை வருகிறது. நாங்கள் இப்போது மேஜர் ஜெனரல் அபெஸ்ட்டிற்கு இருபது ஜோடிகளை தயாரித்து வருகிறோம். 

இங்கு வசிக்கும் பலர் பிரம்பு வேலைக்காக நாற்காலிகள், படுக்கைகள், பல்லக்குகள் மற்றும் சோபாக்களை எங்களுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூர்காரர்கள் நடுவே காலுறை தைக்கும் தொழிலகம் ஒன்றிக்கு திரு. ராட்லர் அடிக்கல் நாட்டியுள்ளார்.


பின்குறிப்பு 


தன்னிடம் தங்கிப் படித்த மாணவர்களில் ஒருவர் தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருப்பதாக ஜான் குறிப்பிட்டுள்ளார். அது, தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்பது எனது அனுமானம். 1789 முதல் வேதநாயகம் சாஸ்திரியார் இரண்டு ஆண்டுகள் அருட்திரு. ஜான் அவர்களுடன் தங்கி கல்வி கற்றுள்ளார். அதன் பின்  தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த இறையியல்  கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் என்கிற புத்தகத்தில் அவரது  தரங்கம்பாடி வாழ்க்கை குறித்து குறிப்பிட்டுள்ளவைகள் மேலே ஜான் எழுதியதற்கு எந்த விதத்திலும் முரணாக இல்லை.."1789ம் ஆண்டு வேதநாயகம் டாக்டர் யோன் ஐயரோடே தரங்கம் பாடிக்கு போனார்.யோனயர் வேதநாயகத்திற்குத் தொடக்கமாக வேத சாஸ்திரத்தை (a book on theology) எடுத்துக் கொடுத்து, நீ இந்த புத்தகத்தை படித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதை அவர் நன்கு படித்தார்.....வேதநாயகம் தரங்கன் பாடியில் படிக்கின்ற போது ஒவ்வொரு நாள் மாலையிலும் யோனையரோடே உலாவப் போகும் வழக்கம் இருந்து. அப்பொழுது ஐயர் அநேக உபதேசங்களையும் சீரிய கதைகளையும் சொல்லிக் கொண்டு நடந்து போவார். டாக்டர் யோனையரும், கேமரையர், (Dr. Cammerer)  உரோத்துவர் (Rottler) முதலிய ஐயர்மார்களும் வேதநாயகத்தைப் பட்சமாய் விசாரித்தார்கள்."


பின்குறிப்பு-2 

திருநெல்வேலி பகுதியில் பிரசித்தி பெற்ற ஜான் தேவசகாயம் ஐயரும் அருட்திரு. ஜான் அவர்களின் மாணவர்களில் ஒருவர்




உதவிய நூல்கள் 
1.  History of the Tranquebar Mission- J. Fred. Fenger
2. தஞ்சாவூர் சுவிசேட கவிராயராகிய வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14 , மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் நடுவேயான ஒரு போர் வீரனின் ஊசலாட்டம்

 

ஒரு வேட்டைக்காரனைப் போல அருட்திரு. ஜான் அவர்களின் வரலாற்றை தேடி அலைந்தாலும் ரேனியஸின் நாட்குறிப்புகள்  போல தொடர்ச்சியாக குறிப்புகள் கிடைக்காததால், அவரது வரலாற்றை ஒரு நேர்கோட்டில் என்னால் கட்டமைக்க இயலவில்லை. எனவே, கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். எனக்கு பின் வரும் ஆய்வாளர்களோ, உயிர் பிழைத்து கிடந்தால் நானோ  இன்னும் அதிக தகவல்களை வரும் காலங்களில் தரக்கூடும்.

இந்தியாவில் இருந்த முதல் ஆறு வருடங்கள் அவரது சம்பளம் வெறும் 250 ரிக்ஸ் டாலர்கள் தான். இதனால் அழுக்கான ஆடைகளை அணிய நேர்ந்ததாகவும், போர்வை, உடை, தேநீர், சர்க்கரை போன்றவை அவருக்கு தேவையாய் இருந்ததை பிறர் அறிய நேரிட்டதையும் சொல்கிறார். அவருக்கு அருகில் வசித்த வசதியானவர்கள் மூலமாக இந்த தேவைகள் சந்திக்கப்பட்டாலும், வாங்குவதை பார்க்கிலும் கொடுப்பதை விரும்பிய அவர் ஒரு உள்ளான அவமானத்துடன் அவைகளை பெற்றுக் கொண்டார். 

இங்கு வாழ்ந்த மிஷினரிகளுக்கு ஐரோப்பிய மணப்பெண் கிடைப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், ஜான் அவர்களுக்கு நல் வாய்ப்பாக நல்லதொரு மணப்பெண் கிடைத்தார். ஆனால், அந்த இளம் தம்பதிக்கு வாழ்க்கையை நடத்த போதுமான வருமானம் இல்லை. துயர பெருமூச்சுகளின் நடுவே அவர்கள் மண வாழ்வு துவங்கியது. அவர்கள் ஜெபித்தார்கள், ஐரோப்பாவிற்கு கடிதம் எழுதினார்கள். உதவிகள் வர தாமதித்தது. வேறுவழியின்றி ஜான் கடல் சங்குகள் மற்றும் அபூர்வ பொருட்களை சேகரித்து விற்று, அதில் கிடைத்த சில நூறு டாலர்களை கொண்டு தன் கடன்களை தீர்த்ததை அறிய முடிகிறது. 

கடைசியில், நிரந்தர வருமானத்திற்கு அவர் ஒரு வழியை கண்டுபிடித்தார். ஐரோப்பியர்களுக்கான பள்ளி நடத்தும் அவரது திட்டம் சக பணியாளர்களுக்கு உவப்பாக இல்லை. ஊழியம் சாராத பள்ளிக்கூடம் நடத்துவது ஒரு மிஷினரிக்கு பொருந்தி வராது. அது, பணித்தளத்தின் எதிர் காலத்தையும் , ஒட்டுமொத்த ஊழியத்தையும் பாதிக்கும் என்பது மற்றவர்களின் எண்ணமாக இருந்தது. துணிச்சலோடு அவர் ஒரு பெரிய வீட்டினை பள்ளி நடத்த வாங்கிய போது இந்த பயம் இன்னும் அதிகரித்தது.  

அது ஒரு உண்டு, உறைவிட பள்ளி என அனுமானிக்க முடிகிறது. அந்த பெரிய வீட்டில்18 ஐரோப்பிய மாணவர்களும், அதே அளவு தமிழ் மாணவர்களும் இருந்தனர்.  உயர் தட்டு மாணவர்களுக்காகவும்,  அவரது  குடும்ப தேவைக்காகவும் குதிரை வண்டியும்,குதிரைகளும் இருந்தன. நாகப்பட்டினத்தில் இருந்து தப்பி வந்த அநேக குடும்பங்களை அவர் ஆதரித்தார். அவர்களது பொருட்களும் இந்த வீட்டில் இருந்தன. அங்கிருந்த தோட்டத்தில் கிட்டத்தட்ட 60 பேர் பணியாற்றினர். 

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அவரது பல்வேறு திட்டங்களை அவர் அனுபவித்த கொடிய வறுமை தடுத்து நிறுத்தி இருந்தது. மிஷனில் நிதி இல்லாத காரணத்தால், ஐம்பதிற்கும், நூறுக்கும் கணக்கு பார்க்கும் நிலை மாறி, நல்லவற்றை செய்ய அவரால் முயற்சிக்க முடிந்தது. இது ஊழியத்திற்கும், உள்நாட்டு இளைஞர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.  அதே நேரம், ஊழிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக யாரும் அவரை குற்றப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆண்டுக்கு வெறும் 3000 ரிக்ஸ் டாலர் வருமானம் தந்த ஊழிய பாதையை விட்டு வெளியேறுவது ஒருபோதும் அவரது எண்ணமாக இல்லை. 

இருப்பினும், இந்த சொற்ப கால சந்தோஷத்திற்கு பின் அவரின் நீண்ட துயர குறிப்பு ஒன்று கிடைக்கிறது.  தனது  பெருமையான நினைவுகளை தாழ்த்துவதற்காக அடி மேல் அடி விழுந்ததாக குறிப்பிடுகிறார். "நான் அடிக்கடி சுகவீனமடைந்தேன். பள்ளியில் 13 குழந்தைகள் ஒரே நேரத்தில் சுகவீனமடைந்தனர். ஒரு வருட இடைவெளியில் என் மூன்று சொந்த குழந்தைகளை ஆண்டவர் தன்னிடம் எடுத்துக் கொண்டார். இவை என் சந்தோஷத்தையும், மகிழ்வான நம்பிக்கைகளையும் தின்று போட்டன. என்னை நான் எதிர்காலத்தின் பயனற்ற சுமையாக எண்ணினேன். ஒரு சிதைந்த யுத்த வீரனாய், என்னை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி துயரத்தின் தொனியுடன் கேட்டிருந்தேன்.  பள்ளியில் தங்கியிருந்த பாதிக்கு மேலான மாணவர்களை பெற்றோர் திரும்ப அழைத்துக் கொண்டனர். அது எனக்கு பிடித்திருந்தது. மற்ற மாணவர்களும் அப்படி திரும்பி செல்லும் பட்சத்தில், மிச்சமிருக்கும் என் சொற்ப நாட்களை ஜெர்மனியில் உள்ள என் சகோதரி இடத்தில் சென்று துயரத்துடன் கழிக்க தடையேதும் இருக்காது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால், என் நன்மைக்காக என்னை தாழ்த்திய ஆண்டவர் சுகத்தையும், பெலத்தையும், மகிழ்ச்சியையும் எனக்கு திரும்ப கொடுத்தார். ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகளை கொடுத்துள்ளார். புத்தாண்டில் மூன்றாவது குழந்தையை எதிர்நோக்குகிறேன். அவர் என்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபுவாக மாற்றி, ஆசீர்வதித்திருக்கிறார்."

இந்த சம்பவங்களுக்கு பின், தனக்கும் தனது ஒன்பது மாணவர்களுக்கும் இந்த பள்ளிக்கூட வீடு பெரியதாக இருந்ததால் அதை விற்று விட்டு, தான் வாசித்த பழைய சிறிய வீட்டிற்க்கே ஜான் திரும்பி விட்டதை அறிய முடிகிறது. 

பின் குறிப்பு-1 இந்த குறிப்புகளை ஜான்  1785 ஆம் ஆண்டு எழுதியதாக தெரிகிறது. . ஜான் குறிப்பிட்ட மூன்றாவது குழந்தை புத்தாண்டில் எப்பொழுது பிறந்தது  என தெரியவில்லை?. அவரது கடைசி காலத்தில் துயரம் தருகிற ஒரு குறும்புக்கார  மகன் இருந்தான் என அறிய முடிகிறது.  அந்த மகனின் பெயர் கிடைக்கவில்லை.அவன் தான் அந்த புத்தாண்டில் பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும்.  ஏனெனில்,  Ernst Gottlieb எனும் அவர் குறிப்பிட்டிருக்கும் ஆண்  குழந்தை 15 செப்டம்பர் 1787 இல் தனது மூன்றாது வயதில்  இறந்து கல்லறை எண் 14 இல் புதைக்கப்பட்டுள்ள நான்காவது குழ்ந்தை பட்டியலில் இடம் பெறுகிறது. அவரது ஒரு மகள் மற்றும் மனைவி பற்றிய குறிப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.

பின் குறிப்பு-2கல்லறை எண் 14 இல் இப்பொழுது வாசகங்கள் எதுவும் இல்லை. ஆனால், கீழ்கண்ட ஜெர்மானிய வாசகங்கள் இருந்ததாக பழைய குறிப்புகள் கூறுகின்றன. இந்த உச்ச பட்ச துயரத்தின் வாசகங்கள் மீண்டும் அந்த கல்லறை மீதோ, அருகிலோ இடம் பெற வேண்டும் என்பது என் பெருவிருப்பம் 

முதல் மூன்று குழந்தைகளின் இறப்பிற்கு பின் அவர்கள் பெயர் விபரங்களுக்கு முன் எழுதப்பட்டவை - Hier liegen die Freuden der Eltern bis zum frohen Wiedersehen  (Here lie the joys of the parents until the happy reunion)நான்காவது மகனின் பெயருக்கு முன்னால் - Ach, auch Du, theurster Sohn (Ah, you too, dearest son). கடைசியாக- Wer folget nun? Wachet, denn ihr wisset nicht, wenn es Ziet ist. (Who follows now? Watch, for you do not know when it is time)

பின்குறிப்பு: 3தன்னை, தன் சார்ந்தவர்களை வேதாகம பாத்திரங்களோடு ஒப்பிடுவது ஜானின் வழக்கமாக இருந்துள்ளது. என் கண்ணில் பட்ட சிலவற்றை சொல்லலாம் என தோன்றுகிறது. தன் இழப்பின் காலத்தில் தன்னை யோபுவோடு ஒப்பிடும் இவர், பின் தன்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபு (Recovered Job) என குறிப்பிடுகிறார். எல்லா சூழலிலும் இவரை புரிந்து கொண்டவராய், ஒத்தாசை செய்பவராக இருந்த ராட்லர் குறித்து கூறும் போது ராட்லர் எனது யோனத்தான் என கூறுகிறார். ஜான்சன், லீபெக் எனும் தனது  இரு மாணவர்கள் மீது இவர் தனி கவனம் செலுத்துகிறார். பெரு நம்பிக்கை கொள்கிறார். தனக்கு பின் மிஷனை வளர்த்தெடுப்பார்கள் என நம்புகிறார். இவர்களை தனது தீமோத்தேயுக்களாக வர்ணிக்கிறார். (அவர் நம்பிக்கை பொய்த்துப் போனது தனி கதை)





உதவிய நூல்கள் History of the Tranquebar Mission- J. Fred. Fenger

Tranquebar Cemeteries and Grave- Monuements- Karin Kryger and Lisbeth Gasparski