ஜோசப் டேனியல் ஜெனிக்கே (1759–1800)
1. நெசவாளியின் மகன்
1759-ம் ஆண்டு, ஜூலை மாதம் 27-ம் தேதி. ஐரோப்பாவில் “ஏழாண்டுப் போர்” (Seven Years’ War) தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். பிரஷ்யா (Prussia) தேசத்தின் தலைநகரான பெர்லின் நகரில், ஒரு எளிய குடும்பத்தில் ஜோசப் டேனியல் ஜெனிக்கே பிறந்தார்.
அவருடைய தந்தை ஒரு நெசவாளி. ஜெனிக்கேவின் குடும்பம் பூர்வீக ஜெர்மனியர்கள் அல்ல; அவர்கள் விசுவாசத்திற்காகத் தங்கள் நாட்டை விட்டு ஓடிவந்த அகதிகள். அவருடைய தந்தை சிலேசியா ( Silesia ) நாட்டிலுள்ள டெஷென் ( Teschen ) என்ற ஊரைச் சேர்ந்தவர். தாயாரின் பெற்றோரோ போஹேமியா (Bohemia ) தேசத்தைச் சேர்ந்தவர்கள்.
அக்காலத்தில் கத்தோலிக்கர்களின் உபத்திரவம் தாங்க முடியாமல், தங்கள் சீர்திருத்த விசுவாசத்தை ( Protestant Faith) காத்துக்கொள்வதற்காக, சொத்து சுகங்களை விட்டுவிட்டு, வெறும் கையோடு பிரஷ்யா தேசத்திற்கு ஓடிவந்தவர்கள் . பிரஷ்யாவின் அரசன் முதலாம் ஃப்ரெடரிக் வில்லியம் போஹேமிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர்கள் பெர்லினில் குடியேற அனுமதி பெற்றனர். அப்படிப்பட்ட “விசுவாசத் தியாகிகளின்” (Confessors of Christ) இரத்தம்தான் இளம் ஜெனிக்கேவின் நரம்புகளிலும் ஓடிக்கொண்டிருந்தது.
தாயின் ஜெபமும், யுத்த காலமும்
ஜெனிக்கே சிறு குழந்தையாக இருந்தபோது, பெர்லின் நகரம் ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டது. எதிரிகள் நகருக்குள் புகுந்து சூறையாடினார்கள். இச்சம்பவத்தை ஜெனிக்கேவின் தாயார் அடிக்கடி தன் மகனுக்கு நினைவு கூறுவது வழக்கம்:
“மகனே, குண்டுகள் வெடிக்கும் சத்தமும், அலறல் சத்தமும் கேட்டபோது, நான் உன்னை என் மார்போடு அணைத்துக்கொண்டு மறைந்திருந்தேன். ‘ஆண்டவரே, இந்தக் குழந்தையைக் காப்பாற்றும். இவன் உமக்கு ஊழியம் செய்ய வேண்டும்’ என்று கண்ணீரோடு ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டார்; எங்களை அக்கினிக்குத் தப்புவித்தார்.”
இந்த வார்த்தைகள் சிறுவன் ஜெனிக்கேவின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவன் உலகத்தைப் புரிந்துகொள்ளும் முன்பே, அவன் வாழ்வு தாயின் ஜெபத்தால் சூழப்பட்டிருந்தது.
அழைப்பின் போராட்டம்
1776-ம் ஆண்டு வரை, ஜெனிக்கே தன் தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழில் செய்து வந்தார். ஆனால், தறியில் ஓடும் நூலிழைகளுக்கு நடுவே, அவருக்குள் வேறு ஒரு இழை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
தொடர்ந்து , டிரெஸ்டன் நகரில் ஒரு அறப் பள்ளியில் (Charity School), ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆண்டுக்கு 40 டாலர் சம்பளத்தில்!!. அந்நாட்களில்தான், “தேவ ஊழியத்திற்குச் செல்ல வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குள் மெதுவாகத் துளிர்த்தது. ஆனால், தன் குடும்பத்தின் வறுமையும், தன் தகுதியின்மையையும் நினைத்து அவர் அஞ்சினார். “இது உண்மையான அழைப்பா? அல்லது என் சொந்த ஆசையா?” என்று தன்னைத்தானே சந்தேகித்தார், தயங்கினார். அவர் அடிக்கடி, “ஆண்டவரே, அதிகம் கொடுக்கப்பட்டவனிடத்தில் அதிகம் கேட்கப்படும் என்று நான் அறிவேன். நான் ஒரு அற்பமானவன். எனக்குத் திராணிக்கு மிஞ்சின சோதனையைக் கொடுக்காதேயும்,” என்று ஜெபிப்பார்.
இழப்புகளின் காலம்
ஆனால், தேவ சித்தம் வேறாக இருந்தது. 1782-ம் ஆண்டு அக்டோபரில், பெர்லின் அரசாங்கப் பள்ளியில் (Royal Secondary School) சேர்வதற்கான வாய்ப்பு ஜெனிக்கேவுக்குக் கிடைத்தது. அதே மாதம், அக்டோபர் 25-ம் தேதி, தன் மகன் ஊழியத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் கண்ட சந்தோஷத்தோடு அவருடைய தாயார் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1784-ம் ஆண்டு மார்ச் மாதம், அவருடைய தகப்பனாரும் மரித்தார்.
ஹாலே பல்கலைக்கழகம்
பெற்றோரை இழந்த ஜெனிக்கே, 1785-ம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு ஒரு காலத்தில் கனம் சுவார்ட்ஸ், கெரிக்கே போன்ற மாபெரும் மிஷனரிகளை உருவாக்கிய பிராங்கேயின் புகழ் பெற்ற ஆதரவற்றோர் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
மரணப் படுக்கையில் ஒரு பொருத்தனை
1786-ம் ஆண்டு குளிர்காலம். ஜெனிக்கே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிரிக்கும் நிலை. மரணத்தருவாயில், உள்ளம் உருகி தேவனிடம் ஒரு உடன்படிக்கை செய்தார்:
“ஆண்டவரே இயேசுவே, உமக்கு சித்தமானால், நான் சமாதானத்தோடு மரிப்பேன். ஆனால், நீர் என்னை அழைத்த ஓட்டத்தை முடிக்குமுன்னே நான் மரிக்கலாமா? உமக்குச் சித்தமானால், உமது பணிக்கு என்னைத் தகுதிப்படுத்தும். நீர் எங்கே வழிநடத்தினாலும், அது எப்பேர்ப்பட்ட இடமானாலும், நான் பின்செல்வேன்.”
அற்புதம் நடந்தது. அந்த ஜெபத்திற்குப் பின், அவர் ஆச்சரியமான விதத்தில் சுகமடைந்தார். இனி, தன் வாழ்வு தனக்கானதல்ல—தேவனுக்கானது என்று முடிவு செய்தார்.
மிஷனரி அழைப்பு
சுகமடைந்த சில மாதங்களில், டாக்டர் ஷூல்ஸ் (Dr. Schulze) மூலமாக ஒரு அழைப்பு வந்தது: “இந்தியாவில் பணிபுரிய மிஷனரிகள் தேவை. நீ போகிறாயா?”
மரணத்திலிருந்து மீண்ட ஜெனிக்கேவுக்கு மறுபேச்சு ஏது? “இதோ, அடியேன் இருக்கிறேன்,” என்றார்.
1787-ம் ஆண்டு, அக்டோபர் 21-ம் தேதி, வெர்னிகரோட் (Wernigerode) ஊரில், லூத்தரன் முறையில் அவருக்குக் குருப்பட்டம் அளிக்கப்பட்டது. ஒரு எளிய நெசவாளியின் மகன், இப்போது “அருட்திரு ஜோசப் டேனியல் ஜெனிக்கே” ஆனார். அடுத்த மாதம், தன் தாய்நாட்டை , உற்றார் உறவினர்களை விட்டு, என்றுமே பார்த்திராத இந்தியா என்ற தேசத்தை நோக்கி, அவர் லண்டன் மாநகருக்குப் பயணமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக