திங்கள், 3 நவம்பர், 2025
3. ரேனியஸ்-17
ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே....
ஞாயிறு, 2 நவம்பர், 2025
2. ரேனியஸின் குடும்பம்
ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே (கடிதங்கள், மனிதர்கள், இடங்கள், சபைகள்)
🪶 தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பியவர்கள் வெகு சொற்பம். ஒரு முறையேனும் தாய் நாட்டிற்கு சென்று வந்தவர்கள் கூட எண்ணிக்கையில் வெகு சிலரே.
🪶 இந்தியாவியிலேயே மரித்து அடக்கம் பண்ணப்பட்ட நிறைய மிஷினரிகளில் சிலர் பெயர்கள் மட்டுமே இன்று நாம் அறிந்திருக்கிறோம். பெயர் தெரியாத, எங்கு புதைக்கப்பட்டார்கள் என்கிற விவரம் கூட இல்லாத மிஷனரிகளின் எண்ணிக்கை மிகப் பெரிது.
🪶 ஓரளவு நாம் அறிய வருகிற மிஷினரிகளில் கூட, அதிலும் குறிப்பாக இளம் வயதில் மரித்துப் போன, அவர்கள் வாழ்விற்கு பின், அவர்களது குடும்பம் என்ன ஆனது என்பதை யாரும் எண்ணிக் கூட பார்த்ததில்லை.
🪶 ரேனியஸின் வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல.
🪶 வருங்காலங்களில் ரேனியஸ் குறித்து நாம் எடுத்திருக்கும் பெரு முயற்சி போல, எல்லா மிஷினரிகளின் வாழ்க்கையும் ஆழமாக பதியப்பட வேண்டும் என்பதே நமது பெரு விருப்பம். அந்த விருப்பத்தின் சிறு தொடக்கமாக ரேனியஸ் தனது 48வது வயதில் மரிக்கும் போது விட்டுச் சென்ற குடும்பம் குறித்து நான் மேற்கொண்ட ஆய்வின் சிறு பகுதியை உங்கள் முன் வைக்கிறேன்.
🪶 ரேனியஸிற்கு எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பதிலிலேயே நிறைய குழப்பங்கள் உள்ளன.
🪶 ரேனியஸ் மறைவை ஒட்டி இரங்கல் குறிப்புகள் வெளியிட்ட பத்திரிகைகளில் ஒன்று அவருக்கு ஆறு குழந்தைகள் என்றும், மற்றொன்று ஒன்பது குழந்தைகள் என்றும் பதிவிட்டுள்ளன.
🪶 ரேனியஸின் வம்சாவழியை சேர்ந்த ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பித் தந்த குடும்ப மரத்தில் 15 குழந்தைகளின் பெயர்கள் உள்ளன.
🪶 எரிக் பிரிக்கன்பேர்க் ரேனியஸ் மரணத்திற்கு பின்னான சம்பவங்களை சொல்லும் போது, ரேனியஸின் விதவை மனைவிக்கு ஓய்வு ஊதியம் வழங்கவும், ஒன்பது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கவும் சி.எம்.எஸ் முன் வந்ததை குறிப்பிடுகிறார்.
🪶 எனவே, ரேனியஸ் மரிக்கும் போது அவருடைய ஒன்பது குழந்தைகள் உயிரோடு இருந்ததை அறிய முடிகிறது. ரேனியஸ் நாட்குறிப்புகளில் அவர் தனது மூன்று குழந்தைகளின் மரணத்தை பதிவு செய்துள்ளார்.
🪶 ரேனியஸ் கல்லறை குறித்து கூறும் போது அவர் கல்லறை அருகே இருந்த இரு கல்லறைகளில் ஒன்று அவர் மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் மரணமடைந்த பெண் குழந்தையின் கல்லறை என்கிற செவி வழி செய்தி உண்டு. அந்த குழந்தையின் பெயர் நமக்கு கிடைக்கவில்லை.
🪶 இப்படியான பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, கிடைத்த தரவுகளை வைத்து ஒரு பட்டியலை தயாரிக்க முயன்றேன். என்ன முயன்றும்...முழு பட்டியலையும் உறுதி பட தர இயலவில்லை.
🪶 வரும் காலங்களில், இன்னும் மேம்பட்ட ஆய்வுகள் செய்யும் பொழுது அந்த துல்லியமான பெயர் பட்டியல் கிடைக்கக் கூடும்.
🪶 அதுவரை, இந்த உறுதி செய்யாத பட்டியலை உங்கள் முன் வைக்கிறேன்.
வாழ்விணையர்
அன்னா வான் சாமரின். 1800 இல் நாகபட்டிணத்தில் ஒரு டச்சு வணிக குடும்பத்தில் பிறந்தவர். இவர்களது திருமணம் 1816 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. எனில், திருமணத்தின் போது வான் சாமரின் அம்மையாரின் வயது 16, ரேனியஸ் இறக்கும் போது அவர் மனைவியின் வயது 38.
21.08.1874 இல் பெங்களூருவில் இவர் நித்திரை அடைந்ததாக அறிய முடிகிறது.
இனி குழந்தைகள் குறித்த விபரங்கள்:
1. ரேனியஸின் முதல் குழந்தை தியோடோஸியா என்கிற பெண். 17.01.1817 இல் பிறந்த இந்த குழந்தை 22.11.1818 நாள் அன்று இரண்டு வயது பூர்த்தியாகும் முன்பே இறந்து போனது. (ரேனியஸ் நாட்குறிப்பின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)
2. ரேனியஸின் இரண்டாவது குழந்தை ஜோஸ்யா ரேனியஸ். 1818 இல் பிறந்தவர். ரேனியஸின் மரணத்திற்கு பின் இஸ்லிங்க்டனில் உள்ள சி.எம்.எஸ் மிஷினரி பயிற்சிப் பள்ளியில் இறையியல் கற்று ஸ்காட்லாந்தில் போதகராக பணியாற்றியவர். ரேனியஸின் நாட்குறிப்புகளை 1841 ஆம் ஆண்டு வெளியிட்டவர் இவர் தான்.
11-02-1878 இல் ஸ்காட்டிலாந்தில் இறந்தார். (பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது )
3. ரேனியஸின் மூன்றாவது குழந்தை காத்ரீனா ரேனியஸ் . இவர் 1819 இல் பிறந்தவர். 1835 ஆம் ஆண்டு, இக்கட்டான கால கட்டங்களில் ரேனியசுடன் தோளோடு தோள் நின்ற இளம் மிஷினரிகளில் ஒருவரான முல்லர் ஐயரை மணந்தார். முல்லர் ஐயரும் இவரும் சுவிசேஷபுரத்தில் தங்கி இருந்து ஊழியம் செய்து வந்தனர். ஆனால், 1843 இல் முல்லர் ஐயர் அகால மரணம் அடைந்தார்.
முல்லரின் மரணத்திற்கு வெகு காலத்திற்கு பின் காதரின் எல்.எம்.எஸ் மிஷினரி பெஞ்சமின் ரைஸ் என்பவரை மறுமணம் செய்தார். பெங்களூருவில் பணியாற்றிய ரைஸ் தனது முதல் மனைவி ஜேன் என்பவரை 1864 இல் இழக்கக் கொடுத்தவர். ஜேன் நிர்வகித்து வந்த பெண்களுக்கான உறைவிட பள்ளியான எல்.எம்.எஸ் பள்ளியை காதரின் நிர்வகித்தார்.
1887 இல் கேத்தரின் மரணம் அடைந்தார். அதன் பின் பள்ளியை அவரது மகள் ஹாரிட் முல்லர் , அவர் ஓய்வு பெற்ற 1911 வரை நிர்வகித்தார். இந்த பள்ளி மித்ராலயா பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக இன்றும் பெங்களூரு மிஷன் சாலையில் இயங்கி வருகிறது. 1877 இல் மரணம் அடைந்த பெஞ்சமின் ரைஸ் நினைவாக பெங்களூருவில் ஆலயம் ஒன்றும் உள்ளது.
(பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)
4. ரேனியஸ் ஐயரின் நான்காவது குழந்தை சார்லஸ் ரேனியஸ். இவர் 1821 இல் பிறந்தவர். இவரும் குருத்துவ பணியில் ஈடுபட்டவர். 1849-50 இல் ரேனியஸ் உருவாக்கிய டோனாவூரில் இவரும் மிஷினரியாக பணி புரிந்துள்ளார். பெங்களூருவில் பணியாற்றிய இவர் பெயரால் அங்கு "ரேனியஸ் தெரு" என்கிற தெரு பெங்களூருவில் உள்ளது. இவர் 1874 இல் தனது 53வது வயதில் இறந்தார்.
(பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)
5. ரேனியஸ் ஐயரின் ஐந்தாவது குழந்தை 1822 இல் பிறந்த திமோத்தி ரேனியஸ் என்னும் ஆண். திமோத்தி அகஸ்ட்டா சாரா கேத்தரின் என்பவரை 1849இல் சென்னையில் மணம் செய்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள். இவர் 1888இல் சென்னையில் மரணமடைந்தார்.(உறுதி செய்ய முடியவில்லை. )
6. ரேனியஸின் ஆறாவது குழந்தை 1823 இல் பிறந்த லூயிஸ் . லூயிஸ் சிறுவனாக இருந்த போதே 04.03.1834 இல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தான்.(ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)
7. ரேனியஸின் ஏழாவது குழந்தை தியோடோஸியா என்கிற பெண். இது இறந்து போன தனது முதல் மகளுக்கு ரேனியஸ் இட்ட பெயர். 1824 இல் பிறந்த இந்த குழந்தையும் நீண்ட நாள் வாழ்ந்திருக்கவில்லை. ஒரு வருடம் இரண்டு மாதங்கள் மற்றும் ஏழு நாட்களில் 08.12.1825 அன்று இந்த குழந்தையும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தது. (ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)
8. ரேனியஸிற்கு எட்டாவதாக லுய்ஸ் எனும் பெண் குழந்தை 17.05.1828 இல் பிறந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இவரை குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )
9. 02.07.1829 இல் பிறந்த ரேனியஸின் ஒன்பதாவது குழந்தை லிடியா கரோலின் . 1852 இல் இவரது திருமணம் ஜோசப் பெஞ்சமின் கோல்ஸ் எனும் எல்.எம்.எஸ் மிஷினரியுடன் நடைபெற்றது. 5 குழந்தைகளுக்கு தாயான இவர் 1869 இல் மரித்தார். (J.B. கோல்ஸ் அவர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது)
10. 08.07.1831 அன்று பிறந்த ரேனியஸின் பத்தாவது குழந்தை சோபியா ஹாரிட் எனும் பெண். இவர் 1852 இல் ஜான் சார்ஜெண்ட் எனும் மிஷினரியை மணந்தார். 1900 ஜூனில் இங்கிலாந்தில் மரணமடைந்தார். (எரிக்பிரிக்கன்பேர்க் அவர்களின் பதிவு வழியே உறுதி செய்யப்பட்டது)
11. 17.03.1833 இல் பிறந்த ராபர்ட் ரேனியஸின் 11 வது குழந்தை. 1871இல் யுபிமியா டெய்லர் என்பவரை மணம் செய்த இவருக்கு மக்ஸிமிலன் , வயலட் என இரண்டு குழந்தைகள். இவரை குறித்து வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )
12. லுயிசா வில்ஹெல்மினா 14.11.1834 இல் பிறந்த ரேனியஸின் 12 வது குழந்தை. லெவெலின் என்பவரை மணம் செய்த இவர் ஐந்து குழந்தைகளுக்கு தாயாவார். இவர் 1917 இல் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். (உறுதி செய்ய முடியவில்லை. )
13. அன்னி தியோடரா 1835 நவம்பரில் பிறந்த ரேனியஸின் 13 வது குழந்தை. இவர் 1873 இல் பாளையம்கோட்டையில் மரித்தார் என்பதை தவிர வேறு குறிப்புகள் இல்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )
1. ரேனியஸ்- ஒரு முன்குறிப்பு
ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே....(மனிதர்கள், இடங்கள், சபைகள்)
சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ்- (Charles Theopilus Ewald Rhenius)
பிறந்த தினம்: 1790 நவம்பர் 5
பிறந்த ஊர் : மேற்கு ப்ரஷ்யாவில் (Prussia) இருந்த க்ரொடன்ஸ் கோட்டை. (Fortress Graudens)
-ப்ரஷ்யா இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லை. போலந்தின் ஒரு பகுதியாக உள்ளது.
தகப்பனார்:
ஒதோ ரேனியஸ். (Otto Gottileb Nicolaus Rhenius) ப்ரஷ்ய இராணுவத்தில் தரைப்படை அதிகாரி. ரேனியஸ் ஆறு வயதாய் இருக்கும் போது தந்தையற்றவரானார்.
தாயார்: கேத்தரீனா டோரதி. (Catherina Dorothea Schimann)
உடன் பிறந்தவர்கள்:
ஜான் வில்லியம் ரேனியஸ்- மூத்த சகோதரர்.
ஆடம் பிரடெரிக் ரேனியஸ்- இளைய சகோதரர்.
சோபியா காதரீன் ரேனியஸ்- இளைய சகோதரி
பள்ளிக்கல்வி:
மெரின்வர்டரில் (Marienwerden) உள்ள கதீட்ரல் பள்ளி (14 வயது வரை)
14-17 வயதுகள்:
பல்கா என்ற ஊரில் அரசு அதிகாரியாக இருந்த தனது உறவினர் அலுவலகத்தில் பணி.
மிஷினெரி அழைப்பு:
1807 ஆம் ஆண்டு குழந்தைகள் இல்லாத இவரது பெரியப்பா வில்ஹம் ஆண்ட்ரியா ரேனியசின் (Wilham A Rhenius) அழைப்பின் பேரில் மெமெல் ( Memel) என்ற இடத்திற்குச் செல்கிறார்.
இங்கு இருக்கும் போது மொரோவியன் இயக்கத்தின் வெளியீடுகளால் தூண்டப்பட்டு மிஷினரியாக செல்ல முடிவெடுக்கிறார்.
(மெமெல் இப்பொழுது Klaipeda என பெயர் மாற்றம் செய்யப்பட்டு லித்துவேனியாவில் உள்ளது).
இறையியல் கல்வி:
1811 ஆம் ஆண்டு ஜான் ஜெனிக்கே அவர்களால் துவங்கப்பட்ட இறையியல் கல்லூரியில் இணைந்தார். ஆகஸ்ட் 7, 1812இல் குருத்துவ அபிஷேகம் பெற்றார்.
(இந்த கல்லூரி இப்பொழுது மூடப்பட்டு விட்டது)