வெள்ளி, 26 டிசம்பர், 2025

மௌனத்தின் ஒளி - என்னுரை

 


ஜோசப் டேனியல் ஜெனிக்கே (1759–1800)

(தமிழில் மிஷனரி வரலாறுகளை மீட்டெடுக்கும் ஒரு எளிய முயற்சி)

தமிழ் கிறிஸ்தவ வரலாறு, நீண்ட காலமாகத் தமிழில் முழுமையாக ஆவணப்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பெரும் பகுதி இன்னமும்  மொழிபெயர்க்கப்படாத நினைவடுக்குகளாக, சிலரின் மனங்களிலும், சில நூலகங்களிலும்,  ஆவணக் காப்பகங்களிலும் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

18–19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பணியாற்றிய ஆயிரங்களைத் தாண்டும் மிஷனரிகள், அவர்களுடன் தோள் கொடுத்து உழைத்த உள்ளூர் ஊழியர்கள், அவர்கள் சந்தித்த ஆன்மீகப் போராட்டங்கள், அரசியல் சவால்கள், தனிமனிதத் தியாகங்கள்—இவை அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே உறைந்து போயுள்ளன; தமிழில் அல்ல.

ஒரு ஆய்வாளனாகவும், ஆர்வலனாகவும் இந்த வரலாற்றைத் தேடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒரு நூலுக்காக ஊர் ஊராக அலைந்து, பல நாட்கள் காத்திருந்து, பக்கங்களை நகலெடுக்க வேண்டியிருந்தது. இன்றோ, அந்த நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில், கணினித் திரையில் கண்முன் குவிந்து கிடக்கின்றன. ஆனால், 'மொழி ' இன்னும் ஒரு பெரும் சவாலாகவே  இருந்து வருகிறது . இந்த நூல், அந்தத் தடையை  அகற்ற முயலும்  ஒரு சிறிய முயற்சி.

நமது மிஷன் வரலாறு பெரும்பாலும் 'பெரிய பெயர்களின்' வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது. சீகன்பால்க், சுவார்ட்ஸ், கால்டுவெல், போப்—இந்த ஒளிரும் பெயர்களின் வெளிச்சத்தில்தான் நமது வரலாறு வாசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பெரும் வெளிச்சத்தின் நிழல்களில், பலர் அமைதியாக உழைத்து மறைந்துள்ளனர். அவர்களுள் ஒருவர்—ஜோசப் டேனியல் ஜெனிக்கே.

இது பெரிதும் அறியப்பட்ட பெயரோ, பரவலாகப் பேசப்பட்ட சரித்திரமோ அல்ல. ஜெனிக்கே ஒரு காலத்தைப் புரட்டிப் போட்டவரும் அல்ல; ஆனால், அவர் ஒரு பாலம்.

சுவார்ட்ஸ் போன்ற மாபெரும் மிஷனரி மரபுக்கும், முளைவிட்டு வளர்ந்த உள்ளூர் சபையின் முதிர்ச்சிக்கும் இடையிலான ஒரு உறுதியான, அமைதியான பாலம். தமிழக மிஷன் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தைச் சத்தமில்லாமல் கட்டமைத்தவர்.

இந்த நூலில், அவரை நாம் மிகைப்படுத்திக் கொண்டாடவில்லை; அதே நேரத்தில், ஒரு பக்கக் குறிப்பாகப் புறந்தள்ளவுமில்லை. அவருடைய சாட்சி நிறைந்த வாழ்வை ஊடுருவிப் பார்க்க முயன்றிருக்கிறோம்.

ஒரு மனிதன்— 

எப்படி அழைப்பில் வளர்கிறான்? 

எப்படிப் பொறுப்பை ஏற்கிறான்? 

எப்படித் தன் அதிகாரத்தைப் பிறருடன் பகிர்கிறான்? இறுதியாக, தன்னைத் தாண்டி அந்தப் பணியை எப்படி விட்டுச் செல்கிறான்? —என்பதையே இந்த நூல் மெல்லிய குரலில் உங்கள் முன் வைக்கிறது.

இது போதகர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் மட்டுமே எழுதப்பட்டதல்ல; இது, தன் வேர்களைத் தேடும் ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவனுக்குமானது.

வாருங்கள்... மௌனத்தில் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் குரல்களில் இருந்து ஒரு குரலை மீட்டெடுப்போம். இருள் கவிழ்ந்து கிடக்கும் வரலாற்றின் பெரும் பாதையில், ஒரு சிறு மெழுகுத் திரியை ஏற்றி வைப்போம்.

அன்புடன், 

ஜெபக்குமார்

கிறிஸ்து பிறப்பு திருநாள், 2025 

துபாய்.

மௌனத்தின் ஒளி - நெசவாளியின் மகன்

ஜோசப் டேனியல் ஜெனிக்கே (1759–1800)

   1. நெசவாளியின் மகன்

1759-ம் ஆண்டு, ஜூலை மாதம் 27-ம் தேதி. ஐரோப்பாவில் “ஏழாண்டுப் போர்” (Seven Years’ War) தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். பிரஷ்யா (Prussia) தேசத்தின் தலைநகரான பெர்லின் நகரில், ஒரு எளிய குடும்பத்தில் ஜோசப் டேனியல் ஜெனிக்கே பிறந்தார்.

அவருடைய தந்தை ஒரு  நெசவாளி. ஜெனிக்கேவின் குடும்பம் பூர்வீக ஜெர்மனியர்கள் அல்ல; அவர்கள் விசுவாசத்திற்காகத் தங்கள் நாட்டை விட்டு ஓடிவந்த அகதிகள். அவருடைய தந்தை சிலேசியா ( Silesia ) நாட்டிலுள்ள டெஷென் ( Teschen ) என்ற ஊரைச் சேர்ந்தவர். தாயாரின் பெற்றோரோ போஹேமியா (Bohemia ) தேசத்தைச் சேர்ந்தவர்கள்.

அக்காலத்தில் கத்தோலிக்கர்களின் உபத்திரவம் தாங்க முடியாமல், தங்கள் சீர்திருத்த விசுவாசத்தை ( Protestant Faith) காத்துக்கொள்வதற்காக, சொத்து சுகங்களை விட்டுவிட்டு, வெறும் கையோடு பிரஷ்யா தேசத்திற்கு ஓடிவந்தவர்கள் . பிரஷ்யாவின் அரசன் முதலாம் ஃப்ரெடரிக் வில்லியம்  போஹேமிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்.  அவர்கள் பெர்லினில் குடியேற அனுமதி பெற்றனர். அப்படிப்பட்ட “விசுவாசத் தியாகிகளின்” (Confessors of Christ) இரத்தம்தான் இளம் ஜெனிக்கேவின் நரம்புகளிலும் ஓடிக்கொண்டிருந்தது.

தாயின் ஜெபமும், யுத்த காலமும்

 ஜெனிக்கே சிறு குழந்தையாக இருந்தபோது, பெர்லின் நகரம் ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டது. எதிரிகள் நகருக்குள் புகுந்து சூறையாடினார்கள். இச்சம்பவத்தை ஜெனிக்கேவின் தாயார் அடிக்கடி தன் மகனுக்கு நினைவு கூறுவது வழக்கம்:

“மகனே, குண்டுகள் வெடிக்கும் சத்தமும், அலறல் சத்தமும் கேட்டபோது, நான் உன்னை என் மார்போடு அணைத்துக்கொண்டு மறைந்திருந்தேன். ‘ஆண்டவரே, இந்தக் குழந்தையைக் காப்பாற்றும். இவன் உமக்கு ஊழியம் செய்ய வேண்டும்’ என்று கண்ணீரோடு ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டார்; எங்களை அக்கினிக்குத் தப்புவித்தார்.”

இந்த வார்த்தைகள் சிறுவன் ஜெனிக்கேவின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவன் உலகத்தைப் புரிந்துகொள்ளும் முன்பே, அவன் வாழ்வு தாயின் ஜெபத்தால் சூழப்பட்டிருந்தது.

அழைப்பின் போராட்டம்

 1776-ம் ஆண்டு வரை, ஜெனிக்கே தன் தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழில் செய்து வந்தார். ஆனால், தறியில் ஓடும் நூலிழைகளுக்கு நடுவே, அவருக்குள் வேறு ஒரு இழை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.

தொடர்ந்து , டிரெஸ்டன்  நகரில் ஒரு அறப் பள்ளியில் (Charity School),   ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆண்டுக்கு 40 டாலர் சம்பளத்தில்!!. அந்நாட்களில்தான், “தேவ ஊழியத்திற்குச் செல்ல வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குள் மெதுவாகத் துளிர்த்தது. ஆனால், தன் குடும்பத்தின் வறுமையும், தன் தகுதியின்மையையும் நினைத்து அவர் அஞ்சினார். “இது உண்மையான அழைப்பா? அல்லது என் சொந்த ஆசையா?” என்று தன்னைத்தானே சந்தேகித்தார், தயங்கினார். அவர் அடிக்கடி, “ஆண்டவரே, அதிகம் கொடுக்கப்பட்டவனிடத்தில் அதிகம் கேட்கப்படும் என்று நான் அறிவேன். நான் ஒரு அற்பமானவன். எனக்குத் திராணிக்கு மிஞ்சின சோதனையைக் கொடுக்காதேயும்,” என்று ஜெபிப்பார்.

இழப்புகளின் காலம்

 ஆனால், தேவ சித்தம் வேறாக இருந்தது. 1782-ம் ஆண்டு அக்டோபரில், பெர்லின் அரசாங்கப் பள்ளியில் (Royal Secondary School) சேர்வதற்கான வாய்ப்பு ஜெனிக்கேவுக்குக் கிடைத்தது. அதே மாதம், அக்டோபர் 25-ம் தேதி, தன் மகன் ஊழியத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் கண்ட சந்தோஷத்தோடு அவருடைய தாயார் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1784-ம் ஆண்டு மார்ச் மாதம், அவருடைய தகப்பனாரும் மரித்தார். 

ஹாலே பல்கலைக்கழகம்

 பெற்றோரை இழந்த ஜெனிக்கே, 1785-ம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு  ஒரு காலத்தில் கனம் சுவார்ட்ஸ், கெரிக்கே போன்ற மாபெரும் மிஷனரிகளை உருவாக்கிய   பிராங்கேயின் புகழ் பெற்ற ஆதரவற்றோர் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். 

மரணப் படுக்கையில் ஒரு பொருத்தனை

 1786-ம் ஆண்டு குளிர்காலம். ஜெனிக்கே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிரிக்கும் நிலை. மரணத்தருவாயில்,  உள்ளம் உருகி தேவனிடம் ஒரு உடன்படிக்கை செய்தார்:

“ஆண்டவரே இயேசுவே, உமக்கு சித்தமானால், நான் சமாதானத்தோடு மரிப்பேன். ஆனால், நீர் என்னை அழைத்த ஓட்டத்தை முடிக்குமுன்னே நான் மரிக்கலாமா? உமக்குச் சித்தமானால், உமது பணிக்கு என்னைத் தகுதிப்படுத்தும். நீர் எங்கே வழிநடத்தினாலும், அது எப்பேர்ப்பட்ட இடமானாலும், நான் பின்செல்வேன்.”

அற்புதம் நடந்தது. அந்த ஜெபத்திற்குப் பின், அவர் ஆச்சரியமான விதத்தில் சுகமடைந்தார். இனி, தன் வாழ்வு தனக்கானதல்ல—தேவனுக்கானது என்று முடிவு செய்தார்.

மிஷனரி அழைப்பு

 சுகமடைந்த சில மாதங்களில், டாக்டர் ஷூல்ஸ் (Dr. Schulze) மூலமாக ஒரு அழைப்பு வந்தது: “இந்தியாவில் பணிபுரிய மிஷனரிகள் தேவை. நீ போகிறாயா?”

மரணத்திலிருந்து மீண்ட ஜெனிக்கேவுக்கு மறுபேச்சு ஏது? “இதோ, அடியேன் இருக்கிறேன்,” என்றார்.

1787-ம் ஆண்டு, அக்டோபர் 21-ம் தேதி, வெர்னிகரோட் (Wernigerode) ஊரில், லூத்தரன் முறையில் அவருக்குக் குருப்பட்டம் அளிக்கப்பட்டது. ஒரு எளிய நெசவாளியின் மகன், இப்போது “அருட்திரு ஜோசப் டேனியல் ஜெனிக்கே” ஆனார். அடுத்த மாதம், தன் தாய்நாட்டை , உற்றார் உறவினர்களை விட்டு, என்றுமே பார்த்திராத இந்தியா என்ற தேசத்தை நோக்கி, அவர் லண்டன் மாநகருக்குப் பயணமானார்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

கல்லறை எண்-28

                                                       கல்லறை எண்-28

                                        

💥 மதுரை மத்திய சிறை அருகே இருக்கிறது  கிரம்மர்புரம்.

💥 இந்த பெயருக்கு காரணமாக அமைந்தவர் Carl Friedrick Kremmer.

💥 மதுரையின் மேசியா  (Messiah of Madurai) என புகழப்பட்டவர்.

💥 பிறப்பு- 8, செப்டம்பர், 1817 - ஜெர்மனி.

💥 1847 முதல் 1887 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழியம் செய்தவர்.

💥 மரணம்- 24, ஜீலை-1887, தரங்கம்பாடி.

💥 தரங்கம்பாடி புதிய எருசலேம் சபை வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள இவரது  கல்லறை எண் 28.

💥 எனக்குத் தெரிந்த வரையில் இந்த வளாகத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரே கல்லறை இது தான்.

💥 கிறிஸ்து எனக்குச் சீவன். சாவு எனக்கு ஆதாயம் என்கிற எழுத்துக்களின் மேல் இப்பொழுது வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.