கடந்த அத்தியாயத்தில் ஜான் பகிர்ந்து கொண்ட மகிழ்வான தருணங்கள் மீது இருளின் நிழல் மெல்ல படியத் துவங்கியது. மெச்ச தகுந்த விதத்தில் பள்ளிகளுக்காக ஜான் பெரிய முயற்சிகள் எடுத்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தனக்காக அவர் குறித்துக் கொண்ட பாதையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து நடந்தார். ஆனால் மறுபுறம் ராட்லரை தவிர மற்ற சக ஊழியர்களால் அவரது திட்டங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக ஐரோப்பிய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது முள்ளாக அவர்கள் கண்களை உறுத்தியது. அது ஒரு நல்ல காரியமாக இருப்பினும், ஓசையின்றி ஜானையும் அவர் சார்ந்தவர்களின் கவனத்தையும் திசை திருப்பி, .ஊழியத்திற்கு உலை வைக்கும் என எண்ணினர்.
ஜான் மீது முதன் முதலில் புகார் அளித்தவர் மிஷனரி ஹேகலண்ட்' டென்மார்க்கை சேர்ந்த இவர் கோபன்ஹேகனில் இறையியல் கற்று 1785 இல் தரங்கம்பாடி வந்தார். தரங்கம்பாடி மிஷனின் அறிக்கைகளை ஹலே கல்லூரிக்கு அனுப்பும் பணியை ஜான் தான் செய்து வந்தார். இப்பொழுது ஹேகலண்ட்' எழுதுகிறார் " இங்குள்ள மிஷன் பணியில் நானும் பங்கு பெறுவதற்கான தருணம் வருகிறதாக நம்புகிறேன். இப்போது வரை ஜானின் செயல்பாடுகளையும், எல்லாவற்றையும் தானே முன்னிற்று செய்ய வேண்டும் என்கிற அவரது ஆசையையும் ஒரு மௌனப் பார்வையாளனாக பார்த்து வருகிறேன். இனி கல்லூரியுடனான கடிதப் பரிமாற்றத்தில் நான் பங்கு கொள்வது எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது." இதற்காக கல்லூரியில் இருந்து கடுமையான கண்டனத்தைப் பெற்ற ஹேகலண்ட் அதற்கு அடுத்த ஆண்டே இறந்து போனார்.
ஹேகலண்ட் போலவே உடன் பணியாளரான கோனிக் ஜான் உடன் கருத்து வேறுபாடு கொள்கிறார். 17 மற்றும் 15 வயதுடைய ஜான்சன், லெபெக் எனும் இரு மாணவர்கள் மீது பெரு நம்பிக்கை வைக்கிறார், ஜான் . அவர்கள் மிஷினரிகளாக மாறுவார்கள். கல்வி நிலையங்களுக்கு தலைமை ஏற்பார்கள் என எதிர்பார்க்கிறார். தனது தீமோத்தியுக்களாக எண்ணி உயர் கல்விக்கு ஐரோப்பா அனுப்புகிறார். ஆனால், அவர்கள் மிஷனில் இருந்து விலகி செல்கின்றனர். "அவர்களின் முக்கிய ஆதாரமாக இருந்த என்னைப்போல் இதில் துயரம் அடைந்தவர்கள் யாரும் இருக்க இயலாது" என எழுதுகிறார் ஜான்.
இவை எல்லாவற்றிற்கும் மேல் ஜானுக்கும், ஊழியத்திற்கும் இருந்த மிகப் பெரிய எதிரி "காலத்தின் ஆவி" (Spirit of the Time). புறஜாதிகளுக்கு மத்தியில் ஊழியம் என்பது 18 ஆம் நூற்றாண்டின் கடைசி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அபத்தமான யோசனையாக மேற்கத்திய உலகில் தோன்றத் துவங்கியது. அது உலகளாவிய ஏளனத்திற்கு ஆளானது. திருச்சபைகளின் இந்த உலகளாவிய சிதைவு, பொருத்தமான, ஆர்வமானவர்களை தரங்கம்பாடிக்கு மிஷினரிகளாக அனுப்பும் பணியை சிரமத்திற்கு உள்ளாகியது.
ஒரு மிஷினரி இறந்து போகிறார். அவர் இடத்தை நிரப்ப சரியான நபர்கள் கிடைக்காததால் புதிய மிஷனரி அனுப்படுவதில்லை. அது பணித்தளத்தில் எஞ்சி நின்ற மிஷினரிகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. "ஜெர்மானிய திருச்சபைகளின் நிலைமை துயரம் தருவது. பவுலுக்கும் , பிற அப்போஸ்தலர்களும் தெரியாத புதிய சுவிஷேசத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற தியாகத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையான செயல்பாடுகளையும் புறந்தள்ளுகின்றனர். இரட்சிப்பிற்கும், எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமான அவரது ஒப்புரவாக்குதலின் ரத்தம் இகழப்பட்டு, கிறிஸ்து ஒரு நல்ல போதகராக மட்டுமே பார்க்கப்படுகிறார். " என தன் கருத்தை பதிவிடுகிறார் ஷ்வார்ட்ஸ்.
இதை தவிர்த்து, தரங்கம்பாடி அரசுக்கும், மிஷினரிகளுக்கும் இணக்கமான உறவு இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் கோபன்ஹேகன் சென்று தங்கள் தரப்பு நியாத்திற்காக வாதாட வேண்டும் என்று ஜான் எண்ணுமளவுற்கு இந்த பனிப்போர் தீவிரமாக இருந்தது. இதற்காக மெட்ராஸ் வரை சென்றவர் , கப்பல் எதுவும் இல்லாததால் மீண்டும் தரங்கம்பாடி திரும்பினார்.
புதிதாக அனுப்பப்பட்ட மிஷினரிகளில் ஒருவரான ஃப்ருச்டெனிச்ட் (Fruchtenicht) குடி நோயாளியாக மாறி பெரிய தலைவலி ஆகிறார். இந்த சம்பவத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே ஜான் எழுதுகிறார்., "ஒரு புதிய நேர்மையான மிஷினரி எங்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கக் கூடும். அப்படி பொருத்தமான மனிதர்கள் கிடைக்காத பட்சத்தில் எங்களை இப்படியே இறந்து போக அனுமதிப்பதே சிறந்தது."
இன்னொரு மிஷினரி இப்படி பதிவிடுகிறார். " ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், உலகமெங்கிலும் பெருகிவரும் கடவுள் மறுப்பு ஒரு காட்டாற்று வெள்ளம் போல தன் முன் உள்ள எல்லாவற்றையும் அடித்துச் சென்று விடுவது போல் பயமுறுத்துகிறது. அதை எங்களாலும் எதிர்கொள்ள இயலவில்லை. இந்த தேசத்தில் நீதிநெறிகள் சிதைவதை பார்க்கும் பொழுது, பிரசங்கங்கள், ஜெபங்கள், எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டியும் எங்கள் சபைகளில் அனுதினமும் அதிகமாக இந்த தாழ்ச்சியை காண நேரிடும் போது, ஜெபத்தில் கடவுளுக்கு முன்பாக மட்டுமே வைக்கக்கூடிய இந்த பன்முக பிரச்சனைகளின் கீழ் நாம் மூழ்க வேண்டி வரும் என்று உணர்கிறோம். இந்த மிஷன் தன முடிவை நெருங்குகிறது என நாங்கள் எண்ணுவதற்கு பல காரணங்களை நாங்கள் முன் வைக்க முடியும்". இப்படியான துயர சூழலில் தான் தரங்கம்பாடி மிஷன் தனது முதலாம் நூற்றாண்டை கொண்டாடியது.
பிப்ரவரி 13, 1808 அன்று ஆங்கிலேயர்களால் தரங்கம்பாடி கைப்பற்றப்பட்டதுபோர் உக்கிரமாக நடந்த ஆண்டுகளில்டென்மார்க் மற்றும் டென்மார்க் காலனிகள். இடையேயான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மதராசில் இருந்த ஆங்கிலேய அரசு தரங்கம்பாடி மிஷனுக்கு சில ஆதரவை வழங்கியது. இந்த தேவை மிகுந்த நாட்களில் மிஷனுக்கு உதவியவர்களில் முக்கியமானவர் ஷவார்ட்ஸின் நண்பரான தஞ்சாவூர் மன்னர்.
ஜானுக்கு இப்பொழுது வயதாகி விட்டது. நோய்களும், துயரங்களும் அவரை மிகவும் பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பாக அவரது மகனின் கெட்ட நடத்தை அவரை மனமடிவிற்கு உள்ளாகியது. இந்த பலவீனங்களின் மத்தியிலும் செயல்பட்டுக் கொண்டே இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவரது பள்ளிகள் அவரின் கண்ணின் மணிகள் போல இருந்தன. அவர் கண்கள் பலவீனப்பட்டுக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் அவர் முழுவதும் பார்வையற்றவர் ஆனார். சில நேரங்களில் அவர் சபையில் பிரசங்கிற்பதற்காக கைபிடித்து பீடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் தனது விடுதலைக்காக ஏங்கினார். தனது மரணம் குறித்து தினம் தோறும் பேசினார். தனது துயரங்களை நீட்டிக்க வேண்டாம் என இறைவனிடம் மன்றாடினார். அவர் ஜெபம் கேட்கப்பட்டது. செப்டம்பர் 1, 1813.அன்று மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார்.
பின் குறிப்பு
ஹேகலண்ட் நோயுற்று இருந்த காலங்களில் மிஷினரி ஜெனிக்கெ தரங்கம்பாடியில் இருந்தார். அவரை அடிக்கடி சென்று சந்தித்து பேசி வந்தார். அவரது மரண தருவாயிலும், அடக்க ஆராதனையில் உடன் இருந்ததாக ஜெனிக்கே தனது நாட்குறிப்பில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக