ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே....
(கடிதங்கள்,மனிதர்கள், இடங்கள், சபைகள்)
ரேனியஸ் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி "Memoir of C.T.E. Rhenius, by his son by J. Rhenius" என்கிற அவரது மகன் J.ரேனியஸ் தொகுத்த நூலில் உள்ளது.
ரேனியஸ் 17 ஆம் வயது முதல் எழுதிய நாட்குறிப்பின் பாகங்களை நாம் காண முடிகிறது. அந்த கால கட்டங்களில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கிலாந்து வந்த பின் அவர் மெல்ல ஆங்கிலத்தில் எழுத துவங்குகிறார். அது வரையிலான நாட்குறிப்புகள் ஜெர்மானிய மொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேனியஸின் ஆரம்ப கால ஆங்கிலத்தையும், முதிர்ச்சி பெற்ற பின் பயன்படுத்திய ஆங்கிலத்தையும் உற்று நோக்கும் போது , ரேனியஸின் மொழி ஆளுமை குறித்து அவரது மகன் பெருமிதம் கொள்கின்றார். சில ஆண்டுகளுக்கு முன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரேனியஸ் ஐயர் சி,.எம்.எஸ் ற்கு, எழுதிய கடிதங்களை வாசித்த ஆய்வாளர் எலிசபெத் வைல்ட் என்பவரும், ரேனியஸ் ஐயரின் ஆங்கில மொழிப் புலமை குறித்த தனது ஆச்சரியங்களை என்னிடம் பதிவு செய்துள்ளார்.
" ஒரு தகப்பனின் அன்போடு நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஒரு மகனுக்குரிய உரிமைகளை அனுபவித்தேன்"
இது பச்மானில் உள்ள பெரியப்பாவின் எஸ்டேடில் கிடைத்த உபசரிப்பை குறித்து 1807 இல் ரேனியஸ் எழுதியது. அவரது எஸ்டேட்டைக் கவனித்துக்கொண்டு இருந்திருந்தால் ஒருவேளை, , அவரது சொந்த தேசத்தில் கிடைத்தற்கரிய ஒரு வாழ்வாக அவருக்கு அமைந்திருக்கும்.
ஆனால், 1807 ஆம் ஆண்டு அவருக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பின்னாட்களில் திரு. ரேனியஸ் தனது ஆரம்பகால அனுபவத்தை குறித்து இவ்வாறு எழுதுவதை காண முடிகிறது.
" தெய்வீக காரியங்கள் குறித்த அறிவில் நான் நடத்தப்பட்டதால் 1807 ம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. இந்த சூழ்நிலையை நான் விளக்க முற்பட்டால் அது நீண்டதாக இருக்கும். நம் ரட்சகரின் ஒரு வசனம் நிறைவேறுவதை என் சொந்த அனுபவத்தில் மறுபடியும் கண்டேன். "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்கிற வசனமும் ‘என்னைப் பின்பற்றி வா‘ என்ற கட்டளையுமே என் ஆத்துமாவை மீட்கும் மாற்றத்தை என்னுள் கொண்டு வர காரணமாயிருந்தன. கிறிஸ்து யேசுவில் இருந்த , ஆண்டவரின் கிருபை என் உள்ளத்திலும் வாசம் செய்ய துவங்கி, சுவிசேஷத்தின் தூய ஒளியில் என்னை தெளிவுபடுத்தியது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." என்கிற யோவான் 3 ஆம் அதிகார வசனத்தை என்னால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடிந்தது.
நித்திய வாழ்வும் , மெய்யான தேவனுமாக எனக்கு வெளிப்படுத்திய கிறிஸ்து ஏசுவின் ஆவியானவர் என் இருதயத்தில் திறந்த வாசலை கண்டதோடு உறுதியான முடிவோடு அவரைப் பின்பற்றும் ஈர்ப்பைத் தந்தார்.
ஒவ்வொரு நாளும் நான் என்னையும், என் தீவிர பாவ நிலைமையை உணரும் அறிவிலும் வளர்ந்தேன். ஏழைப் பாவிகளை நோக்கிய தேவனின் அன்பு மற்றும் கிறிஸ்துவின் மூலமாக செயல்படுத்தப்பட்ட மீட்பு குறித்த அறிவிலும் மேம்பட்டேன். என்னை நான் ஒப்புவித்த ஆசிர்வாதமான ஆவியானவர் மூலமாக, இயேசுவை பின்பற்றவும் , எதிர்காலத்தில் பாவத்திலிருந்து விலகவும் , என் ஆத்துமாவையும் , சரீரத்தையும் அவற்றின் எல்லா வல்லமையோடும் நேர்மையின் பாதையில் நடக்க அர்ப்பணிக்கவும் முடிவெடுத்துக் கொண்டேன். சுருக்கமாக சில வார்த்தைகளில் சொல்லுவதானால், இயேசு கிறிஸ்துவின் மீதான உயிர்ப்புள்ள விசுவாசம் என்னுள் உருப்பெற துவங்கியிருந்தது."
எனது வாழ்வின் இந்த மகிழ்வான தருணங்கள் குறித்து நான் வேறென்ன சொல்ல முடியும்? இது நான் விளக்கிச் சொல்ல கூடாததாக இருக்கிறது. இதை என்னில் நிகழ்த்திய, ஒரு சிறந்த பணியை துவங்கிய , அவரைப் பற்றி நான் என்ன சொல்லுவேன்? துதிக்கப்படுவதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார். நானோ இன்னும் நிறைவற்றவனாக, பாவத்தால் ஏராளமாக கறைபட்டவனாக இருக்கிறேன். உண்மையில் இது என் தேவனின் முன் என்னை தாழ்த்துகிறது. அதே நேரம், உலகம் தரக்கூடாத, உலகத்தால் மறுக்கப்பட்ட என் ரட்சகரின் குணமாக்கும் வல்லமையை நான் உணர வைத்தது. கிறிஸ்துவின் அன்பான கிருபை என்னை அந்த மகிழ்ச்சிக்கு நேராக மென்மேலும் நெருங்கிவரச் செய்யும் என்றும், அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துவைப் போல மாற வைக்கும் என்றும் இந்த வசனத்தின் மூலம் நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கே புகழும் மகிமையும் உண்டாகட்டும். அறியாமையினாலோ, அழுக்கினாலோ, இந்த உலகம் முழுவதும் அவருக்கு எதிராக வந்தாலும், அவரே கர்த்தர் என்பதை நான் மறுதலிக்க கூடாதபடி என் அனுபவங்கள் எனக்கு வல்லமையை தரும். அவரே எல்லாவற்றிக்கும் சதாகாலமும் தேவன்."
ரேனியஸ் மனதில் இந்த பெருமாற்றத்தை விதைத்த காரணிகளாக நான் கருதுவது அவரது பெரியப்பா வீட்டில் அவர் வாசித்த புத்தகங்கள். மிஷினரி சரிதைகள், குறிப்பாக மொரேவியன் திருச்சபை குறித்த நூல்கள் அவரது கவனத்தை ஈர்த்தன. அந்த புத்தகங்களின் தாக்கம் அவரை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் துவங்கின என்பதை அறிய முடிகிறது.
மற்றவர்கள் என்னமும் செய்துவிட்டுப் போகட்டும். உண்மை தேவனின் ரட்சிப்பை கிறிஸ்து வழியே அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பது தனது அடிப்படை கடமை அல்லவா என்கிற கேள்வி அவருக்குள் தீவிரமாக எழுந்தது.
தனது பணி என்று ரேனியஸ் கருதியதை அவரது குடும்பத்தினரால் புரிந்து கொள்ள முடையவில்லை. ஆனால் அவரது பெரியப்பாவிற்குள் ஒரு நண்பன், ஒரு நல் ஆலோசகன் இருப்பதை ரேனியஸ் உணர்ந்தார். ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும், விரைவில் தேவ சித்தத்திற்கு மகிழ்ச்சியுடனும் , மனமுவந்தும் அர்ப்பணிக்க குடும்பத்தினர் இணங்கினர்.
பெரியப்பாவும் ரேனியஸும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்த போதிலும், தங்களுடைய விருப்பங்களையும் , உலக பிரகாரமான ஆர்வங்களையும், விட்டு விட்டு தெளிவாக உணரப்பட்ட தேவ வழிநடத்துதலை மட்டும் பின்பற்றுவது என முடிவெடுத்தனர்.
இதன் பின் அநேக ஆண்டுகள் அவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. வயோதிகம் காரணமாக பெரியப்பாவின் கண்பார்வை மங்கி, கைகள் நடுங்கத் துவங்கியபோதும் , அவர் தன்னுடன் இருந்தவர்களுக்கு கடித சாராம்சத்தைச் சொல்லி எழுதவைத்து, நடுங்கும் தன் கரங்களால் கையெழுத்தை மட்டும் போட்டு ரேனியஸிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
ரேனியஸ் கடவுளுடைய ஊழியத்திற்கு தன்னை 1807 டிசம்பர் 7ஆம் தேதி ஒப்புக் கொடுத்ததை மூன்று ஆண்டுகளுக்கு பின் அவர் எழுதிய கீழே உள்ள நாட்குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.
டிசம்பர் 7, 1810
எனக்குள் விழிப்புணர்வு ஏற்பட்ட நாளின் வருடாந்திர நினைவு தினமாகிய இந்த நாளில் நான் என்னை அவருக்கு மறுபடியும் அர்ப்பணிப்புச் செய்கிறேன். இன்றைய தினத்தை நான் அமைதியான தியானத்தில் கழித்தேன். கடவுளுக்கு போதுமான அளவு நன்றி உள்ளவனாக நான் இருப்பதாக உணர முடியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக