ஜான் அவர்களின் துயர்மிகு கடைசி நாட்களை எண்ணி உறக்கம் தொலைத்தவன் ஆனேன். ஏன் இந்த பாடுகள்? இந்த பாடுகளின் பயணத்தில் இந்த மனிதன் விட்டுச் சென்றது என்ன? போன்ற கேள்விகள் என்னை தரங்கபாடி கடலின் இரைச்சலின் இடையே அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து தேடுகிறேன்... காயத்திற்கு மருந்திடுவது போல சில பதிவுகள், ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி, தென்படுகின்றன....
ஜெர்மனியில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. எழுதியவர் ஜோஹன் ரெய்ன்ஹோல்ட் ஃபார்ஸ்டர் (Johann Reinhold Forster). இவர் ஒரு இறையியலாளர் மற்றும் அறிவியலாளர். கடிதத்தின் சாராம்சம் இது தான்- "விஷப் பாம்புகளின் கடிக்கு செலுத்தப்படும் விஷ முறிவு மருந்துகளின் மூலப்பொருட்களை கண்டு பிடிக்க இயலாதா? இந்த விஷ முறிவு எப்பொழுதும் பயனளிக்கிறதா?" இந்த கடிதம் அருட்திரு. ஜான் அவர்களுக்கு எழுதப்படுகிறது. இனி அவரின் பதில்- "மிஷனரி ஸ்வார்ட்ஸின் முந்தைய ஊழியர் 'சாமுவேல்' நாகப்பாம்பு (Brillen Schlange)மற்றும் வெறிநாய் கடிக்கான மருத்துவ செய்முறையை வைத்திருந்தார். ஸ்வார்ட்ஸ் முன்னிலையில், அவர் [சாமுவேல்] பலரைக் குணப்படுத்தி இருக்கிறார். அவரது சில குணப்படுத்தல்கள் கவனத்தை ஈர்த்து, அவருக்கு புகழ் சேர்த்தன. அரைப்பணம் விலையிலான மாத்திரைகளை அவரிடம் எல்லோரும் வாங்கினார்கள். அவை ஒரு பட்டாணியின் வடிவத்தில் , கருத்த நிறத்தில் இருந்தன. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பார். அதன் மூலப்பொருட்களை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். மெட்ராஸ் அரசாங்கம் அவரை மெட்ராஸ் அனுப்பி வைத்து அந்த ரகசியத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளிப்படுத்த வைக்கும் படியும் அதற்கு தக்க சன்மானம் அளிப்பதாகவும் ஷ்வார்ட்ஸுக்கு வேண்டுகோள் வைத்தது. அது நிறைவேறவும் செய்தது. நான் (ஜான்) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெட்றாஸில் இருந்து திரும்பும் போது அவரை சந்தித்தேன். அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு 200 நட்சத்திர- பக்கோடாக்கள் அவருக்கு கிடைத்தது. மெட்ராஸ் கூரியரிலும் இது வெளிவந்தது."
1792 இல் நடந்த இந்த கடித போக்குவரத்து அறிவியல் துறையில் எப்படிப்பட்ட நபர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார், எவ்வளவு ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் அறிவியல் பணியை செய்தார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. மேலே சொல்லப்பட்டுள்ள "தாஞ்சாவூர் மாத்திரைகள் (Tanjore Pills) குறித்து பின் குறிப்பில் விரிவாக சொல்லியிருக்கிறேன்.
மகாராசன் வேதமாணிக்கம் திருவிதாங்கூரின் முதல் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம் வேரூன்றியதில் இவரது பங்களிப்பு மிகப் பெரியது. புதிதாக கிறிஸ்தவம் தழுவிய அவர் ஜான் அவர்களின் ஊழியம் குறித்து அறிந்து கொள்ள தரங்கம்பாடி சென்றதை ஒரு வலைப்பூ பதிவில் காணமுடிந்தது. . "பைபிளின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றிய சில அடிப்படை அறிவைப் பெற்ற பிறகு, வேதமாணிக்கம் தரங்கம்பாடி மிஷனுக்குச் சென்று தரங்கம்பாடி மிஷனின் தலைவரான டாக்டர் ஜானைப் பார்க்க விரும்பினார், அப்போது அவர் தரங்கம்பாடி அருகே பொறையாரில் வசித்து வந்தார். வேதமாணிக்கம் டாக்டர். ஜான் அவர்களை சந்தித்து தரங்கம்பாடி மிஷன் பிரஸ் பணி செய்யும் விதம், பெரிய தேவாலயம் , பள்ளிகள், அச்சக அலுவலகம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட தேவாலயம் சார்ந்த நிறுவனங்களின் செயல்பாட்டைக் கவனிக்கும் பாக்கியத்தை பெற்றார். . பின்னர் வேதமாணிக்கம் தஞ்சை திரும்பினார்."
2005 ஆம் ஆண்டு தானேயில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் பேசிய டாக்டர் விஜய் பெடேகர் என்பவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் மிக முக்கியமாக ஜான் உள்ளிட்ட மிஷினரிகள் டாக்டர் பட்டம் பெற்ற தகவல் குறிப்பிடத்தகுந்தது. "சி.எஸ். ஜான் மீனவர்களின் உதவியுடன் உள்ளூர் பிராந்தியத்தின் பல வகையான மீன்களைச் சேகரித்தார், தொழில்முறை இந்திய ஓவியர்களால் அவற்றை வரையச் செய்தார். சுமார் 50 இனங்களை ஜாடிகளில் பாதுகாத்து பெர்லினுக்கு பேராசிரியர் மார்கஸ் எலியேசர் ப்ளாச்சிற்கு (Professor Marcus Eliezer Bloch) அனுப்பினார். 1793 ஆம் ஆண்டில், ப்ளாச் மீன்களின் இயற்கை வரலாறு குறித்த தனது பன்னிரண்டு தொகுதிப் படைப்பை வெளியிட்டார். ப்ளாச் தனக்கு உதவிய மிஷனரிகளை கௌரவித்தார், "அந்தியாஸ் ஜானி" (Anthias Johnii) "அயோனியஸ் கருட்டா" (Iohnius Carutta) மற்றும் "அயோனியஸ் அனியஸ்" (Iohnius Aneus) என சில மீன் இனங்களுக்கு ஜான் உடைய பெயரிடப்பட்டது. "ஸ்கொம்பர் ரோட்லரி" (Scomber Rottleri) என்ற இனம் அவரது சக ஊழியர் ராட்லருக்கு அர்ப்பணிக்கப்பட்டது,"ஸ்காம்பர் க்ளீனி" (Scomber Kleinii) மிஷனரி மருத்துவர் க்ளீனுக்கு (Klein) அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மீன்களின் பெயர்கள் லத்தீன் என்றாலும் இவை இந்திய மீன்கள் என்பது வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள்.""கிறிஸ்டியன் சாமுவேல் ஜான் (1747-1813) மற்றும் ஜோஹன் பீட்டர் ரோட்லர் (1749-1836) ஆகியோர் இந்திய மருத்துவ தாவரங்களில் அதிக ஆர்வம் காட்டினர். 1834-1841 வரை நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட “A Dictionary of the Tamil and English Language" " என்ற மாபெரும் படைப்பிற்காக அறியப்பட்ட ராட்லர், சுமார் 60 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். இவர் அப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட செடிகளை சேகரித்து வைத்திருந்தார்.ஜான், க்ளீன் மற்றும் ராட்லர் ஆகிய மூவருக்கும் புகழ்பெற்ற German Leopoldina Academy of Researchers. எனும் அமைப்பு இயற்கை வரலாற்றில் அவர்களின் களப்பணிக்காக முனைவர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது.க்ளீன் மருத்துவ மூலிகைகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் பல மாதிரிகளை சேகரித்து ஜெர்மனிக்கு பல்வேறு அறிவியல் சங்கங்களுக்கு அனுப்பினார்".
அறிவியலைப் போலவே, என் பார்வையில், தமிழ் சமூக வரலாற்றிற்கும் அருட்திரு. ஜான் பெரிய பங்களிப்பை செய்துள்ளார். இன்னும் அறியப்படாத அந்த பக்கங்கள் புரட்டப்படும் போது அது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம். தானியேல் பிள்ளை- இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர். அன்றைய மொழியில் சொன்னால் துபாஷி. "தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் கவர்னர் பீட்டர் ஹெர்மன் அபெஸ்டியின் இந்திய துபாஷி தானியேல் பிள்ளை (Daniel Pulley 1740-1802) . இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது நீண்டகால நம்பிக்கையாளரும், நண்பருமான ஜானிடம் தனது வாழ்க்கையின் சூழ்நிலைகளை விவரிக்கிறார். ஜான் இந்த கதையை படியெடுத்து இது 'மிகவும் குறிப்பிடத்தக்க ' சுயசரிதைகளில் ஒன்றாகும் என்ற குறிப்புடன் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். தனது முழு கதையையும் சொல்லி முடிப்பதற்கு முன்பதாகவே தானியேல் பிள்ளை இறந்து விடுகிறார். இருப்பினும் C.S. ஜான் எழுதிய அவரது நினைவுகள், இந்து மத சூழலில் செதுக்கப்பட்ட, ஒரு மதம் மாறிய இந்திய கிறிஸ்தவன் தனது விசுவாசத்தையும், தார்மீக போதனைகளையும் கையாண்ட விதம் குறித்து, ஈர்க்கக்கூடிய சாட்சியாக அமைகிறது. ஒரு தமிழர் கிறிஸ்தவராக தானியேல் பிள்ளை ஒரு மிஷன் பள்ளியில் பயின்றார். சில காலம் மிஷனில் பணியாற்றினார். அவர் தரங்கம்பாடியில் டேனிஷ் ஆளுநரின் சேவையில் நியமிக்கப்பட்ட பிறகும், மதத்திலிருந்து அரசியல் துறைக்கு மாறிய பின்னரும், மிஷனுடன் தனது நல்ல தொடர்புகளைப் பேணினார். ஒரு தமிழனாக, கிறிஸ்தவனாக, உள்ளூர் நீதிமன்றத்தின் உறுப்பினராக, டேனிஷ் ஆளுநரின் ஆலோசகராக, தேவாலயக் காப்பாளராக, தென்னிந்தியாவின் சிறிய நகரமான தரங்கம்பாடி நகரின் வளமான குடிமகனாக தானியேல் பிள்ளை பல்வேறு அடையாளங்களை கொண்டவர். அவற்றில் சில ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை. அவர் ஜானிடம் தனது கதையைச் சொல்லும் போது, தனது தனிப்பட்ட சண்டைகள், உள்மன போராட்டங்கள் மற்றும் சந்தேகங்களை எல்லா உண்மையோடும் வெளிப்படுத்தி உள்ளார். இந்த கதை தமிழில் விரிவாக விரைவில் வரும் என அவருக்குள் நம்புகிறேன்.
பின்குறிப்பு-1
வெறிநாய்கடி, பாம்புக்கடி மருந்து
டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை' என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கி வந்தது 1788 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைகாலுக்கு நன்கு பயன் தருகிறது என்று சென்னை மாநில கவர்னர் Sir Archibad Campbell, ராணுவ மருத்துவக் குழுத் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார். சென்னை மாகாணத்தின் முதல் ஆங்கில வார இதழான மெட்ராஸ் கூரியரில் இச்செய்தி வெளியாகியுள்ளது. இநத மாத்திரைகளை வேலூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் William Duffin பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானதை, தன் கடிதம் மூலம் ராணுவ மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்திருக்கிறார். (ஆதாரம்: Dr. Duffin Minute to the Hospital Board 17.11.1788, பக்கம் 238-41) தஞ்சாவூர் மாத்திரை என்ற (Tanjore Pills) சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது (ஆதாரம்: Current science vol.16, No. 12, 25.06.2014). ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ. 6,72,000. பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையைப் பரம்பரை வைத்தியர் விளக்கினார். இதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்குக் காரணமாகிவிட்டது
250 வருட காத்திருப்பு
தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் வந்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பாதிரியார் கிறிஸ்டியன் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களைச் சென்றடையாமல் காத்திருக்கிறது.
(உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள், இந்து தமிழ் திசை, 16 Apr, 2016 டாக்டர் ஜெ.ஸ்ரீராம்)
உதவிய பதிவுகள்
1. The arsenic and mercury-containing Tanjore pills used in treating Snake bites in the 18th century Madras Presidency, Ramya Raman, Anantanarayanan Raman and P. Ram Manoha
2. வலைப்பூ- Milestones of Kanyakumari
3. Dr. Vijay Bedekar's Speech- Seminar on Indian Contribution to World Civilization , 24th December 2005