அவர் பெயர் ரவுஸ் பீட்டர் (Rous Peter). பிறப்பால் ஆங்கிலேயர். பாசக்கார மதுரைக்காரர்கள் அவருக்கு இட்ட பெயர் பீட்டர் பாண்டியன். யார் இந்த பீட்டர் பாண்டியன் என அறிய நீங்கள் 200 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். ரவுஸ் பீட்டர் 1785 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஹார்லி என்ற இடத்தில பிறந்தவர். 1801 ஆம் ஆண்டு இந்தியா வந்து புனித ஜார்ஜ் கோட்டையில் எழுத்தராக சேர்ந்தார். படிப்படியான பயணத்திற்குப் பின் 1812 முதல் 1828 வரை மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். அந்த காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் மாவட்ட ஆட்சியரே திருக்கோவில்களின் தக்கார்களாகவும் இருந்து வந்தனர். இந்த வகையில் ரவுஸ் பீட்டர் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் மற்றும் அழகர் கோவில் தக்காராகவும் இருந்து வந்துள்ளார். இந்த தக்கார் பணியை அவர் மிகவும் பயபக்தியுடன் மேற்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
கன்னிவாடி, பெரியகுளம், போடி நாயக்கனூர் பகுதிகளில் காட்டு யானைகள் மக்களை தொந்தரவு செய்த போது அவற்றை வேட்டையாடி மக்களால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். மதுரை மக்கள் பாண்டிய மன்னனே திரும்ப வந்து ஆள்வதாக கருதினர். அவரின் வள்ளல் தன்மையும் வீரத்தையும் பாராட்டி நாட்டுப்புறப் பாடல்கள் வழங்கி வந்திருக்கின்றன. பீட்டர் பாண்டியன் அம்மானை என்ற நூலும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நூல் நமக்கு கிடைக்கவில்லை.
ஒரு மழை நாள் இரவில் உறங்கிக் கொண்டிருந்த அவரை மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், அவ்வாறு அழைத்துச் சென்ற சற்றைக்கெல்லாம் அவரது வசிப்பிடம் இடிந்ததாகவும், அச்சிறுமி கோயிலுக்குள் சென்று புகுந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு சிறுமி வடிவில் வந்து தம்மைக் காப்பாற்றியது மீனாட்சி அம்மனே என்று கருதிய பீட்டர், மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதம் தாங்கிகள்) அம்மனுக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில் அம்மன் மாசி வீதிகளில் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வரும்போது இந்த அங்கவடிகளே அணியப்படுகின்றன.
பீட்டர் பாண்டியன் தனது கொடை மற்றும் இரக்க உணர்வால் அரசு கருவூலத்தில் இருந்து தான் எடுக்க வேண்டியதற்கும் அதிகமான பணத்தை எடுத்துள்ளார். இவரது இளகிய மனம் கண்ட இவருக்கு கீழ் பணியாற்றியவர்களும் தவறுகள் புரிந்துள்ளனர். 1819 இல் ஒரு கடிதத்தை எழுதி மூடி முத்திரை இடுகிறார். தனது மரணம் வரை அந்த கடிதம் பிரிக்கப்படக்கூடாது என்று குறிப்பு எழுதுகிறார். அதில் தனது கவனக் குறைவை ஒத்துக்கொண்ட அவர், வேறு நேர்மையற்ற நோக்கம் ஏதும் இல்லை என்பதை குறிப்பிடுகிறார். பற்றாக்குறைகளை சரி செய்ய தன் சொத்துக்களை விற்று எடுத்துக்கொள்ள சொல்கிறார். இந்த கடிதம் எழுதி ஒன்பது ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 6, 1828 இல் தற்கொலை செய்து கொள்கிறார்.
நீதி துறையால் அவரது கடிதம் கைப்பற்றப்படுகிறது. கணக்குகள் தணிக்கை செய்யப்படுகின்றன. ரூ 1,75,000/- அவரால் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளப்பட்டது தெரிய வருகிறது. அதில் அவர் எடுத்து எவ்வளவு, அவர் கீழ் பணியாற்றியவர்கள் கொள்ளை அடித்தது எவ்வளவு என்பது தெரியவில்லை. ஆனால், மேல் விசாரணைக்குப் பின் 5 பேர் சிறை தண்டனை பெறுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மதுரை மாவட்ட கெஸட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஐயா தொ. பரமசிவம் எழுதிய "அறியப்படாத தமிழகம்" நூலில் குறிப்பிடுகிறார்.
இவரது உடல் உடல் மதுரையில் உள்ள தூய ஜார்ஜ் ஆலய வளாகத்தில் புதைக்கப்பட்டது. இவர் அரசு பணத்தை கொள்ளை அடித்தாரோ , இல்லையோ, மக்கள் மனதை கொள்ளை அடித்தார் என்பது மறுக்க இயலாத உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக